தமிழகத்தில் கூடுதலாக தனியார் மினி பேருந்துகளை இயக்க அனுமதிப்பது அரசுப் போக்குவரத்துக் கழகங்களை சீர்குலைக்க வழிவகுக்கும் – போக்குவரத்துத்துறையை படிப்படியாக தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும். சென்னை புறநகர் பகுதிகளான திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி, அம்பத்தூர் உட்பட தமிழகம் முழுவதும் தனியார் மினி பேருந்துகளை இயக்குவது தொடர்பான தமிழக அரசின் புதிய வரைவுத்திட்ட அறிக்கையும், அது தொடர்பான இன்று நடைபெற்ற கருத்துக் கேட்பு கூட்டமும் அரசுப் போக்குவரத்துத்துறையை தனியார்மயமாக்கும் வகையிலேயே அமைந்துள்ளன. தமிழகத்தில் லாப நோக்கத்தை மட்டுமே குறிக்கோளாய் கொண்டு விதிமுறைகளை மீறி இயங்கி வரும் தனியார் பேருந்துகளை கட்டுப்படுத்த முடியாத நிலையில், தற்போது சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கூடுதல் மினி பேருந்துகளை இயக்கும் அனுமதியை தனியாரிடம் வழங்குவது மேலும் மோசமான விளைவையே ஏற்படுத்தும் என போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன. ஏற்கனவே அரசுப் பேருந்துகளின் வழித்தடங்கள் இருக்கும் இடங்கள் உட்பட 25 கிலோ மீட்டர் தூரம் வரை தனியார் மினி பேருந்துகளை இயக்க அனுமதிப்பது, சென்னை போன்ற பெருநகரங்களில் ஆட்டோ (Auto), ஷேர் ஆட்டோ (Share Auto), மேக்சி கேப் (Maxi Cab ) போன்ற வாகனங்களை இயக்கி வரும் தொழிலாளார்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் அமைந்துள்ளது. எனவே, தனியார் மினி பேருந்துகளுக்கு அனுமதி வழங்கி போக்குவரத்துத்துறையை படிப்படியாக தனியார் மயமாக்கும் நடவடிக்கையை உடனடியாக கைவிடுவதோடு, புதிய பேருந்துகளை கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு தேவையான போக்குவரத்து வசதியை அரசுப் போக்குவரத்துக் கழகம் மூலமாகவே ஏற்படுத்தி தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

மின் கட்டண உயர்வை கண்டித்து போராட்டம் நடத்திய பாட்டாளி மக்கள் கட்சியினர் மீது வழக்குப்பதிவு – திமுக அரசின் ஜனநாயக விரோதப் போக்கு கடும் கண்டத்திற்குரியது. தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றாண்டுகளில் மூன்றாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டண உயர்வைக் கண்டித்து சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே அறவழியில் போராட்டம் நடத்திய பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் திரு.அன்புமணி ராமதாஸ் அவர்கள் உட்பட அக்கட்சியினர் பலர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் நாள்தோறும் அரங்கேறும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை களையவோ, பள்ளி, கல்லூரி மாணவர்களின் எதிர்காலத்தை சிதைக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசு, ஜனநாயக முறையில் போராட்டம் நடத்திய பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் திரு.அன்புமணி ராமதாஸ் அவர்கள் உட்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் மருத்துவர் திரு.அன்புமணி ராமதாஸ் உட்பட அக்கட்சியினர் பலர் மீது பதியப்பட்டுள்ள வழக்கை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

கர்நாடக தொழில் நிறுவனங்களில் கன்னடர்களுக்கே முன்னுரிமை அளிக்கும் சட்ட மசோதாவிற்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் – தமிழக தொழில் நிறுவனங்களில் 75 சதவிகிதம் வேலைவாய்ப்பு தமிழர்களுக்கு வழங்கும் வகையில் சட்டம் இயற்றப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதி நிறைவேறுவது எப்போது ? கர்நாடக முதலமைச்சர் திரு.சித்தராமையா அவர்களின் தலைமையில் நடைபெற்ற அம்மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் கர்நாடகத்தில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களிலும் நிர்வாகப் பொறுப்புகளில் 50 சதவிகிதமும், நிர்வாகமற்ற பொறுப்புகளில் 75 சதவிகிதமும், குரூப் சி மற்றும் குரூப் டி பணிகளில் 100 சதவிகிதம் கன்னடர்களுக்கே ஒதுக்குவது தொடர்பான சட்ட மசோதாவை நிறைவேற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு திமுக வழங்கிய தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த ”தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் 75 விழுக்காடு வேலைவாய்ப்புகள் தமிழர்களுக்கே வழங்க சட்டம் கொண்டு வரப்படும்” என்ற வாக்குறுதி, ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகளை கடந்தும் நிறைவேற்றப்படாமல் இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தமிழகத்தில் அமைக்கப்படும் பன்னாட்டு மற்றும் வெளிமாநிலத் தொழிற்சாலைகள் மட்டுமின்றி உள்ளூர் தொழிற்சாலைகளிலும் தமிழர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதால் தமிழ்நாட்டில் பெருகிவரும் வேலையில்லாத் திண்டாட்டத்தை குறைக்க இது போன்ற சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இயங்கும் தனியார் தொழில் நிறுவனங்களில் அதிகளவில் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்யும் அதிகாரம் மாநில அரசிற்கு இருந்தும், அதனை செயல்படுத்துவதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசின் அலட்சியப் போக்கு தமிழக மக்களுக்கும், இளைஞர்களுக்கும் இழைக்கக் கூடிய மிகப்பெரிய துரோகமாகும். எனவே, தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டத்தை குறைக்கும் வகையிலும், திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையிலும் தமிழகத் தொழில் நிறுவனங்களில் 75 சதவிகிதம் வேலைவாய்ப்பு தமிழர்களுக்கே வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் உடனடியாக சட்டம் இயற்ற முன்வர வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

தமிழகத்தில் மீண்டும் மீண்டும் மின் கட்டண உயர்வு – நிர்வாகத் தோல்வியை மறைக்க பொதுமக்களின் மீது சுமையை ஏற்றும் திறனற்ற திமுக அரசின் செயல்பாடுகள் கடும் கண்டனத்திற்குரியது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு பொதுமக்களின் கடும் எதிர்ப்புகளை மீறி, கடந்த 2022 ஆம் ஆண்டு 30 சதவிகிதமும், 2023 ஆம் ஆண்டு 2.18 சதவிகிதமும் மின் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது நடப்பாண்டில் மீண்டும் 4.83 சதவிகிதம் அளவிற்கு மின்கட்டணத்தை உயர்த்தியிருக்கிறது. அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் போதே மின்கட்டணம் உயர்த்தப்படுவதாக வெளியான செய்திகளை மறுத்த திமுக அரசு, தேர்தலுக்கு பின்பு மின் கட்டணத்தை உயர்த்தி பொதுமக்களின் மீது கூடுதல் நிதிச் சுமையை ஏற்றியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக வழங்கிய தேர்தல் அறிக்கையில் 221-வதாக இடம்பெற்றிருக்கும் மாதம் தோறும் மின் கணக்கீடு என்ற வாக்குறுதியை நிறைவேற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசின் இந்த மின் கட்டண உயர்வு அறிவிப்பு, ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் விழி பிதுங்கி நிற்கும் ஏழை, எளிய மக்களுக்கு மீளவே முடியாத அளவிற்கு பேரிடியாக அமைந்துள்ளது. மின்சார நிலைக்கட்டணம் மற்றும் உச்ச நேர மின் கட்டண உயர்வால் பல்வேறு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஏற்கனவே மூடப்பட்ட நிலையில், தொடர்ந்து அதிகரிக்கப்பட்டுள்ள மின்கட்டணத்தால் மேலும் பல நிறுவனங்கள் மூடப்படும் சூழலுக்கு தள்ளப்பட்டிருப்பதாக தொழில் கூட்டமைப்பினர் வேதனை தெரிவிக்கின்றனர். எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, மின் கட்டணத்தை கடுமையாக உயர்த்தி ஏழை, எளிய மக்களின் வாழ்வை இருளில் மூழ்கச் செய்ததாக பழனிசாமி அரசாங்கத்தை விமர்சனம் செய்த திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், முதலமைச்சரான பின் அதே தவறை வருடந்தோறும் இழைத்து வருவது தமிழக மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம் ஆகும். எனவே, மின் நுகர்வோர்களுக்கு கடுமையான நிதிச்சுமையை ஏற்படுத்தும் மின்கட்டண உயர்வு தொடர்பான அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, மின்வாரியம் மூலம் மின் உற்பத்தியை பெருக்குவதற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

திரு.ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான விசாரணைக் கைதி என்கவுண்டரில் சுட்டுக்கொலை – காவல்துறையின் விசாரணை நேர்மையாகவும், நியாயமானதாகவும் நடைபெறுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் திரு.ஆம்ஸ்ட்ராங் அவர்களின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள விசாரணைக் கைதி திருவேங்கடம் என்பவர், சென்னை மாதவரம் அருகே தப்பியோட முயன்ற போது காவல்துறையினரால் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்தவர்கள் குற்றவாளிகள் அல்ல எனவும், உண்மையான குற்றவாளிகளை கண்டறிய வேண்டும் என அவரது குடும்பத்தினர் உட்பட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்திய நிலையில், தமிழக காவல்துறை அரங்கேற்றியிருக்கும் என்கவுண்டர் சம்பவம் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. கொலை நடந்த அன்றே தாமாக முன்வந்து காவல்துறையினரிடம் சரணடைந்த விசாரணைக் கைதி திருவேங்கடம், தப்பியோட முயன்றதன் காரணமாகவே சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக காவல்துறை விளக்கம் அளித்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி முன்பின் முரணாக அமைந்துள்ளது. எனவே, விசாரணைக் கைதி திருவேங்கடம் சுட்டுக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்வதோடு, திரு.ஆம்ஸ்ட்ராங் அவர்களின் கொலை வழக்கு நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

தமிழகத்திற்கான காவிரி நீரை வழங்க மறுக்கும் கர்நாடக அரசின் ஆணவப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது – இனியும் மவுனம் காக்காமல் உடனடியாக உச்சநீதிமன்றத்தை நாடி மாநிலத்தின் உரிமையையும், டெல்டா பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும். தமிழகத்திற்கு நாள்தோறும் ஒரு டி.எம்.சி வீதம் காவிரி நீரை வழங்க வேண்டும் என்ற காவிரி நீர் ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவை செயல்படுத்த மறுப்பதோடு, தமிழகத்திற்கான காவிரி நீரை வழங்க முடியாது என கர்நாடக மாநில முதலமைச்சர் திரு.சித்தராமையா அவர்கள் பேசியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தென்மேற்கு பருவமழை கர்நாடகாவில் தீவிரமடைந்திருக்கும் நிலையில், காவிரியின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் பெரும்பாலான அணைகளின் நீர்மட்டம் உச்சத்தை எட்டிய பின்பும் தமிழகத்திற்கான காவிரி நீரை தர மறுப்பது கர்நாடக அரசின் பிடிவாதப் போக்கை வெளிப்படுத்துகிறது. தமிழ்நாட்டில் காவிரி டெல்டா பகுதிகள் வரலாறு காணாத அளவிற்கு வறட்சியை சந்தித்து வரும் நிலையில், குறுவை சாகுபடியை தொடர்ந்து சம்பா சாகுபடியும் போதிய நீரின்றி பாதிக்கப்பட்டிருப்பதால் காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. உச்சநீதிமன்றமும் காவிரி மேலாண்மை ஆணையமும் தெளிவான உத்தரவை பிறப்பித்த பின்பும் தமிழகத்திற்கான காவிரி நீரை பெற எந்த வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசின் அலட்சியப் போக்கே, இன்றைக்கு தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என அம்மாநில முதலமைச்சர் அவர்கள் ஆணவப்போக்குடன் கூறும் அளவிற்கான சூழலை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இனியும் கூட்டணி தர்மத்திற்காக மவுனம் காக்காமல், கர்நாடக அரசின் சட்டவிரோதப் போக்கை நீதிமன்றம் மூலம் எதிர்கொண்டு தமிழகத்திற்கான காவிரி நீரை உடனடியாக பெறத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கான சேவை இட ஒதுக்கீட்டை வழங்க மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது – அரசு மருத்துவர்கள் மற்றும் பொதுமக்களின் நலனுக்கு எதிரான சுகாதாரத்துறையின் அரசாணை எண் 151ஐ உடனடியாக தமிழக அரசு திரும்ப பெற வேண்டும். பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவம் உள்ளிட்ட ஒருசில முதுநிலை படிப்புகளைத் தவிர, பிறதுறைகளில் அரசு மருத்துவர்கள் பட்ட மேற்படிப்புகளை பயில்வதற்கான சேவை இட ஒதுக்கீட்டை நிறுத்தி வைத்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அரசு மருத்துவர்கள் தாங்கள் விரும்பும் பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுத்து பயில தடைவிதிக்கும் திமுக அரசின் இந்த பிற்போக்குத்தனமான நடவடிக்கை, அரசு மருத்துவர்களின் எதிர்காலம் மட்டுமல்லாமல், அரசு மருத்துவமனைகளை நாடி வரும் ஏழை, எளிய பொதுமக்களின் நலனுக்கும் எதிராக அமைந்துள்ளது. மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்தவும், நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை வழங்கும் வகையிலும் புதிய பணியிடங்களை உருவாக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசு, ஏற்கனவே உள்ள படிப்புகளுக்கான இட ஒதுக்கீட்டிற்கு தடை விதிப்பது எந்தவகையில் நியாயம் ? என அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது. எனவே, அரசு மருத்துவமனைகளை பலவீனப்படுத்துவதோடு, மாநிலத்தின் பொது சுகாதாரத்துறையின் அடிப்படை கட்டமைப்பையே சீர்குலைக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள சுகாதாரத்துறை அரசாணை எண் 151ஐ உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.