பள்ளி, கல்லூரிகளுக்கு அருகிலேயே தங்கு தடையின்றி போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் – மாணவ, மாணவியர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் போதைப் பொருட்களுக்கு அடியோடு முடிவு மறுக்கும் திமுக அரசுக்கு கடும் கண்டனங்கள். தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே தங்கு தடையின்றி விற்பனை செய்யப்படும் புகையிலை, போதை சாக்லெட் உள்ளிட்ட போதைப் பொருட்களால் ஏராளமான மாணவ, மாணவியர்கள் போதைக்கு அடிமையாகி தங்களின் எதிர்காலத்தை தொலைத்து வருவதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. போதைப் பொருட்கள் எந்த வடிவில் வந்தாலும் அதனை அடியோடு ஒழிக்க தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறிய திமுக அரசால், ஏற்கனவே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனையை கூட தடுக்க முடியவில்லை என்பது அரசு நிர்வாகத்தின் கையாலாகாத்தனத்தையே வெளிப்படுத்துகிறது. தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு சில்லறை விற்பனையாளர்களுக்கு அபராதம் விதிக்கும் உணவுப் பாதுகாப்புத்துறையும், காவல்துறையும், அத்துடன் அதனை கடந்து விடுவதும் மொத்த விற்பனையாளர்களை கண்டுகொள்ளாமல் விடுவதுமே கல்வி நிறுவனங்களுக்கு அருகே புகையிலைப் பொருட்கள் சர்வசாதாரணமாக விற்பனை செய்யப்படுவதற்கு முக்கிய காரணம் என புகார் எழுந்துள்ளது. பள்ளிக்குழந்தைகள் தன்னை அப்பா… அப்பா… என அழைக்கும் போது அளவில்லா மகிழ்ச்சி அடைவதாக பெருமிதமடையும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், அக்குழந்தைகள் பயிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே தங்குதடையின்றி நடைபெறும் போதைப் பொருட்களின் விற்பனையை தடுக்க அப்பாவாக என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார் ? என மாணவ, மாணவியர்களின் பெற்றோர்கள் கேள்வி எழுப்புகின்றனர். எனவே, மாணவ சமுதாயத்தை சீரழித்து வரும் போதைப் பொருட்களின் தாராளப் புழக்கத்தை அடியோடு ஒழிப்பதற்கான உரிய நடவடிக்கைகளை இனியாவது தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சரையும், காவல்துறையையும் வலியுறுத்துகிறேன்.

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிய டாஸ்மாக் பணியாளர்கள் வலுக்கட்டாயமாக கைது – டாஸ்மாக் பணியாளர்களுக்கு எதிரான திமுக அரசின் அடக்குமுறை கடும் கண்டனத்திற்குரியது. பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமைச் செயலகம் முன்பாக காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்ற டாஸ்மாக் பணியாளர்கள் அனைவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. டாஸ்மாக் நிர்வாகத்தின் மூலமாக மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயித்து அதன் மூலமாக கோடி கோடியாக வருமானம் ஈட்டும் திமுக அரசு, அங்கு பணியாற்றும் ஊழியர்களின் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை கூட நிறைவேற்ற மறுத்து போராட்டத்தில் பங்கேற்றவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்திருப்பது அதன் அதிகாரப்போக்கையே வெளிப்படுத்துகிறது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அரசுத்துறை மற்றும் அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களில் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்துவரும் ஒப்பந்த மற்றும் தற்காலிகப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வது குறித்து பரிசீலிக்கப்படும் என வாக்குறுதியளித்த திமுக, ஆட்சிக்கு வந்த பின்பு அதனை நிறைவேற்ற மறுப்பது ஏன்? என போராட்டத்தில் டாஸ்மாக் பணியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். திமுக ஆட்சிப் பொறுப்பேற்று நான்கு ஆண்டுகளை நெருங்கும் நிலையில், தங்களது குறைந்தபட்ச கோரிக்கைகளில் ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை என்ற ஆதங்கம் தான் நூற்றுக்கணக்கான டாஸ்மாக் பணியாளர்களை காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் நடத்தும் அளவிற்கான சூழலை உருவாக்கியுள்ளது. எனவே, கைது செய்யப்பட்டுள்ள டாஸ்மாக் பணியாளர்கள் அனைவரையும் எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, பேச்சுவார்த்தையின் மூலம் அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட முன்வர வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

திருக்கோயில் சொத்துக்களை பாதுகாக்க வேண்டிய இந்து சமய அறநிலையத்துறையே அதனை ஆக்கிரமிப்பதா? – மூடப்பட்ட இரவீஸ்வரர் திருக்கோயில் குளத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.500 ஆண்டுகள் பழமையான சென்னை வியாசர்பாடி இரவீஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான குளத்தை ஆக்கிமிரத்து வாடகை வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாற்றியிருப்பதாக இந்து சமய அறநிலையத்துறை மீது புகார் எழுந்துள்ளது. திருக்கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்க வேண்டிய இந்து சமய அறநிலையத்துறையே இரவீஸ்வரர் கோயில் திருக்குளத்தை மூடி வாடகை வாகனங்கள் நிறுத்துமிடமாக மாற்றி அதன் மூதல் வசூலில் இறங்கியிருப்பதாக வரும் செய்திகள் கடும் கண்டனத்திற்குரியது. சோழர் காலத்தில் கட்டப்பட்டு பல்வேறு அதிசயங்களையும், புராணப் பின்னணியையும் கொண்டிருக்கும் இரவீஸ்வரர் திருக்கோயிலின் திருக்குளம், நிலத்தடி நீரை பெருக்குவதோடு, குடிநீர் ஆதாரமாகவும் விளங்கியதால் அக்குளம் மூடப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். எனவே, வேண்டுவோருக்கு வேண்டியதை தந்து அருள் புரிந்து வடசென்னைக்கே பெருமை சேர்க்கும் வியாசர்பாடி இரவீஸ்வரர் திருக்கோயில் திருக்குளத்தை மீட்டு மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

குரூப் 2 ஏ தேர்வில் முதலமைச்சரின் புகழை பாடும் வகையில் கேள்வி இடம்பெற்றிருப்பதாக புகார் – தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வு அரசுத்துறைகளில் பணியாற்றவா? அல்லது திமுகவுக்கு கட்சிப் பணியாற்றவா ? தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அண்மையில் நடத்திய குருப் 2 ஏ தேர்வில் தமிழக முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் புகழை பாடும் வகையில் கேள்வி கேட்கப்பட்டிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அரசுப்பணியை எதிர்பார்த்து காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்கள் இரவு பகலாக தேர்வுக்கு தயாராகி வரும் நிலையில், முதலமைச்சரின் கவனத்தை பெற வேண்டும் என்பதற்காக தேர்வுக்கு சம்பந்தமில்லாத கேள்விகளை கேட்டிருக்கும் அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. முதலமைச்சரின் புகழை பாடும் வகையில் கேள்விகள் கேட்கப்பட்டிருப்பதன் மூலம் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வு அரசுத்துறைகளில் பணியாற்றவா ? அல்லது அரசுப்பணிகளில் இருந்து கொண்டு திமுகவுக்கு கட்சிப் பணியாற்றவா ? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் கலாச்சாரம், நவீன வரலாறு, தொல்லியல் ஆய்வுகள் விடுதலைப் போராட்டங்கள், நுண்ணறிவுத்திறன் போன்ற பாடத்திட்டங்களோடு, முதலமைச்சரின் புகழ் பாடவும் தெரிந்திருக்க வேண்டியது அவசியமா ? என அரசுப்பணிக்கான தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்கள் கேள்வி எழுப்புகின்றனர். எனவே, இனிவரும் காலங்களில் அந்தந்த தேர்வுகளுக்கான பாடத்திட்டங்கள் அடங்கிய கேள்விகள் மட்டுமே இடம்பெறுவதை உறுதி செய்வதோடு, அரசுத்துறைகளில் காலியாக உள்ள லட்சக்கணக்கான பணியிடங்களை உடனடியாக நிரப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.