விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழப்பு – தொடர் கதையாகிவரும் விபத்துகளுக்கும், உயிரிழப்புகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பது எப்போது? விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பொம்மையாபுரம் என்ற கிராமத்தில் இயங்கிவந்த பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கின்றன. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு பசுமையான சூழலை பராமரிக்கவும், பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடவும் அறிவுறுத்திய இரண்டு மாதத்தில் ஏற்பட்டிருக்கும் இந்த விபத்து மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியப்போக்கையே வெளிப்படுத்துகிறது. விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளில் அடிக்கடி நிகழும் விபத்துகள் குறித்தும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்தும் பலமுறை சுட்டிக்காட்டியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசால் அப்பாவி தொழிலாளர்கள் உயிரிழப்பு சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. எனவே, இனிவரும் காலங்களில் இதுபோன்ற விபத்துகள் ஏற்படா வண்ணம் பட்டாசு ஆலைகளில் உரிய ஆய்வுகளை மேற்கொண்டு பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் விரிவாக்கத்திற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு – பொதுமக்களின் விருப்பத்திற்கு எதிராக நடைபெற்ற இணைப்பு நடவடிக்கையை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். சென்னை, மதுரை, திருச்சி, உள்ளிட்ட 16 மாநகராட்சிகளையும், திருவாரூர், திருவள்ளூர், சிதம்பரம் உள்ளிட்ட 40 நகராட்சிகளையும் விரிவாக்கம் செய்திருப்பதோடு, கன்னியாகுமரி, அரூர், பெருந்துறை உள்ளிட்ட 13 புதிய நகராட்சிகளையும் உருவாக்குவதற்கான அரசாணையை தமிழக அரசு அண்மையில் வெளியிட்டிருக்கிறது. மக்கள் பிரதிநிதிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் 60 சதவிகிதத்திற்கும் அதிகமான பொதுமக்களிடமும் கலந்து ஆலோசித்து ஒருமித்த கருத்து ஏற்பட்ட பின்னரே மாற்றம் செய்யப்பட வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றாமல் பல்வேறு ஊராட்சிகளை நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுடன் இணைத்திருப்பது பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் நூறுநாள் வேலைத்திட்டம், பசுமை வீடு திட்டம், பிரதம மந்திரி கிராமசாலை திட்டம், தனிநபர் இல்ல கழிப்பறை கட்டும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால் பயனடைந்து வரும் ஊராட்சிகள் தற்போது நகராட்சிகளுடனும், மாநகராட்சிகளுடன் இணைக்கப்படுவதால் மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தையும் இழக்கும் சூழல் உருவாகியிருப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஏற்கனவே, கிராமப்புற ஊராட்சியாக இருந்து நகர்ப்புற உள்ளாட்சியாக மாறியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஏழை, எளிய மக்களும், சிறு வியாபாரிகளும் திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு உயர்த்தப்பட்ட கட்டணங்களாலும், வரிகளாலும் கடுமையான பாதிப்பை சந்தித்து வரும் நிலையில் தற்போது இணைக்கப்படும் ஊராட்சிகளுக்கும் அதே பாதிப்பு ஏற்படும் என்பதால் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். எனவே, அவசரகதியில் நடைபெற்றிருக்கும் இணைப்பு நடவடிக்கையை மறுபரிசீலனை செய்வதோடு, ஊரகப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், சிறு வியாபாரிகள் உள்ளிட்ட அனைவரிடமும் கருத்துக்களை கேட்டறிந்து அவர்களின் ஒப்புதலை பெற்ற பின்பே இந்த அரசாணையை அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

தமிழகத்தில் பரவிவரும் ஸ்க்ரப் டைபஸ் (Scrub Typhus) எனும் புதிய வகை பாக்டீரியா தொற்று – முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி தொற்று பாதிப்பிலிருந்து பொதுமக்களை திமுக அரசு பாதுகாக்க வேண்டும். தமிழகத்தில் வேகமாக பரவிவரும் ஸ்க்ரப் டைபஸ் தொற்றால் இதுவரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், நாள்தோறும் 10 முதல் 20 பேர் தொற்றுக்கான அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஸ்க்ரப் டைபஸ் தொற்று வேகமாக பரவிவரும் நிலையில் பொதுமக்களை பாதுகாப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத்துறை துரிதப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு, தடிப்புகள் போன்ற நோய்த்தொற்றுக்கான அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வரக்கூடிய நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கும் வகையில் ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்கி அனைத்து விதமான அரசு மருத்துவமனைகளிலும் தனிப்பிரிவும், போதுமான மருத்துவர்களும் இருப்பதை சுகாதாரத்துறை உறுதி செய்ய வேண்டும். மேலும், ஸ்க்ரப் டைபஸ் நோய்த்தொற்று தொடர்பாக பொதுமக்களுக்கு போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தும் இந்நேரத்தில், புதர் மண்டிய வனப்பகுதிகள் மற்றும் மலைப்பகுதிகளில் வசிக்கக்கூடிய பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழகத்தில் 24 மணி நேரமும் தங்குதடையின்றி இயங்கும் சட்டவிரோத தனியார் மதுபானக்கடைகள் மற்றும் பட்டிதொட்டியெங்கும் பரவியிருக்கும் போதைப்பொருட்கள் விற்பனை – மக்கள் நலனில் சிறிதும் அக்கறையில்லாத திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சட்டவிரோதமாக தனியார் மதுக்கடை ஒன்றில் காலை 8 மணி முதலே தங்கு தடையின்றி மதுபான விற்பனை நடைபெறுவது போல ஊடகங்களில் வெளியாகியிருக்கும் வீடியோ காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. மேலும், கடந்த இரு தினங்களுக்கு முன்பாக சென்னை மாதவரத்தில் 16 கோடி ரூபாய் மதிப்பிலான மெத்தபெட்டமைன் எனும் கொடியவகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இன்று மீண்டும் அதே மாதவரத்தில் பிடிபட்ட போதைப்பொருள் விற்பனை கும்பலிடமிருந்து இருந்து 4 கிலோ போதைப் பொருளோடு 5 நாட்டுத்துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இப்படியாக, தமிழகத்தில் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களில் நடைபெறும் சட்டவிரோத மதுபான விற்பனையால் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் தங்களின் வாழ்வாதாரத்தையும், பட்டிதொட்டியெங்கும் பரவியிருக்கும் கொடியவகை போதைப் பொருட்களின் தாராளப்புழக்கத்தால் ஏராளமான இளைஞர்களும் தங்களின் எதிர்காலத்தையும் தொலைத்து வருவது மிகுந்த வேதனையளிக்கிறது. தமிழகத்தில் நாள்தோறும் அரங்கேறும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் போன்ற சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளுக்கு அடிப்படை காரணமான சட்டவிரோத மதுவிற்பனை மற்றும் போதைப்பொருட்களின் நடமாட்டத்தை தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், போதையின் பாதையில் செல்ல வேண்டாம் என மன்றாடி கேட்டுக் கொள்வதாக விளம்பரத்தில் மட்டும் கோருவது எந்த வகையில் நியாயம் ? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். எனவே, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக நடைபெறும் மதுவிற்பனையை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வருவதோடு, போதைப்பொருள் பறிமுதல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர்களிடம் விரிவான விசாரணை நடத்தி பின்னணியில் இருப்பவர்களையும் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ஊதிய உயர்வு கோரி விசைத்தறி தொழிலாளர்கள் தொடர் போராட்டம் – தமிழக அரசு உடனடியாக தலையிட்டு தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி டி.சுப்புலாபுரம் பகுதியில் இயங்கிவரும் நூற்றுக்கணக்கான விசைத்தறி கூடங்களில் பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கான விசைத்தறி தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. விசைத்தறி தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் கடந்த ஆண்டுடன் நிறைவடைந்த நிலையில், புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்று வரும் போராட்டத்தால் உற்பத்தி மட்டுமல்லாது தொழிலாளர்களின் அன்றாட வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. விசைத்தறி உரிமையாளர்களுடன் நடைபெற்ற பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்திருக்கும் நிலையில், அது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என விசைத்தறி தொழிலாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே, இவ்விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, பேச்சுவார்த்தையின் மூலம் விசைத்தறி தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்து அவர்களின் தொடர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என தொழிலாளர் நலத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

மத்திய அரசின் தயான் சந்த் கேல் ரத்னா விருதுக்கு தேர்வாகியிருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த உலக செஸ் சாம்பியன் குகேஷ் அவர்களுக்கும், அர்ஜூனா விருதுக்கு தேர்வாகியிருக்கும் துளசிமதி முருகேசன், நித்யஸ்ரீ சுமதி சிவன் மற்றும் மனிஷா ராமதாஸ் ஆகியோருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், உலகளவிலான போட்டிகளில் பதக்கங்களை குவித்து தாய்நாட்டிற்கு பெருமை சேர்த்த துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர், ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் உட்பட மத்திய அரசின் பல்வேறு விருதுகளுக்கு தேர்வாகியிருக்கும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் வெற்றிப்பயணம் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன். #NationalSportsAwards2024 #ArjunaAward #KhelRatna

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.