பத்ம விபூஷண் விருதுக்கு தேர்வாகியுள்ள குடியரசு முன்னாள் துணைத் தலைவர் திரு.வெங்கையா நாயுடு அவர்கள், திரைப்பட நடிகர் திரு.சிரஞ்சீவி அவர்கள், நடனக்கலைஞர் வைஜெயந்திமாலா அவர்கள், நாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமணியம் அவர்கள், ஆகியோருக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மறைந்த கேப்டன் திரு. விஜயகாந்த் அவர்களுக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டிருப்பதும் மனநிறைவையும் மிகுந்த மகிழ்ச்சியையும் அளிக்கிறது. அதே போல, பத்ம ஸ்ரீ விருதை பெற்றிருக்கும் கோவையைச் சேர்ந்த வள்ளி ஒயில் கும்மி நடனக் கலைஞர் பத்திரப்பன் அவர்கள், சர்வதேச ஸ்குவாஷ் விளையாட்டு வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா அவர்கள், எழுத்தாளர் ஜோ டி குரூஸ் அவர்கள், நாதஸ்வர கலைஞர் சேசம்பட்டி டி.சிவலிங்கம் அவர்கள், மருத்துவர் நாச்சியார் அவர்கள் உட்பட மத்திய அரசின் பத்ம விருதுகளை பெற்றிருக்கும் அனைவரும் அவரவர் துறைகளில் தொடர்ந்து சாதனை படைக்க மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசின் தவறுகளை சுட்டிக் காட்டி செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழ் மற்றும் உரிமையாளர் மீது பழிவாங்கும் நோக்கில் தொடரப்பட்டுள்ள வழக்குகளை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்தபின், ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிகைத் துறை மீதான அடக்குமுறைகள் அதிகரித்துவருவதன் ஒரு பகுதியாக, தினமலர் நாளிதழ் உரிமையாளர் மற்றும் ஆசிரியர் மீது மதுரை காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அரசின் முறைகேடுகள், ஊழல் குற்றச்சாட்டுக்கள் மற்றும் தவறுகளை சுட்டிக்காட்டும் பத்திரிகைகள் மீது வழக்கு தொடர்வதாலும், சட்டரீதியாக பல்வேறு நெருக்கடிகளை கொடுப்பதாலும், தான் செய்த தவறுகள் நியாயமாகிவிடாது என்பதை அரசு நிர்வாகம் புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. பத்திரிகை சுதந்திரமே ஜனநாயகத்தை வலுப்படுத்தும் என்பதை உணர்ந்து, தினமலர் மீதான வழக்குகளை ரத்து செய்வதோடு, பத்திரிகைகள் சுதந்திரமாக செயல்பட தேவையான சூழலை உருவாக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.

நம் நாட்டில் வலுவான ஜனநாயகம் தழைத்தோங்க தொலைநோக்கு சிந்தனையுடன் உருவாக்கப்பட்ட இந்திய அரசியமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த இந்நாளில் நாட்டுமக்கள் அனைவருக்கும் மனமார்ந்த குடியரசு தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை எதிர்கொண்டு சுதந்திரத்தை அடைய பாடுபட்ட தியாகிகளையும், தேசத் தலைவர்களையும் நினைவு கொள்வதோடு, அரசியலமைப்புச் சட்டத்தை முழுமையாக கடைபிடித்து நாட்டின் வளர்ச்சிக்காக தனது பங்களிப்பை அளிக்க ஒவ்வொரு குடிமகனும் உறுதியேற்போம்.

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுக்கா செய்தியாளராக பணியாற்றிவரும் திரு.நேசபிரபு அவர்களை நேற்றிரவு அடையாளம் தெரியாத கும்பல் அரிவாளால் வெட்டி கொலைவெறி தாக்குதல் நடத்தியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக இயங்கிவந்த மதுபானக்கடைகள் குறித்த விவரங்களை தொலைக்காட்சி செய்திகளின் மூலமாக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற காரணத்திற்காகவே திரு.நேசபிரபு மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அடையாளம் தெரியாத நபர்கள் தன்னை பின் தொடர்வதாக பலமுறை புகார் அளித்த பின்னரும் எவ்வித பாதுகாப்பு நடவடிக்கையும் எடுக்காத காவல்துறையினரின் அலட்சியப் போக்கால் பொதுமக்கள் அதிகம் நடமாடும் பெட்ரோல் பங்கில் வைத்து நேசபிரபு மீது மர்ம நபர்கள் சரமாரியாக தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். திமுக ஆட்சிக்குவந்த பின் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொலை, கொள்ளை போன்ற சட்டம், ஒழுங்கு பிரச்னைகளால், பொதுமக்கள் தொடங்கி அரசு அதிகாரிகள், காவலர்கள், பத்திரிகையாளர்கள் என அனைத்து தரப்பினருக்கும் பாதுகாப்பில்லாத சூழலில் பணியாற்றி வருவதற்கு தற்போது நடந்திருக்கும் தாக்குதல் சம்பவம் கூடுதல் சாட்சியாக அமைந்திருக்கிறது. எனவே, உள்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், இனிமேலாவது சட்டம், ஒழுங்கு பிரச்னையில் கூடுதல் கவனம் செலுத்தி, இது போன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, அடையாளம் தெரியாத நபர்களால் தாக்குதலுக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திரு.நேசபிரபு அவர்களுக்கு அரசு சார்பில் உயர்தர சிகிச்சை வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.