உயிருள்ளவரை தேசத்திற்கே என் பணி என முழங்கி தாய் நாட்டிற்கு விடுதலையும், மக்களுக்கு நல்வாழ்க்கையும் கிடைத்திட வேண்டும் என்ற பொது நலத்தோடு ஒப்பற்ற சேவை புரிந்த சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் பிறந்தநாள் இன்று. வீரியமிக்க மேடைப் பேச்சுக்களின் மூலம் இருளில் மூழ்கியிருந்த சாமானிய மக்களுக்கும் சுதந்திர உணர்வை கிளர்த்தெழச் செய்த கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்கள் ஆற்றிய அரும்பெரும் தொண்டுகள் தமிழக மக்கள் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஒளிர்ந்து கொண்டே இருக்கும்.

மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை சேமிக்க ராசிமணலில் அணை கட்ட வேண்டியது மிக அவசியமானது – தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தினரின் கோரிக்கைக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் முழு ஆதரவு. காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் செயல்பாடுகளை தடுத்து நிறுத்தக் கோரியும், மேட்டூர் அணையிலிருந்து உபரியாக வெளியேறும் நீர் வீணாக கடலில் கலப்பதை தடுத்து நிறுத்தும் நோக்கிலும் ராசிமணலில் புதிய அணை கட்டுவதன் அவசியம் குறித்தும் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் திரு.பி.ஆர் பாண்டியன் அவர்கள் தலைமையிலான குழுவினர் சந்தித்து பேசினர். ஒகேனக்கலுக்கு மேல்பகுதியில் உள்ள கிருஷ்ணகிரி வன எல்லையில் ராசிமணல் பகுதியில் புதிய அணையை கட்டுவதற்காக பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் அடிக்கல் நாட்டியது தொடர்பாகவும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் ஆட்சிக்காலத்தில் ராசிமணல் அணை கட்டுமானம் தொடர்பாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்தும் விரிவாக விவாதித்தோம். கோடிக்கணக்கான மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், லட்சக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களுக்கு பாசன நீர் ஆதாரமாகவும் விளங்கி வரும் காவிரி நீரை உரிய நேரத்தில் தர மறுக்கும் கர்நாடக அரசு, உண்மைக்கு மாறான பிரச்சாரங்களை முன்னெடுத்து காவிரி டெல்டா பகுதியை பாலைவனமாக்கும் நோக்கில் மேகதாது அணையை கட்டியேத் தீருவோம் என்ற பிடிவாதப் போக்கில் செயல்பட்டு வருகிறது. எனவே, மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் உபரிநீர், விவசாயிகளுக்கும், விவசாயத்திற்கும் பயனின்றி வீணாக கடலில் கலப்பதை தடுக்கும் வகையிலும், மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் திட்டத்தை முறியடிக்கும் வகையிலும் ராசிமணலில் அணை கட்ட வேண்டிய அவசியத்தை உணர்ந்து, அதற்கான நடவடிக்கைகளை துரிதமாக தொடங்கிடுமாறு தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கான பரிந்துரையை மத்திய நீர்வள ஆணையம் திரும்பப் பெற வேண்டும் – முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசின் திட்டத்திற்கு மத்திய அரசு துணை போகக் கூடாது. மத்திய நீர்வளத்துறையின் அணைப் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் கேரள அரசின் கோரிக்கையை ஏற்று முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து 12 மாதங்களில் ஆய்வு செய்ய பரிந்துரைத்திருப்பதாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. மத்திய அரசின் அணைப் பாதுகாப்பு சட்டத்தின்படி முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்வதற்கான கால அவகாசம் 2026 ஆம் ஆண்டு வரை இருக்கும் நிலையில், 12 மாதங்களில் அணையின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்ய பரிந்துரைக்க வேண்டிய அவசியம் என்ன? என விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர். முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்த ஆய்வு எனும் பெயரில் தென் மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தோடு மாநில உரிமை பறிபோகும் சூழல் ஏற்படும் நிலையிலும், மவுனம் காப்பது தமிழக விவசாயிகளுக்கு திமுக அரசு இழைக்கும் துரோகம் ஆகும். எனவே, முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து மீண்டும் ஆய்வு செய்வதற்கு வழங்கப்பட்டிருக்கும் பரிந்துரையை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசிற்கு துணை போகக் கூடாது எனவும் நீர்வள ஆணையத்தையும் மத்திய அரசையும் வலியுறுத்துகிறேன்.

பாரிஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில் மகளிர் பேட்மிட்டன் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த துளசிமதி முருகேசன் மற்றும் வெண்கலப் பதக்கம் வென்றிருக்கும் மனிஷா ராமதாஸ் ஆகிய இருவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கையை மட்டுமே மூலதனமாக கொண்டு சரித்திர வெற்றியை பதிவு செய்து நாட்டிற்கு பெருமை சேர்த்திருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனைகள் துளசிமதி முருகேசன் மற்றும் மனிஷா ராமதாஸ் ஆகிய இருவரின் சாதனைப் பயணம் மென்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.