திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே தடம் புரண்ட மைசூரு – தர்பங்கா எக்ஸ்பிரஸ் ரயில், நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் மீது மோதி விபத்துக்குள்ளாகியிருப்பது துரதிஷ்டவசமானது. ரயில் விபத்தில் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அனைத்து பயணிகளும் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டும் என எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கும் இதே நேரத்தில், இனி வரும் காலங்களில் இது போன்ற ரயில் விபத்துக்கள் ஏற்படா வண்ணம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.

சென்னையில் சேதமடைந்த சாலைகளிலும் பள்ளங்களிலும் தேங்கிநிற்கும் மழைநீரால் அதிகரிக்கும் விபத்துக்கள் – பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் உயிரோடு விளையாடும் திமுக அரசின் மெத்தனப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. சென்னை வேளச்சேரி சாலையில் இருந்த பள்ளத்தில் தவறி விழுந்த நபர், குண்டும் குழியுமான ஆலந்தூர் சுரங்கப்பாதையில் நிலை தடுமாறிய தனியார் நிறுவனத்தின் இளம்பெண் என கடந்த ஒருவாரத்தில் மட்டும் இரண்டு பேர் உயிரிழந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சென்னை மட்டுமல்லாது தமிழகம் முழுவதுமே சாலைப்பணிகளுக்காக தோண்டப்படும் பள்ளங்கள், முறையாக மூடப்படாததன் காரணமாக அதில் தேங்கி நிற்கும் மழைநீரில் வாகன ஓட்டிகள் தவறி விழுந்து விபத்துக்குள்ளாவதையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் தடுக்கத் தவறிய தமிழக அரசின் மெத்தனப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. பிரதான சாலைகளில் ஏற்பட்டிருக்கும் பள்ளங்கள், மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்டு மூடப்படாமல் இருக்கும் குழிகள் என ஒவ்வொரு நாளும் பல்வேறு விதமான பள்ளம், மேடுகளை கடந்து உயிரைப் பணயம் வைத்து பயணம் செய்ய வேண்டிய அவலநிலைக்கு பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் தள்ளப்பட்டுள்ளனர். சென்னை போன்ற பெருநகரங்களில் சாலைகளில் காணப்படும் பள்ளங்களை சீரமைப்பதில் மாநகராட்சி நிர்வாகம் காட்டும் அலட்சியம் குறித்தும், ஆமை வேகத்தில் நடைபெறும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் குறித்தும் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததே விபத்துக்களுக்கும், உயிரிழப்புகளுக்கும் முக்கிய காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் சேதமடைந்திருக்கும் சாலைகளை உடனடியாக சீரமைப்பதோடு, வடகிழக்கு பருவமழை தீவிரமடைவதற்கு முன்பாகவே அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளவேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 21 பேரை கைது செய்திருக்கும் இலங்கை கடற்படையின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது – தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை அடியோடு சிதைக்கும் இலங்கை கடற்படையினரின் அராஜகத்திற்கும், அத்துமீறலுக்கும் முடிவு கட்டுவது எப்போது? புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களில் 21 பேரை எல்லை தாண்டியதாக கூறி கைது செய்திருக்கும் இலங்கை கடற்படை, அவர்களின் நான்கு விசைப் படகுகளையும் பறிமுதல் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வங்கக் கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை கைது செய்து தொடர் அட்டூழியத்தில் ஈடுபட்டு வரும் இலங்கை கடற்படையை கண்டித்து பல்வேறுகட்ட போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் மேலும் 21 பேரை கைது செய்திருப்பது ஒட்டுமொத்த மீனவர்கள் மத்தியிலும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா – இலங்கை உறவுகளை மேம்படுத்தும் வகையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் திரு.ஜெய்சங்கர் அவர்கள் அண்மையில் இலங்கை பயணம் மேற்கொண்ட நிலையில், 50 மீனவர்களை விடுவித்த இலங்கை அரசு, தற்போது மீண்டும் கைது நடவடிக்கையை தொடங்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட அவர்களின் படகுகளையும் உடனடியாக விடுவிக்கத் தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, இனிவரும் காலங்களில் இலங்கை கடற்படையின் அச்சுறுத்தலின்றி தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.

டாடா குழுமத்தின் முன்னாள் தலைவரும் இந்திய தொழில்துறை வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியவருமான திரு.ரத்தன் டாடா அவர்கள் காலமானார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. இந்தியாவை மையமாக கொண்டு தொடங்கப்பட்ட டாடா நிறுவனத்தை தன் தொலைநோக்கு சிந்தனையால் உலகளாவிய வணிகமாக மாற்றிய திரு.ரத்தன் டாடா அவர்களின் மறைவு இந்திய தொழில்துறைக்கு பேரிழப்பாகும். எந்த தொழிலாக இருந்தாலும் அதில் நேர்மையை கடைபிடிப்பதில் உறுதியாக இருந்த திரு.ரத்தன் டாடா அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் டாடா குழுமத்திற்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

அடிப்படை உரிமைகளுக்காக போராடும் சாம்சங் நிறுவன ஊழியர்களை வலுக்கட்டாயமாக கைது செய்திருக்கும் காவல்துறையின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது- தொழிலாளர்களின் சட்டப்பூர்வ உரிமையான தொழிற்சங்கம் அமைக்க அனுமதி மறுப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள சாம்சங் நிறுவனத்தில் தொழிற்சங்கம் அமைக்க அனுமதி மறுப்பதாக கூறி நான்கு வாரங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அந்நிறுவனத்தின் தொழிலாளர்கள் காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தொழிலாளர்களின் சட்டப்பூர்வமான உரிமைகளில் ஒன்றான தொழிற்சங்கத்தை அமைக்கும் முடிவுக்கு ஆதரவாக இருக்க வேண்டிய தமிழக அரசு, தொடக்கம் முதலே சாம்சங் நிறுவனத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து வருவதும், போராட்டத்தை ஒடுக்க முயற்சிப்பதும் அந்நிறுவனத்தில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் சாம்சங் நிறுவன தொழிலாளர்களின் பிரதிநிதிகளை இரவு நேரத்தில் வீடு தேடிச் சென்று கைது செய்வதும், போராட்டத்தில் பங்கேற்கச் செல்லும் தொழிலாளர்களை கைது செய்ய பேருந்துகளை நிறுத்தி சோதனை செய்வதும் தான் தொழிலாளர் நலன் காக்கும் திராவிட மாடல் ஆட்சியா ? என தொழிலாளர்களே சரமாரியான கேள்விகளை எழுப்புகின்றனர். எனவே, காவல் துறையால் கைது செய்யப்பட்ட சாம்சங் நிறுவன தொழிலாளர்களை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரடியாக தலையிட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாத்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.