காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்வதற்கு மேட்டூர் அணையைத் திறப்பதற்கான சாத்தியக் கூறுகள் இல்லாத நிலையில், 18 மணி நேரம் தடையில்லா மின்சார விநியோகம் உள்ளிட்ட 134.83 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் அறிவித்திருக்கிறார். மின்சாரம் எப்போது வருகிறது? எப்போது போகிறது? என்பதைக்கூட கணிக்க முடியாத அளவுக்கு, நாள்தோறும் பலமுறை அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டும், மின் அழுத்தக் குறைபாடும் நிலவி வருவதால் மோட்டார் பம்புகளை இயக்க முடியாமலும், நெற்பயிர்களுக்கு உரிய நேரத்தில் போதிய நீரைப் பாய்ச்ச முடியாமலும் பயிர்கள் கருகி வருகின்றன. இந்த அவல நிலையை விவசாயிகள் பலமுறை சுட்டிக்காட்டி, தொடர் போராட்டங்களை முன்னெடுத்த போதிலும், அதன் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காத தவெக அரசு, தற்போது அறிவித்துள்ள 18 மணி நேர தடையில்லா மின்சார வழங்கல் அறிவிப்பை மட்டும் எவ்வாறு நம்புவது என்று விவசாயிகள் நியாயமான கேள்வியை எழுப்புகின்றனர். ஆட்சிக்கு வந்தவுடன் குறு மற்றும் சிறு விவசாயிகள் வாங்கிய பயிர் கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்த தவெக அரசு, ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு ரிசர்வ் வங்கி (RBI) விதிமுறைகள், மாநிலத்தின் நிதிநிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் கூறி, தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் விவசாயிகளை தொடர்ந்து ஏமாற்றி வருவதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் இந்த நியாயமான போராட்டத்திற்கு ஆதரவாக, தவெகவின் தோழமைக் கட்சிகளில் ஒன்றான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் போராட்டம் அறிவித்திருக்கும் சூழலில், இனியும் தமிழக விவசாயிகளை வஞ்சிக்காமல், தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்ததைப் போல குறு மற்றும் சிறு விவசாயிகளின் பயிர் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற குரல் தமிழகமெங்கும் ஓங்கி ஒலித்து வருகிறது. எனவே, தமிழக விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளான தடையற்ற 24 மணி நேர மும்முனை மின்சாரம், முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடி ஆகியவற்றை இனியும் புறக்கணிக்காமல், எந்தவித காலதாமதமும் இன்றி உடனடியாக நிறைவேற்றிடுமாறு தமிழக முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.

கடலூர் அருகே கடற்பகுதி எல்லைக்குள் புதிய ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்க இந்துஸ்தான் ஆயில் நிறுவனம் விண்ணப்பம் – கடல் வளத்தையும், மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் இத்திட்டத்தை எந்தவகையிலும் அனுமதிக்கக் கூடாது. கடலூர் மாவட்டம் பரங்கிப் பேட்டையிலிருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் கடற்பகுதி எல்லைக்குள் இந்துஸ்தான் ஆயில் நிறுவனம் சார்பில் ஏற்கனவே அமைக்கப்பட்ட ஹைட்ரோ கார்பன் கிணறுகளில் எண்ணெய் இருப்பு குறைந்துவிட்டதால் அதே இடத்தில் மேலும் நான்கு கிணறுகளை அமைக்க அனுமதி கோரி மாநில அரசின் கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்திடம் அந்நிறுவனம் விண்ணப்பித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே அமைக்கப்பட்ட ஹைட்ரோகார்பன் கிணறுகளால் கடல் வாழ் உயிரினங்களும், இயற்கை வளங்களும் கடுமையான பாதிப்பைச் சந்தித்து வரும் நிலையில், தற்போது மேலும் 4 கிணறுகளை அதே இடத்தில் அமைக்க முற்படுவது கடல் வாழ் உயிரினங்கள் மட்டுமல்லாது கடல் சார்ந்து வாழக்கூடிய மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளது. ஹைட்ரோகார்பன் இருப்பை ஆய்வு செய்யப் பயன்படுத்தப்படும் நில அதிர்வுச் சோதனையின் போது எழும்பும் வெடிச் சத்தமும், அதிலிருந்து கசியும் ரசாயனக் கழிவுகளும் அரியவகை கடல் வாழ் உயிரினங்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயரும் அல்லது இறந்து போகும் அபாயம் ஏற்படும் என கடல்சார் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். எனவே, கடல் வளத்தையும், மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும் வகையில் புதிய ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்க முடிவு செய்து தமிழக அரசின் கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்திடம் இந்துஸ்தான் ஆயில் நிறுவனம் வழங்கியிருக்கும் விண்ணப்பத்தை ஆரம்ப நிலையிலேயே நிராகரித்திட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.@CMOTamilnadu@TVKVijayHQ

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து போராடி வெற்றி கண்ட தமிழகத்தைச் சேர்ந்த இந்திய ராணுவ வீரர் லான்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரம் அவர்கள் மத்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான கீர்த்தி சக்ரா விருது பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. கடுமையான காயங்களுக்கு பிறகும் பின்வாங்காமல் தாய் நாட்டையும், மக்களையும் காக்க தன் உயிரையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து முன்னேறிப் போராடிய ராணுவ வீரராக ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் பெருமையைத் தேடித் தந்திருக்கும் லான்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரம் அவர்களின் தேசப்பணி மேன்மேலும் தொடர வாழ்த்துகிறேன்.

தமிழர்களின் வாழ்வியலைத் திரைப்படமாக எடுத்து திரையுலகில் மாபெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியவரும், தலைமுறைகள் கடந்து தனக்கென ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருப்பவருமான இயக்குநர் இமயம் பத்மஸ்ரீ திரு. பாரதிராஜா அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. கிராமத்துப் பின்னணி கொண்ட கதைகளாலும், நடிகர், நடிகைகளின் கதாபாத்திர வடிவமைப்பாலும், இன்னபிற கலைஞர்களுக்கு முன்னோடியாகவும் சுமார் அரை நூற்றாண்டு காலம் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்திய அற்புதமான கலைஞர் திரு.பாரதிராஜா அவர்களின் மறைவு ஒட்டுமொத்த திரையுலகிற்கும் பேரிழப்பாகும். நடிகராக, இயக்குநராக, தயாரிப்பாளராக என பல்வேறு நிலைகளிலும் தமிழ் சினிமாவையே தன் உயிர்மூச்சாகக் கொண்டிருந்த இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக திரையுலகினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். @offBharathiraja

பாலிமர், நியூஸ் தமிழ் 24*7 மற்றும் தமிழ் ஜனம் ஆகிய மூன்று செய்தி தொலைக்காட்சிகள் தமிழ்நாடு அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களால் ஏற்பட்டிருக்கும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதைப் பொருட்களின் தாராளப் புழக்கம், அறிவிக்கப்படாத மின்வெட்டு ஆகியவற்றால் மக்கள் படும் துயரங்களைச் செய்திகளாக வெளியிட்டதற்காகவே குறிப்பிட்ட மூன்று செய்தி தொலைக்காட்சிகளும் அரசு கேபிளில் முடக்கப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்திருக்கிறது. அரசு நிர்வாகத்தின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதிலும், மக்களின் அன்றாட பிரச்சினைகளை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்வதிலும் முக்கிய பங்காற்றும் செய்தித் தொலைக்காட்சிகளை முடக்க நினைப்பதும், அரசு நிர்வாகத்தின் மீதான விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் ஊடகங்களின் குரலை ஒடுக்க நினைப்பதும் தவெக அரசின் பலவீனத்தையே வெளிப்படுத்துகிறது. ஜனநாயகத்தில் விமர்சனங்களையும், மாற்றுக்கருத்துக்களையும் சகித்துக் கொள்ளும் மனப்பக்குவமே நல்லாட்சிக்கான அடையாளம் என்பதை இனியாவது உணர்ந்து ஊடக சுதந்திரத்தை அச்சுறுத்த முயலும்  இதுபோன்ற நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என தவெக அரசையும், அதன் முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன். @polimernews@NewsTamilTV24x7@TamilJanamNews@CMOTamilnadu@TVKVijayHQ

தமிழ் ஊடக உலகில் 10 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்து 11 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மாலை முரசு செய்தி தொலைக்காட்சி நிர்வாகத்திற்கும், அதன் அனைத்து நிலையிலான ஊழியர்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சவால்கள் மிகுந்த ஊடக உலகில் உண்மைச் செய்திகளைத் துணிச்சலுடன் வெளியிடுவதிலும், மக்கள் பிரச்சினைகளை அரசு நிர்வாகத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்று உடனுக்குடன் தீர்வு காண்பதிலும் தனித்துவமிக்கதாக திகழும் மாலை முரசு செய்தி தொலைக்காட்சியின் வளர்ச்சியும் வெற்றிப் பயணமும் மேன்மேலும் தொடர மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன். @MalaimurasuTv

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.