கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேட்டையில் உள்ள பட்டாசு குடோனில் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக நேரிட்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்த செய்தி வருத்தமளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன். இந்த விபத்தில் காயமடைந்தோருக்கு உயர் மருத்துவ சிகிச்சைகள் கிடைப்பதையும், அவர்கள் மீண்டும் வாழ்வாதாரத்தை தொடங்க போதுமான நிவாரண உதவிகளையும் பெற்றிட அரசு வழிவகை செய்ய வேண்டும். மேலும், தீபாவளி பண்டிகை வரவிருப்பதால் பட்டாசு தயாரிப்பு பணிகள் அனைத்து தொழிற்சாலைகளிலும் மும்முரமாக நடைபெற்றுவரும் நிலையில், பணியாளர்களுக்கு போதிய பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பதையும், தொழிற்சாலைகள் முறையாக பராமரிக்கப்படுகின்றனவா என்பதையும் தமிழக அரசு உறுதிப்படுத்தி, இதுபோன்ற விபத்துகள் ஏற்படாதவாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

இரண்டாவது நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்காக என்.எல்.சி. நிறுவனம் நெல் வயலை அழித்து கால்வாய் தோண்டும் பணியை மேற்கொண்டதை எதிர்த்து விவசாயிகளுக்கு ஆதரவாக பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஜனநாயக முறைப்படி மேற்கொண்ட போராட்டத்தை ஒடுக்க முயன்ற தமிழ்நாடு அரசின் செயல் கண்டனத்திற்குரியது. ஜனநாயக முறைப்படி நடக்கும் போராட்டங்களை முறையாகக் கையாளாமல் காவல்துறையை ஏவி, தடியடி நடத்தி, கண்ணீர் புகைக்குண்டு வீசி போராட்டத்தை ஒடுக்க தமிழ்நாடு அரசு நினைப்பது நியாயமல்ல. அதே நேரத்தில், ஜனநாயக முறைப்படி நடத்திய போராட்டத்தில் உணர்ச்சிவசம் கொண்டு காவல்துறையினர் மீது பா.ம.க தொண்டர்கள் கல் எறிந்ததாக வந்த செய்தியும் துரதிஷ்டவசமானது. விவசாயிகளின் உணர்வை மதித்து அவர்களின் கோரிக்கையின்படி நிலத்தை திருப்பி தருவதற்கோ அல்லது நிலம் கையகப்படுத்துவதைக் கைவிடவோ நடவடிக்கை எடுக்காமல் என்.எல்.சி. நிர்வாகத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு அரசும், காவல் துறையும் செயல்படுவது ஏற்புடையதல்ல. இந்த விஷயத்தில் நெற்பயிர் விளைந்த நிலத்தில் பொக்லைன் இயந்திரம் கொண்டு கால்வாய் தோண்டியது குறித்து சென்னை உயர்நீதிமன்றமே அதிருப்தி தெரிவித்திருப்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். என்.எல்.சி.க்கு ஆதரவாக செயல்படாமல் விவசாயிகளுக்கு உரிய நீதி கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பதே இந்த நேரத்தில் அவசியமான செயலாகும். மேலும், கைது செய்யப்பட்டவர்களை எந்தவித பாரபட்சமுமின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

லட்சிய கனவு காணுங்கள் என இளைஞர்களின் உந்துசக்தியாக இருந்த மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்களின் நினைவு நாள் இன்று. எளிய குடும்ப பின்னணியில் பிறந்து கல்வியால் படிப்படியாக முன்னேறி இலக்கை எட்டிப்பிடித்து தன் வாழ்நாள் முழுவதும் இளைஞர்களின் முன்னுதாரணமாக வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் அப்துல்கலாம் அவர்கள். நாட்டின் முதல் குடிமகனாக குடியரசுத் தலைவர் பதவி வகித்த போதிலும் ஒரு எளிய மனிதரைப் போல குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நாட்டு மக்களிடம் பேரன்பு கொண்டிருந்தவர். கல்வி, விஞ்ஞானம், வான்வெளி ஆராய்ச்சிகளில் இந்தியா மேலும் பல சாதனைகளை எட்ட மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்களின் நினைவு நாளில் உறுதி ஏற்போம்.

விவசாயிகளின் கடுமையான எதிர்ப்பையும் மீறி நிலக்கரி சுரங்க விரிவாக்க பணிகளை என்எல்சி நிறுவனம் மேற்கொள்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது. சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக வேளாண் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் தொடர் போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில் கடலூர் அருகே வளையமாதேவி கிராமத்தில், நடவு செய்யப்பட்ட வயலில், பயிர்களை அழித்து பொக்லைன் இயந்திரம் மூலம் பணிகள் மேற்கொள்வதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. பல்வேறு இன்னல்களுக்கு இடையே விதைத்து, பயிர் செய்து அதனை காப்பாற்றி வரும் விவசாயிகளின் நிலத்தில் டிராக்டரை விட்டு பயிர்களை அழித்து அவசர, அவசரமாக விரிவாக்கப்பணிகள் மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் என்ன? வேளாண் நிலத்தில் வைரமே கிடைத்தாலும் அது தேவையில்லை, விவசாயமே முக்கியம் என்பதே விவசாயிகளின் நிலைப்பாடு. ஆகவே, உணவு உற்பத்தி செய்யும் விவசாயிகளின் வேளாண்மை தொழிலுக்கு பேராபத்து விளைவிக்கும் சுரங்கத்துக்கான விரிவாக்கப் பணிகளை உடனே கைவிட வேண்டும்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.