திருநெல்வேலியில் நீதிமன்ற வாசலில் வாலிபர் ஒருவர் வெட்டி படுகொலை – தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டின் சாட்சி! திருநெல்வேலியில் நீதிமன்ற வாசலில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தும் வாலிபர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து நீதிமன்ற கதவுகளை இழுத்து மூடி வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது தொடர்கதையாகிவிட்டது. இதற்கு திமுக அரசின் நிர்வாகத் தோல்வியும், காவல் துறையினர் சுதந்திரமாக செயல்பட முடியாத சூழலுமே காரணம் என்று மக்கள் உரத்தக் குரலில் சொல்ல தொடங்கி விட்டனர் . விடியலை தருவோம் என்று சொல்லி மக்களை ஏமாற்றி ஆட்சியை கைப்பற்றிய திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய காவல்துறையைக் கூட முறையாக கையாள முடியவில்லை என்பதும், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டால் மக்கள் நிம்மதியான வாழ்க்கை வாழ முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பதும் தினம் தினம் நிரூபணமாகிவருகிறது. இந்நிலையில் மீதமிருக்கும் சில மாதங்களாவது தமிழக மக்களின் மீது உண்மையான அக்கறையுடன் செயல்பட்டு அவர்களது உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு தரக்கூடிய ஒரு அரசாக தமிழக அரசு இருந்திடவும்; தொடர்ந்து இதுபோல கொலை கொள்ளை சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்கவேண்டும் எனவும் முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

வடசென்னை மக்களின் வாழ்வாதாரத்தையும் சுற்றுச்சூழலையும் அழிக்கும் திட்டங்களை ஒருபோதும் ஏற்க முடியாது – எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டத்திற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் சார்பாக சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டத்திற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் வரும் 20 ஆம் தேதி நடைபெறும் என தமிழக அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. லட்சக்கணக்கான பொதுமக்கள் அடர்த்தியாக வசிக்கக் கூடிய வடசென்னையில் ஏற்கனவே 3330 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் பல்வேறு அனல் மின் நிலையங்கள் இயங்கிவரும் நிலையில், தற்போது கூடுதலாக 660 மெகாவாட் அளவிற்கான அனல்மின் நிலையத்தை அமைக்க முயற்சிப்பது கடும் கண்டனத்திற்குரியது. எண்ணூர் மற்றும் மணலி ஆகிய இரண்டு இடங்களில் மட்டும் அனல் மின் நிலையங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், ரசாயன ஆலைகள் என அபாயகரமான தொழிற்சாலைகள் பயன்பாட்டில் இருக்கும் வடசென்னையில் மேலும் ஒரு அனல் மின் நிலையத்தை அமைத்தால் அப்பகுதி முழுவதும் பொதுமக்கள் வாழத் தகுதியற்ற இடமாக மாறிவிடும் என சுற்றுச்சூழல் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வடசென்னையில் ஏற்கனவே செயல்பட்டு வரும் அனல் மின் நிலையங்களில் இருந்து வெளியேறும் சாம்பல் கழிவுகளால் பக்கிங்காம், கொசஸ்தலை மற்றும் எண்ணூர் முகத்துவாரம் ஆகிய நீர்நிலைப் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க ஆய்வறிக்கையின் அடிப்படையில் தற்போது பொதுமக்களிடம் கருத்துக் கேட்பது அவர்களை முழுக்க முழுக்க ஏமாற்றும் செயலாகும். எனவே, வடசென்னைப் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதோடு, இயற்கை வளங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தை உடனடியாக ரத்து செய்வதோடு, புதுப்பிக்கத்தக்க ஆற்றலை கொண்டு மின்சாரம் தயாரிக்கும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

“திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908” என்ற நூலுக்காக சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வாகியிருக்கும் தமிழ்ப் பேராசிரியர் திரு.ஆ.இரா.வேங்கடாசலபதி அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக வெகுண்டெழுந்த கப்பல் ஓட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் கைதுக்கு பின்னர் நடந்த எழுச்சியின் பின்னணியையும் விளைவையும் ஆராய்ந்து நூலாக தொகுத்த திரு.ஆ.இரா.வேங்கடாசலபதி அவர்களின் எழுத்துப் பயணம் மென்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன்.

திருநெல்வேலி அருகே வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் – தமிழகத்தில் தலைவிரித்தாடும் பெட்ரோல் குண்டு கலாச்சாரத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே திரு.மைதீன் என்பவர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய தாக்குதல் நடத்திய அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், அவ்வழியாக வந்த மற்றொரு நபர் ஒருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற மூன்றரை ஆண்டுகளில் சாதாரண குடியிருப்புகள் தொடங்கி கோவில்கள், காவல் நிலையங்கள், திரையரங்குகள், அரசியல் கட்சி அலுவலகங்கள், ஆளுநர் மாளிகை என பெட்ரோல் குண்டு வீச்சு நடைபெறாத இடங்களே இல்லை எனும் சொல்லும் அளவிற்கு தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் தலைவிரித்தாடுகிறது. தமிழகத்தில் நாள்தோறும் அரங்கேறும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களின் வரிசையில் தற்போது இணைந்திருக்கும் பெட்ரோல் குண்டு கலாச்சாரம் சட்டம் ஒழுங்கை அடியோடு சீர்குலைத்திருப்பதோடு, பொதுமக்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, திருநெல்வேலியில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திய நபர்களை கண்டறிந்து கடுமையான தண்டனை வழங்குவதோடு, இனிவரும் காலங்களில் எந்தவித அச்ச உணர்வுமின்றி பொதுமக்கள் பாதுகாப்பான சூழலில் வாழ்வதை உறுதி செய்ய வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில் கொட்டப்படும் கேரள மாநிலத்தின் மருத்துவக் கழிவுகள் – கேரள மாநிலத்தின் குப்பைக் கிடங்காக தமிழகத்தை மாற்றிய திமுக அரசுக்கு கடும் கண்டனங்கள். கேரள மாநிலத்தின் எல்லையோர மாவட்டங்களான திருநெல்வேலி மற்றும் தென்காசியின் பல்வேறு பகுதிகளில் அம்மாநிலத்தின் ஏராளமான இறைச்சி மற்றும் பயன்படுத்தப்பட்ட மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. தமிழகத்தை குப்பைக் கிடங்காக பயன்படுத்தி மருத்துவ மற்றும் இறைச்சிக் கழிவுகளை எல்லையோர மாவட்டங்களின் நீர்நிலைகளுக்கு அருகே கொட்டிவரும் கேரள அரசால், அந்த நீரை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு பல்வேறு உடல் உபாதைகளும், பக்க விளைவுகளும் ஏற்படுவதோடு இயற்கை வளங்களும் கடுமையாக பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில் விதிகளுக்கு மாறாக மருத்துவக் கழிவுகளை கொட்டுவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க பரிசீலனை செய்து கொண்டு வருவதாக கடந்த ஆண்டு கூறிய திமுக அரசு, அது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்காததே மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவது தொடர்கதையாகி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, சுற்றுச்சூழலுக்கும், பொதுமக்களின் சுகாதாரத்திற்கும் கேடு விளைவிக்கும் வகையில் விதிகளுக்கு மாறாக மருத்துவக் கழிவுகளை கொட்டும் குப்பைக் கிடங்காக பயன்படுத்திவரும் கேரள அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவிப்பதோடு, இனிவரும் காலங்களில் சோதனைச் சாவடிகளில் சோதனையை தீவிரப்படுத்தி இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

விழுப்புரம், கடலூரில் ஃபெஞ்சல் புயல் நிவாரணத் தொகையை வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கைது – வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பொதுமக்கள் மீது அடக்குமுறையை கையாள்வது கடும் கண்டனத்திற்குரியது. ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் குடும்ப அட்டை அடிப்படையில் தமிழக அரசு அறிவித்த 2 ஆயிரம் ரூபாய் நிவாரணத்தொகையை வழங்கக் கோரி இரண்டாவது நாளாக சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எந்தவித முன்னறிவிப்புமின்றி திறக்கப்பட்ட சாத்தனூர் அணையாலும், இரவு பகலாக தொடர்ந்து பெய்த கனமழையாலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கு குறைந்தபட்ச நிவாரணத் தொகையை கூட வழங்க மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது. ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட பாதிப்பில் வீடுகளையும், உடமைகளையும் இழந்து பரிதவித்து வரும் மக்களை, அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரியும், நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் வீதிக்கு வந்து போராடும் சூழலை ஏற்படுத்தியிருப்பது திமுக அரசு நிர்வாகத்தின் தோல்வியையே வெளிப்படுத்துகிறது. எனவே, அடிப்படைத் தேவைகளுக்காக போராடும் பொதுமக்கள் மீது அடக்குமுறையை கையாள்வதை நிறுத்திவிட்டு, அறிவித்த நிவாரணத் தொகை பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்களையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

கடலூர் அருகே வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்ட சொர்ணாவூர் தடுப்பணை – விவசாயிகளின் நலன் கருதி சேதமடைந்த தடுப்பணையை உடனடியாக சீரமைக்கத் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களைச் சுற்றியுள்ள விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட சொர்ணாவூர் தடுப்பணையின் நடுப்பகுதி வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. சொர்ணாவூர் தடுப்பணையில் ஏற்பட்டிருக்கும் உடைப்பால் விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் மட்டுமல்லாது, புதுச்சேரி மாநிலத்தின் 28 ஏரிகளுக்குச் செல்லும் தண்ணீரும் தடைபட்டு சுமார் 4 ஆயிரம் பரப்பளவிலான பாசன நிலங்களும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. தடுப்பணையை பலப்படுத்த தமிழக அரசு சார்பாக 32 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், அதற்கான பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்றதே, தடுப்பணையின் நடுப்பகுதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதற்கு காரணம் என அப்பகுதி விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே, நிலத்தடி நீரை உயர்த்தும் வகையிலும், தமிழக மற்றும் புதுச்சேரி மாநில விவசாயிகள் பயன்பெறும் வகையிலும், சொர்ணாவூர் அணையை உடனடியாக சீரமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

புதிய பால் அறிமுகம் என்ற பெயரில் அளவை குறைத்து விலையை உயர்த்தி நூதன மோசடியில் ஈடுபடுவதா ? – சில்லறை தட்டுப்பாட்டை காரணம் காட்டி பொதுமக்களின் மீது கூடுதல் சுமையை ஏற்றும் முடிவை ஆவின் நிர்வாகம் கைவிட வேண்டும்.ஆவின் நிர்வாகத்தின் மூலம் விற்பனை செய்யப்படும் பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் பெயரில் “பிளஸ்” எனும் பெயரை சேர்த்து லிட்டருக்கு 11 ரூபாய் வரை உயர்த்தப்பட்டிருப்பதாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.500 மி.லிட்டர் அளவு கொண்ட பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் அளவை 450 மி.லிட்டராக குறைத்திருப்பதோடு, சில்லறை தட்டுப்பாட்டை காரணம் காட்டி அதன் விலையையும் லிட்டருக்கு 44 ரூபாயிலிருந்து 55 ரூபாயாக உயர்த்தியிருக்கும் ஆவின் நிர்வாகத்தின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.பால் கொள்முதல் விலையை உயர்த்தித் தர வேண்டும் என்ற உற்பத்தியாளர்களின் நீண்டகால கோரிக்கையை பரிசீலனை கூட செய்ய முன்வராத திமுக அரசு, ஆண்டுக்கு இருமுறை பால் மற்றும் பால் பொருட்களின் விலையை உயர்த்துவது உற்பத்தியாளர்களுக்கு இழைக்கும் துரோகம் ஆகும்.திமுக ஆட்சி பொறுப்பேற்ற மூன்றரை ஆண்டுகளில் வரிகளையும், கட்டணங்களையும் உயர்த்தி வரும் நிலையில், அன்றாட அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றான பாலின் விலையை கூட பலமுறை உயர்த்தி அதன் மூலம் வருவாய் ஈட்டுவது தான் திராவிட மாடல் அரசின் சாதனையா ? என பொதுமக்களே கேள்வி எழுப்புகின்றனர்.எனவே, ஏழை, எளிய பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தும் பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் விலையை உயர்த்தும் முடிவை உடனடியாக கைவிடுவதோடு, ஆவின் நிர்வாகத்தின் வருவாயைப் பெருக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அரசு உதவி வழக்கறிஞர் தேர்வில் குளறுபடியா ? – தேர்வர்களின் அரசுப் பணி கனவை சிதைக்கும் திமுக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த அரசு உதவி வழக்கறிஞர் பணியிடங்களுக்கான தேர்வில் பல்வேறு குளறுபடி ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அரசு உதவி வழக்கறிஞர் தேர்வுக்கு முறைப்படி விண்ணப்பித்த பல தேர்வர்களின் பெயர்கள் விடுபட்டிருப்பதாகவும், மதுரை, கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு தேர்வு மையங்களில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தேர்வர்கள் தேர்வெழுத முடியாத சூழல் ஏற்பட்டிருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இரண்டு ஆண்டுகளாக தலைவர் இல்லாமல் இயங்கி வந்த அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்ட நிலையில், தற்போது தலைவர் நியமிக்கப்பட்ட பின்னரும் அதே குளறுபடிகள் தொடர்வது நம்பிக்கையின்மையை ஏற்படுத்துவதாக தேர்வர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, குளறுபடிகள் நிறைந்த அரசு உதவி வழக்கறிஞர் தேர்வை ரத்து செய்துவிட்டு, முறையான அறிவிப்பை வெளியிட்டு மறு தேர்வு நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தையும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.