தமிழ்நாடு – கர்நாடக எல்லையில் உள்ள அத்திப்பள்ளியில் பட்டாசு விற்பனைக் கடையில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி தமிழ்நாட்டைச் சேர்ந்த 14 பேர் உயிரிழந்ததாக வரும் செய்தி வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இதே விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் அனைவரும் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். கடந்த சில நாட்களாக பட்டாசு குடோன்கள் மற்றும் விற்பனைக் கடைகளில் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து பட்டாசு தயாரிக்கும் இடங்கள், குடோன்கள் மற்றும் விற்பனைக் கடைகளில் முறையான பாதுகாப்பு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை ஆய்வு செய்வதோடு, இது போன்ற விபத்துகள் மேலும் ஏற்படா வண்ணம் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறேன்.

கோடியக்கரைக்கு தென்கிழக்கு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்ட மீனவர்களை பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியதோடு, 3 லட்ச ரூபாய் மதிப்புள்ள வலை மற்றும் உபகரணங்களையும் இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்துச் சென்றிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இலங்கை கடற்கொள்ளையர்களின் தாக்குதலில் படுகாயமடைந்த 4 மீனவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவர்கள் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழையும் இலங்கை கடற்கொள்ளையர்கள், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நான்காவது முறையாக நாகை மாவட்ட மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அம்மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவே அச்சப்படும் சூழல் உருவாகியுள்ளது. தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்களைத் தடுத்து நிறுத்தி பாதுகாப்பான முறையில் மீன்பிடித் தொழில் செய்ய ஏதுவாக இந்திய கடற்படை ரோந்து பணியை தீவிரப்படுத்துவதோடு, இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்துச் சென்ற மீனவர்களின் உபகரணங்களை மீட்டுத்தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் வரலாற்றில் முதன்முறையாக 100 பதக்கங்களை வென்று சாதனை படைத்திருக்கும் இந்திய அணியைச் சேர்ந்த வீரர், வீரங்கனைகள் அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 25 தங்கம், 35 வெள்ளி, 40 வெண்கலம் என பங்கேற்ற அனைத்து விளையாட்டு பிரிவுகளும் வெற்றிகளை குவித்திருக்கும் இந்திய அணி, பதக்கப் பட்டியலில் நான்காவது இடத்தில் நீடித்து வருகிறது. சீனா, ஜப்பான், கொரியா ஆகிய நாடுகளுக்கு பிறகு 100 பதக்கங்களை வென்ற அணிகள் பட்டியலில் 4 வது நாடாக இந்தியா இணைந்திருப்பதும், அதில் தமிழ்நாட்டு வீரர்களின் பங்களிப்பு இருப்பதும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. அடுத்த தலைமுறை விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிகளைக் குவித்திருக்கும் இந்திய அணியினர், எஞ்சிய போட்டிகளிலும் பதக்கங்களை வென்று தாய் நாட்டிற்கு மென்மேலும் பெருமை சேர்த்திட எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் முழு நேர மருத்துவர்கள் நியமிக்கப்படாமலும், நோயாளிகளுக்கான அவசர மற்றும் தீவிர சிகிச்சைக்கான மருத்துவ வசதிகள் ஏற்படுத்தி தராமலும் இருப்பது கண்டனத்திற்குரியது. நாள் தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெறும் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்கு தேவையான எவ்வித மருத்துவ வசதிகளும் இல்லை எனக்கூறி அப்பகுதி மக்கள் கடந்த 15 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களுக்கு ஆதரவாக அப்பகுதி வணிகர்களும் முழு கடையடைப்பில் ஈடுபட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. உடல்நலக்குறைவு காரணமாக பாதிக்கப்படும் ஏழை, எளிய மக்கள் அரசு மருத்துவமனயையே நம்பியிருக்கும் சூழலில், கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் போதுமான அளவு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை உடனடியாக நியமிப்பதோடு, தேவையான மருத்துவ வசதிகளையும் ஏற்படுத்தித் தந்து பொதுமக்களின் தொடர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருமாறு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

நாமக்கல் மாவட்டத்தில் எரிவாயு சிலிண்டரில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இருவர் உயிரிழந்ததாக வரும் செய்தி வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். எரிவாயு சிலிண்டரில் ஏற்பட்ட கசிவை சரிசெய்யும் போது எதிர்பாராமல் ஏற்பட்ட தீ விபத்தினால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதே விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிலிண்டர் நிறுவன ஊழியர் அருண்குமார் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

சம வேலைக்கு சம ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கம் பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் அமைதியான முறையில் போராட்டம் நடத்திவந்த ஆசிரியர்களை காவல்துறை கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது. திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த மறுநியமனப் போட்டித்தேர்வு இல்லாமல் பணியமர்த்த வேண்டும், பணி நிரந்தரம் மற்றும் சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி கடந்த ஒரு வாரமாக ஆசிரியர்கள் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தி வந்தனர். பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சரோ, ‘யானைப் பசிக்கு சோளப்பொறி’ என்பது போல 2500 ரூபாய் ஊதிய உயர்வு, சம வேலைக்கு சம ஊதியம் தொடர்பாக ஆய்வு செய்ய குழு என யாருக்கும், எதற்கும் உதவாத வாக்குறுதிகளை அளித்து போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளார். ஊதிய உயர்வு தொடர்பாக கடந்த ஆண்டு அமைக்கப்பட்ட குழுவே செயல்படாத நிலையில், மீண்டும் அரசின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி ஏமாற முடியாது எனக்கூறி தங்களது போராட்டத்தை தொடர்ந்த ஆசிரியர்கள் காவல்துறையினரால் இன்று அதிகாலை வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டு மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் அனைவரையும் எவ்வித நிபந்தனையுமின்றி விடுவிப்பதோடு, அவர்களின் பிரதிநிதிகளை அழைத்து பேசி நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தருமாறு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.