சென்னை திருவொற்றியூர் அருகே இயங்கிவரும் தனியார் பள்ளியில் இரண்டாவது முறை வாயுக்கசிவு – உரிய ஆய்வை மேற்கொள்ளாமல் பள்ளியை திறக்க அனுமதித்து மாணவ, மாணவியர்களின் உயிரோடு விளையாடும் பள்ளிக்கல்வித்துறையின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. சென்னை திருவொற்றியூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்றில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட வாயுக்கசிவால் 30க்கும் அதிகமான மாணவ, மாணவியர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது அதே பள்ளியில் மீண்டும் வாயுக்கசிவு ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே வாயுக்கசிவால் பாதிப்புக்குள்ளான இதே தனியார் பள்ளியில் ஆய்வை மேற்கொண்டு உரிய பாதுகாப்பு வசதியை ஏற்படுத்தாமல் மீண்டும் அப்பள்ளியை திறக்க அனுமதித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. கடந்த முறை ஏற்பட்ட வாயுக்கசிவை தீயணைப்புத்துறையும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் ஆய்வு செய்த நிலையில், அதற்கான முழுமையான விவரங்கள் தற்போது வரை வெளிவராத சூழலில் அவசரகதியில் மீண்டும் பள்ளியை திறந்து மாணவ, மாணவியர்களை பாதிப்புக்குள்ளாக்க வேண்டிய அவசியம் என்ன? எனவே, வாயுக் கசிவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மாணவ, மாணவியர்களுக்கு உரிய சிகிச்சை வழங்குவதோடு, வாயுக்கசிவிற்கான காரணம் குறித்து விரிவான ஆய்வை மேற்கொண்டு மாணவ, மாணவியர்களின் பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே அப்பள்ளியை திறக்க அனுமதிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

தமிழகத்தில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் நடைபெற்ற மோசடியால் 34 கோடி ரூபாய் இழப்பு – பணியை முறையாக கண்காணிக்கத் தவறிய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் நடைபெற்ற மோசடிகள் குறித்து மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகத்தின் தணிக்கைக் குழு நடத்திய ஆய்வின் படி 2023-24 ஆம் நிதியாண்டில் நடைபெற்ற மொத்த மோசடியான 35 கோடி ரூபாயில், 34 கோடி ரூபாய் தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தில் மட்டுமே நடைபெற்றிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. நூறு நாள் வேலைத்திட்டத்தில் இறந்தவர்கள், கிராமத்தில் இல்லாதவர்கள், வெளியூர் வாசிகள், வடமாநிலத்தவர்கள் என வேலைக்கு சம்பந்தமில்லாதவர்களின் பெயர்களை கணக்கு காட்டி மோசடி நடைபெறுவதாக அடிக்கடி ஏற்படும் புகார்களை அரசு அதிகாரிகள் அலட்சியமாக எதிர்கொள்வதே இது போன்ற மோசடிகள் அதிகரிக்க முக்கிய காரணம் என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே, நூறு நாள் வேலைத் திட்டத்தில் போலியான கணக்குகளை காட்டி மோசடியில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இனி வரும் காலங்களில் அத்திட்டத்தின் மீது கூடுதல் கவனம் செலுத்தி முறைகேடுகளை தவிர்ப்பதோடு தகுதியான பயனாளிகள் பயன்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.

பத்திரப்பதிவுத்துறையில் 20 வகையான பதிவுகளுக்கான முத்திரைத்தாள் கட்டணம் உயர்வு – ஏழை, எளிய மக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்றும் முத்திரைத் தாள் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். தமிழகத்தில் வீடு கட்டுமான ஒப்பந்தம், குத்தகை பத்திரம், கிரயம், தானம் மற்றும் செட்டில்மெண்ட் என 20 வகையான பதிவுகளுக்கான முத்திரத்தாள் கட்டணத்தை தமிழக அரசின் பத்திரப்பதிவுத்துறை பன்மடங்கு உயர்த்தியிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. தத்தெடுத்தல், பிரமாணப்பத்திரம், உடன்படிக்கை, சங்கம் பதிவுக்கான கட்டணம் என பெரும்பாலான முத்திரைத்தாள் கட்டணத்தை கடந்த ஆண்டு பன்மடங்கு உயர்த்திய திமுக அரசு, தற்போது சிறிய அளவிலான பண மதிப்புடைய முத்திரைத்தாள் கட்டணத்தையும் உயர்த்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றரை ஆண்டுகளில் பத்திரப்பதிவு கட்டணம், நில வழிகாட்டி மதிப்பு, வீடு வரைபட அனுமதிக் கட்டணம், முத்திரைத்தாள் கட்டணம் என அனைத்து விதமான கட்டணங்களையும் உயர்த்தியிருக்கும் திமுக அரசால், ஏழை,எளிய மக்களின் சொந்த வீடு எனும் கனவு முற்றிலுமாக தகர்ந்துள்ளது. எனவே, பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் முத்திரைத்தாள் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, இனி வரும் காலங்களில் மக்களின் மீது சுமையை ஏற்றாமல் பத்திரப்பதிவுத்துறையின் வருவாயைப் பெருக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.