மாணவர்களுக்கு கல்வி அறிவோடு தெய்வபக்தியும் அவசியம் என்பதை எடுத்துரைத்த கோவை காமாட்சிபுரி ஆதீனம் ஞானகுரு சாக்தஸ்ரீ சிவலிங்கேஸ்வரர் சுவாமிகள் உடல்நலக்குறைவால் உயிரிழந்திருக்கும் செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. இதயதெய்வம் அம்மா அவர்கள் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் சிலைக்கு தங்கக் கவசம் வழங்கிய நிகழ்வை சாக்த ஸ்ரீ சிவலிங்கேஸ்வரர் சுவாமிகள் முன்னின்று நடத்தியதை இந்நேரத்தில் நினைவில் கொள்கிறேன். ஆதீனம் அவர்களை இழந்துவாடும் பக்தர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இறை உணர்வோடு உடலையும், உள்ளத்தையும் தூய்மைப்படுத்தி, எல்லோரிடத்திலும் அன்பு பாராட்டி ஏழை, எளியோரின் ஏழ்மையை போக்கிடும் வகையில் புனித ரமலான் மாதத்தில் நோன்பை தொடங்கியிருக்கும் இஸ்லாமிய சகோதர, சகோதர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மனிதகுலத்தின் வழிகாட்டி இறைதூதர் நபிகள் நாயகம் அவர்கள் போதித்த அன்பு, கருணை, ஈகை, மனிதநேயம் போன்ற நற்பண்புகளை பின்பற்றும் இஸ்லாமிய பெருமக்களின் எண்ணங்கள் அனைத்தும் இப்புனித ரமலான் மாதத்தில் நிறைவேறட்டும்.

தமிழில் சிறந்த மொழி பெயர்ப்பாளருக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வாகியிருக்கும் எழுத்தாளர் திரு. கண்ணையன் தட்சிணாமூர்த்தி அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஃபிரெஞ்சுப் பாதிரியாரின் அனுபவத்தையும் பழங்குடி பண்பாட்டையும் விளக்கும் (THE BLACK HILL) எனும் நாவலை கருங்குன்றம் என்ற தலைப்பில் மொழி பெயர்த்து சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வாகியிருக்கும் திரு. கண்ணையன் தட்சிணா மூர்த்தியின் ஆக்கப்பூர்வமான எழுத்துப் பணிகள் தொடர எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

முல்லைப்பெரியாறு அணையைக் கட்டி தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய தென்மாவட்டங்களில் நிலவிய தண்ணீர் பஞ்சத்தைப் போக்கி விவசாய உற்பத்தியை பெருக்கியதில் முக்கிய பங்கு வகித்த ஜான் பென்னிகுவிக் அவர்களின் நினைவுதினம் இன்று. விடாமுயற்சி, தன்னம்பிக்கையின் மூலம் எத்தனையோ இன்னல்களை கடந்து ஜான் பென்னிகுவிக் அவர்களால் கட்டப்பட்டு லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழும் முல்லைப் பெரியாறு அணை இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் அவரின் புகழை நினைவு படுத்திக் கொண்டே இருக்கும்.

கல்வி முறையில் உள்ள குறைகளை சுட்டிகாட்டிய ஆசிரியர் திருமதி. உமா மகேஸ்வரி அவர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது – திருமதி. உமா மகேஸ்வரி அவர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்து மீண்டும் பணியாற்றுவதற்கான அனுமதியை வழங்க வேண்டும். தமிழக அரசின் கல்வித்துறையில் நிகழும் குறைகளையும் மாணவர்களுக்கு தேவையான கல்வி முறைகள் குறித்தும் தனது முகநூல் பக்கத்தில் எழுதி வரும் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் திரு. உமா மகேஸ்வரி அவர்களை அரசுக்கு எதிராக அவதூறு பதிவிட்டதாக கூறி பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சமவேலைக்கு சம ஊதியம் கோரி கடந்த பதினைந்து நாட்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்களை அழைத்துப் பேச முன்வராத திமுக அரசு, கல்வித்துறையில் நிகழும் குறைகளை சுட்டிக்காட்டிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுத்திருப்பது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானதாகும். எனவே, ஆசிரியர் திருமதி. உமா மகேஸ்வரி அவர்களின் பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்து மீண்டும் பள்ளியில் பணியாற்ற அனுமதிப்பதோடு, மாணவர்களின் எதிர்காலத்திற்கு தொடக்கப் புள்ளியான ஆசிரியர்கள் சுட்டிக்காட்டும் குறைகளை நிவர்த்தி செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாகவே தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்த வேண்டும் – தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் அரசு ஊழியர்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும். மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் விலைவாசி உயர்வை ஈடுசெய்யும் வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி 46 சதவிகிதத்திலிருந்து 50 சதவிகிதமாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தமிழக அரசு கடந்த காலங்களை போல காலம் தாழ்த்தாமல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டம், சமவேலைக்கு சம ஊதியம், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு கூட தமிழக அரசு செவிசாய்க்க மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி ஜனவரி 1 ஆம் தேதி முதல் கணக்கிட்டு வழங்குவதோடு, தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும் என தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.