ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்று பத்து ஆண்டுகளுக்கு மேல் பதவி நியமனத்திற்காக காத்திருக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் – நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோர் உட்பட வேலைக்காக காத்திருக்கும் அனைவருக்கும் பணி நியமன ஆணை வழங்குவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பணி நியமனம் செய்யப்படாமல் இருக்கும் சுமார் 40 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்க பல்வேறு தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற தங்களை 2018 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நியமனத் தேர்வின்றி பணி நியமனம் செய்ய வேண்டும் என்ற பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கைக்கு திமுக அரசு செவி சாய்க்காத நிலையில், நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த 410 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கும், தமிழக அரசுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2018-ம் ஆண்டுக்கு முன்பாக பின்பற்றப்பட்ட ஆசிரியர் நியமன நடைமுறையின்படியே அப்போது நடைபெற்ற தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு விரைந்து பணி வழங்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை பின்பற்றி வழக்கு தொடுத்தவர்கள் மட்டுமல்லாது 2018 ஆம் ஆண்டுக்கு முன்பாக நடைபெற்ற தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பணிக்காக காத்திருக்கும் அனைவருக்கும் பணி நியமன ஆணை வழங்கப்பட வேண்டும் என ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. எனவே, தங்களின் பணிக்காலத்தின் பாதி காலத்தை போராட்டங்களிலேயே கழித்திருக்கும் பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் அனைவருக்கும் விரைந்து பணி நியமன ஆணைகளை வழங்குமாறு ஆசிரியர் தேர்வு வாரியத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சியை உள்ளடக்கிய மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை வரவேற்புக்குரியது! தமிழகத்திற்கு சிறப்புத் திட்டங்கள் எதுவும் அறிவிக்ககாதது ஏமாற்றம் அளிக்கிறது! உற்பத்தி, வேலைவாய்ப்பு, சமூகநீதி, நகர்ப்புற மேம்பாடு, எரிசக்தி பாதுகாப்பு, உட்கட்டமைப்பு, சீர்திருத்தங்கள் உள்ளிட்ட ஒன்பது அம்சங்களை இலக்காக நிர்ணயித்திருப்பதோடு, இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் மற்றும் ஏழைகளின் நலனுக்கு முன்னுரிமை அளித்து தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மத்திய அரசின் பட்ஜெட் வரவேற்புக்குரியது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒரு கோடி விவசாயிகளை இயற்கை விவசாயத்தில் ஈடுபடுத்தும் திட்டம், விவசாயத்துறையில் டிஜிட்டல் புரட்சி செய்வதற்கான கட்டமைப்புகள், தோட்டக்கலைகளில் 109 வகையிலான அதிக மகசூல் தரும் பயிர்கள் அறிமுகம், தானியம் மற்றும் எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி மற்றும் சேமிப்புக்கு முக்கியத்துவம் என வேளாண்மையை மேம்படுத்தும் வகையில் பட்ஜெட்டில் இடம்பெற்றிருக்கும் புதிய முன்னெடுப்புகள் ஒட்டுமொத்த விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தையும், வருமானத்தையும் உயர்த்தும் பட்ஜெட்டாக அமைந்துள்ளது. உள்நாட்டில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு பத்து லட்சம் வரை கல்விக்கடன், நாடு முழுவதும் நான்கு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புத் திறன் பயிற்சி, இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒரு கோடி இளைஞர்களுக்கு ஊக்கத்தொகையுடன் கூடிய பயிற்சி, அடுத்த ஐந்தாண்டுகளில் ஆயிரம் ஐடிஐகள்(ITI), உற்பத்தி துறையில் முதன்முறை பணியில் சேருவோருக்கு சிறப்பு நிதி, வேலைவாய்ப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதோடு, வேலைவாய்ப்பை அதிகளவு உருவாக்கும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்திருப்பது இளைஞர்களின் எதிர்காலத்தை வளமாக்கும் வகையில் அமைந்திருக்கிறது. நியாய விலைக்கடைகள் மூலமாக ஏழை மக்களுக்கு தானியம் வழங்கும் பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் (PM-GKAY) அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிப்பு, பிரதமர் வீட்டுவசதி திட்டத்தின் (PMAY) கீழ் நாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்பங்களுக்கு வீடுகள், வீடுகளின் மேற்கூரைகளில் சூரிய ஒளித் தகடுகளின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம் விரிவாக்கம் உள்ளிட்ட ஏழை, எளிய மக்களின் வளர்ச்சியை குறிக்கோளாய் கொண்டு அறிவிக்கப்பட்டிருக்கும் திட்டங்கள் வரவேற்புக்குரியது. ரூ.3 லட்சம் கோடியில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள், பணிபுரியும் பெண்களுக்காக சிறப்பு தங்கும் விடுதிகள் என பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையிலும், முத்ரா திட்டத்தின் கடன் வரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தி அறிவிப்பு, சிறு,குறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு, புதிய தொழில் பூங்காங்கள் போன்ற புதிய அறிவிப்புகள் தொழிலாளர்கள் மற்றும் தொழில்நிறுவனங்களின் முன்னேற்றத்தின் மீதான மத்திய அரசின் கூடுதல் கவனத்தை வெளிப்படுத்துகிறது.

கழகம்

அலுவலகம்

முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.