October 7, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் குழந்தைகளைச் சேர்க்க விரும்பும் பெற்றோர்கள் அலைக்கழிக்கப்படுவதாகப் புகார் – மாணவர் சேர்க்கைக்கான நடைமுறையை எளிமைப் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் (RTE) நடப்பாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான நடைமுறை நேற்று தொடங்கியிருக்கும் நிலையில், அத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பெற்றோர்களைத் தனியார்ப் பள்ளி நிர்வாகங்கள் அலைக்கழிப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. மத்திய அரசு நிதி வழங்காததைக் காரணம் காட்டி தனியார்ப் பள்ளிகளில் இலவச சேர்க்கையை நிறுத்தி வைத்திருந்த தமிழக அரசால், ஏராளமான பெற்றோர்கள் தங்களின் சொந்த செலவிலேயே குழந்தைகளைப் பள்ளிகளில் சேர்க்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டிருந்தனர். இலவச கல்வி உரிமைச் சட்டத்தில் பதிவு செய்து சேர்க்கை பெறும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தைத் திரும்பப் பெறலாம் என்ற அரசின் விதிமுறைகளைத் தனியார்ப் பள்ளி நிர்வாகங்கள் பின்பற்றாமல் தங்களைத் தொடர்ந்து அலைக்கழிப்பதாகப் பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இலவச கட்டாய கல்வி சேர்க்கைக்காக இதுவரை பெற்றோர்களே இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கும் முறை நடைமுறையில் இருந்துவந்த நிலையில், நடப்பாண்டில் தனியார்ப் பள்ளிகளின் மூலமாகவே சேர்க்கைக்கான நடைமுறைகள் தொடங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருப்பதும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் சேர்க்கை பெறும் மாணவர்கள் சேர்க்கை நடைமுறையை எளிதாக்குவதோடு, ஏற்கனவே பள்ளிகளில் சேர்ந்திருக்கும் மாணவர்களுக்கு இச்சட்டத்தின் கீழ் ஒதுக்கீடு பெறும் பட்சத்தில் அவர்கள் செலுத்திய கல்விக் கட்டணத்தைத் திரும்ப வழங்குவதற்கான நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
October 7, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தேமுதிக பொதுச்செயலாளர் சகோதரி திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களுடைய தாயார் திருமதி அம்சவேணி அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. தாயாரை இழந்துவாடும் சகோதரி திருமதி பிரேமலதா விஜயகாந்த், சகோதரர் L K சுதீஷ் ஆகியோருக்கும், குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
October 6, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் மதிமுக பொதுச்செயலாளர் திரு. வைகோ அவர்கள் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்பி மக்கள் பணியை தொடர வேண்டும் என எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
October 6, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 மதுரை அவனியாபுரம் திருப்பரங்குன்றம் சாலையில் அமைந்துள்ள மக்கள் திலகம் புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் அவர்களின் திருவுருவச் சிலை அடையாளம் தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. கோடிக்கணக்கான மக்களில் ஒருவராக, ஏழைப் பங்காளராக, எளியோரின் நண்பராக, உழைக்கும் வர்க்கத்தின் உற்ற தோழராகத் திகழ்ந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவச் சிலையைச் சேதப்படுத்துவதால் அவருடைய புகழும், பெருமையும் துளியளவும் ஒருநாளும்குறையப்போவதில்லை. கோடான கோடி மக்களுக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் செயல்படுத்திய சாதனைகளும், அமல்படுத்திய நலத்திட்டங்கள் அனைத்தும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் கடந்தும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கக் கூடியவை ஆகும்.எனவே, இதயதெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவச் சிலையைச் சேதப்படுத்திய அடையாளம் தெரியாத நபர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்த தலைவர்களின் சிலைகளுக்கு உரியப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
October 6, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ஐயா திரு ராமதாஸ் அவர்கள் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்பி மக்கள் பணியைத் தொடர எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
October 5, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் மீது சரமாரி தாக்குதல் – மக்களின் உயிரைக் காக்கும் மகத்தான பணியில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்களைப் பாதுகாக்க வேண்டியது தமிழக அரசின் கடமை.சிவகங்கை மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் பணியிலிருந்த பயிற்சி மருத்துவர் மீது நோயாளி ஒருவரின் உறவினர்கள் தாக்குதல் நடத்தியிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. மருத்துவர் மீது நடைபெற்ற தாக்குதல் சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் உட்பட அனைத்துவிதமான ஆதாரங்களைத் தாக்கல் செய்தபின்பும் நடவடிக்கை எடுக்கத் தவறிய காவல்துறையால் அதிருப்தியடைந்த பயிற்சி மருத்துவர்கள் ஒன்றிணைந்து போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.பேரிடர் காலங்களில் தொடங்கி பெருந்தொற்று காலம் வரை தன்னுயிரைப் பொருட்படுத்தாமல் பொதுமக்களின் உயிரைக் காக்கும் மகத்தான பணியில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் தொடர்கதையாகி வருவது ஒட்டுமொத்த மருத்துவர்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. எனவே, சிவகங்கை அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும், அங்கு பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
October 5, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 அனைத்து உயிர்களையும் தம் உயிரைப் போல எண்ண வேண்டும் என்ற உயரிய கொள்கையைப் போதித்து, சாதி, மத, பேத வேறுபாடுகளைக் களைந்து சமரச சன்மார்க்கத்தை நிறுவியவருமான திருஅருட்பிரகாச வள்ளலார் அவர்களின் பிறந்த தினம் இன்று. தருமச்சாலையை நிறுவி ஏழை, எளிய மக்களின் பசியைப் போக்கியதோடு, தன்னை நாடி வருவோருக்கு ஆண்டவனை அடையும் அருளியலை மட்டும் போதிக்காமல், ஒழுக்க நெறிகளையும் கடைப்பிடிக்க உபதேசித்த வள்ளலார் அவர்களின் வாழ்வியல் நெறிமுறைகளைப் பின்பற்றி வாழ்ந்திட நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம்.
October 4, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 கப்பலோட்டிய தமிழர் வ.உ சிதம்பரனார் மற்றும் மகாகவி பாரதியார் ஆகியோரின் உற்ற தோழரும், ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தைத் தீரத்துடன் எதிர்த்துப் போராடிய விடுதலை போராட்ட வீரருமான சுப்பிரமணிய சிவா அவர்களின் பிறந்த தினம் இன்று. இலக்கியவாதி, இதழியலாளர், மேடைப் பேச்சாளர், தொழிற்சங்க போராளி என பல்வேறு நிலைகளில் சாதி, மத, பேதங்களைக் கடந்து அனைவரின் மத்தியிலும் விடுதலை வேட்கையை விதைத்த வீரமுரசு சுப்பிரமணிய சிவா அவர்களின் துணிச்சலையும், தேசப்பற்றையும் போற்றி வணங்கிடுவோம்.
October 4, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 மகாத்மா காந்தியின் அகிம்சை கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு தேச விடுதலைப் போராட்டத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவரும், உயிர் பிரியும் நிலையிலும் தேசியக் கொடியைக் கீழே விழாமல் தாங்கிப் பிடித்த தேசப்பற்று மிக்கவருமான கொடி காத்த குமரன் அவர்களின் பிறந்த தினம் இன்று. ஆதிக்கம் நிறைந்த ஆங்கிலேயர்களுக்கு எதிராக இளைஞர் படையைத் துணிச்சலுடன் வழிநடத்திச் சென்றதோடு, நாட்டின் சுதந்திரத்திற்காக இளம் வயதிலேயே தன்னுயிர் நீத்திட்ட உன்னதமிக்க விடுதலைப் போராட்ட வீரர் கொடி காத்த குமரனின் தியாகத்தை அவர் பிறந்த இந்நாளில் போற்றி வணங்கிடுவோம்.
October 3, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் ஓய்வூதியக் குழு தனது அறிக்கையை தாக்கல் செய்யும் என முதலமைச்சர் அறிவித்த பின்பும் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தது ஏன்? – திமுகவின் பிரதான தேர்தல் வாக்குறுதியான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஓய்வூதியத் திட்டங்களை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய அமைக்கப்பட்ட ஓய்வூதியக் குழு, தன்னுடைய கால அவகாசம் முடிந்த பின்பும் இடைக்கால அறிக்கையை மட்டுமே தாக்கல் செய்திருப்பதை கண்டித்து அக்டோபர் 6 ஆம் தேதி கருப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்பை பதிவு செய்யப்போவதாக தலைமைச் செயலக அரசு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது. செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் ஓய்வூதியக் குழு தனது அறிக்கையை தாக்கல் செய்யும் என சட்டமன்றத்தில் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டதோடு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களும் தங்களின் கோரிக்கைகளையும், பரிந்துரைகளையும் ஓய்வூதியக் குழுவிடம் வழங்கிய நிலையிலும், இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்து கால தாமதம் ஏற்படுத்துவது எந்தவகையிலும் ஏற்க முடியாதது. காலநீட்டிப்பு செய்யப்பட வேண்டும் என்பதை நேரடியாக கேட்காமல், இடைக்கால அறிக்கை எனும் பெயரில் ஒரு நாடகத்தை அரங்கேற்றி பழைய ஓய்வூதியத் திட்டம் என்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பையும், நம்பிக்கையையும் ஓய்வூதியக் குழு அடியோடு சீர்குலையைச் செய்திருப்பதாக அரசு ஊழியர் சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன. எனவே, அரசு அமைத்த ஓய்வூதியக்குழுவின் முழு அறிக்கையை உடனடியாக பெறுவதோடு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் மிக முக்கிய கோரிக்கை மட்டுமல்லாது, திமுகவின் பிரதான தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பை வரும் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே வெளியிட வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.