கரூரில் தமிழக வெற்றிக் கழக கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 30க்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்துகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். கூட்டநெரிசலில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அனைவருக்கும் உரிய சிகிச்சை வழங்க வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

பேரறிஞர் பெருந்தகை அண்ணா மற்றும் புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் குறித்தான திரு சீமான் அவர்களின் அருவெறுக்கத்தக்க பேச்சு கடும் கண்டனத்திற்குரியது – மறைந்த தலைவர்களின் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையிலான பேச்சை இனியும் தொடர்ந்தால் அதற்கான எதிர்வினைகள் மிகக் கடுமையாக இருக்கும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்களாக, மக்கள் நலனில் அக்கறை கொண்ட அரசு நிர்வாகம் எப்படி இயங்க வேண்டும் என்ற அடிப்படை இலக்கணத்தை வகுத்துக் கொடுத்த இருபெரும் ஆளுமைகளான பேரறிஞர் பெருந்தகை அண்ணா மற்றும் மக்கள் திலகம் புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் குறித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு சீமான் அவர்களின் நாகரீகமற்ற பேச்சு கடும் கண்டனத்திற்குரியது. தமிழர் வாழ வேண்டும், தமிழர் பண்பாடு சிறக்க வேண்டும் என்ற அரும்பெரும் குறிக்கோள் கொண்டிருந்த பேரறிஞர் அண்ணா அவர்கள் குறித்தும், ஏழைகள் ஏழைகளாகவே இருந்துவிடக் கூடாது என்பதற்காகவே எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்திய புரட்சித்தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் குறித்தும் திரு சீமான் அவர்களின் நாகரீகமற்ற பேச்சு தமிழக மக்களின் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அறிவார்ந்த கொள்கையின் மூலம் புதிய அரசியல் கோட்பாட்டை உருவாக்கி தமிழகத்தின் தன்னிகரற்ற ஆளுமைகளாக திகழ்ந்த இருபெரும் தலைவர்களும் இயற்கையோடு இயற்கையாக கலந்து விட்டாலும், அவர்கள் நிகழ்த்திய சாதனைகளும், அமல்படுத்திய திட்டங்களும் தமிழக மக்களின் ஆழ்மனதில் நீக்கமற நிறைந்து இன்றளவும் நிழலாடிக் கொண்டிருக்கின்றன. எனவே, யார் மீதோ கொண்ட வன்மத்தை வெளிப்படுத்துவதாக எண்ணி, மறைந்த மாபெரும் தலைவர்கள் மீது நாகரீகமற்ற பேச்சுக்களின் மூலம் அரசியலில் தன் இருப்பைக் காட்டிக் கொள்ள திரு சீமான் அவர்கள் இனியும் முயலும் பட்சத்தில் அதற்கான எதிர்வினை தமிழக மக்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் வரும் என்பதை எச்சரிக்கையாக சொல்லிக் கொள்கிறேன்.

பதிவுத்துறை அலுவலகங்களில் வாய்மொழி உத்தரவின் படி வழிகாட்டி மதிப்பை உயர்த்தியிருப்பதாகப் புகார் – பதிவுத்துறை இணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழிகாட்டி மதிப்பின் அடிப்படையிலேயே பதிவு செய்வதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். பதிவுத்துறை அலுவலகங்களில் தமிழக அரசு நிர்ணயித்த நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பைவிட 30 சதவிகிதம் வரை உயர்த்தியிருப்பதாகவும், அதன் அடிப்படையில் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்படுவதாகவும் நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. நிலங்களுக்கான சர்வே எண் மற்றும் தெருவாரியாக வழிகாட்டி மதிப்புகளை பதிவுத்துறை நிர்ணயித்து அதற்கான விவரங்களும் இணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது அதற்கு மாறாக 30 சதவிகிதம் வரை வழிகாட்டி மதிப்பை வாய்மொழி உத்தரவின் அடிப்படையில் உயர்த்தியிருப்பதாக வரும் செய்திகள் நிலம் மற்றும் வீட்டு மனை வாங்குவோர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை சந்தை நிலவரப்படி வழிகாட்டி மதிப்பை நிர்ணயிக்க அமைக்கப்பட்ட மாநில அளவிலான குழுவிடமிருந்தோ, தமிழக அரசின் பத்திரப் பதிவுத்துறையிடமிருந்தோ எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில், வாய்மொழி உத்தரவின் அடிப்படையில் வழிகாட்டி மதிப்பை உயர்த்தியிருப்பது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது. எனவே, வாய்மொழி உத்தரவு எனும் பெயரில் நடைபெற்று வருவதாகச் சொல்லப்படும் வழிகாட்டி மதிப்பு உயர்வை உடனடியாக நிறுத்தி வைப்பதோடு, ஏற்கனவே பதிவுத்துறை இணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழிகாட்டி மதிப்பிற்கு ஏற்ப முத்திரைத் தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என பத்திரப்பதிவுத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

தமிழ்நாடு அரசின் எரிசக்தித்துறையின் முதன்மைச் செயலாளர் திருமதி பீலா வெங்கடேசன் அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது. கொரோனோ பரவல் காலத்தில் சுகாதாரத்துறையின் முதன்மைச் செயலாளராகத் திறம்பட பணியாற்றிய திருமதி பீலா வெங்கடேசன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக அதிகாரிகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

தலைமைக் கழக அறிவிப்பு: கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்; அம்மா மக்கள் முன்னேற்றக் கழக சட்டமன்றத் தொகுதி வாரியான கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் கீழ்க்காணும் அட்டவணைப்படி நடைபெறவுள்ளது. இந்த ஆலோசனைக்கூட்டங்களில் அந்தந்த சட்டமன்றத் தொகுதிகளைச் சார்ந்த அனைத்து நிலையிலான கழகம் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். – தலைமைக் கழகம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.