அண்ணல் நபிகள் நாயகம் பிறந்த திருநாளை மிலாது நபியாக கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். சர்வசக்தியும் படைத்த இறைவன் தனக்கு துணையாக நிற்கும் போது எந்த சக்தியாலும் நம்மை வீழ்த்த முடியாது என்ற நம்பிக்கையை அனைவரின் மனதிலும் விதைத்தவர் நபிகளார் அவர்கள். வீரம், தியாகம், ஒழுக்கம், தூய்மையான அரசியல், யாருக்கும் அஞ்சாமை உள்ளிட்ட எண்ணற்ற சிறப்புகளுக்கு சொந்தக்காரராகவும் நபிகள் நாயகம் திகழ்ந்தார். உலகம் செழிக்கவும், மானுடம் தழைக்கவும் சமுதாயத்தில் சமாதானமும் சகோதரத்துவமும் தவழவேண்டும் என்ற அண்ணல் நபிகளின் போதனைகளை ஏற்று அவரது வழியில் அயராது உழைத்திட உறுதியேற்போம். உலகெங்கும் வாழும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை மிலாது நபி வாழ்த்துக்களை மனமகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

நாகை மாவட்டம் திருக்குவளையை அடுத்த திருவாய்மூரில் கருகிய தனது பயிர்களை கண்டு மனமுடைந்த விவசாயி திரு.எம்.கே.ராஜ்குமார் வயலிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் வேதனையளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காவிரி நீரை நம்பி டெல்டா பகுதிகளில் சாகுபடி செய்திருந்த ஆயிரக்கணக்கான விவசாயிகளில் ஒருவரான திரு.ராஜ்குமாரின் பயிர் போதிய தண்ணீர் இல்லாத காரணத்தினால் முற்றிலும் கருகி வீணான நிலையில், சோகம் தாங்காமல் நெஞ்சுவலி ஏற்பட்டு விவசாய நிலத்திலேயே உயிரிழந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தன் விவசாய நிலத்தில் கருகிய பயிர்களை தானே அழிக்க வேண்டிய சூழல் உருவானதால் மனமுடைந்து உயிரிழந்த விவசாயி ராஜ்குமாரின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்குவதோடு, சட்ட ரீதியாக மட்டுமல்லாமல் அரசியல் ரீதியாகவும் அழுத்தம் கொடுத்து கர்நாடகாவிடம் இருந்து தமிழ்நாட்டிற்கான நீரை பெற்றுத்தந்து விவசாயிகளை காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

கோடியக்கரை அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்ட மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியிருப்பதோடு, கத்தி முனையில் மிரட்டி அவர்களின் மீன்கள் மற்றும் பல லட்ச ரூபாய் மதிப்பிலான உடமைகளை பறித்துச் சென்றிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கோடியக்கரை கடல் பகுதியில் இலங்கை கடற்கொள்ளையர்களின் தாக்குதல் சம்பவங்கள் மூன்றாவது முறையாக அரங்கேறியுள்ளது. ஒருபுறம் இலங்கை கடற்படையினர் மற்றொருபுறம் கடற்கொள்ளையர்கள் என இருபுறமும் தொடர்ந்து நடைபெறும் தாக்குதல் சம்பவங்கள் தொடர்கதையாகி வருவதால் மீனவர்கள் கடலுக்குள் செல்லவே அச்சப்படும் சூழல் உருவாகியுள்ளது. எனவே, மீனவர்கள் மீது நடைபெறும் தாக்குதல் சம்பவங்களை தடுத்து நிறுத்தி பாதுகாப்பான முறையில் மீன்பிடித் தொழில் செய்வதை உறுதிப்படுத்துவதோடு, மீனவர்களிடம் இருந்து கொள்ளையடித்துச் சென்ற அவர்களின் உடமைகளையும் மீட்டுத்தருமாறு மத்திய, மாநில அரசுகளை கேட்டுக் கொள்கிறேன்.

காவிரி நீரை திறந்துவிட மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து சென்னையில் போராட்டம் நடத்திய தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் திரு. பி.ஆர். பாண்டியன் அவர்களை காவல்துறையினர் கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது. காவிரி நீரை நம்பி குறுவை சாகுபடியை தொடங்கிய விவசாயிகள் தண்ணீரின்றி தவித்து வரும் நிலையில், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட திரு. பி.ஆர்.பாண்டியன் அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்வதில் அதிக கவனம் செலுத்தியிருப்பது விவசாயிகள் மீதான அக்கறையின்மையை வெளிப்படுத்துகிறது. அதிகாரம் மற்றும் அடக்குமுறையின் மூலம் விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்க நினைக்கும் எண்ணம் எக்காலத்திலும் நிறைவேறாது என எச்சரிப்பதோடு, இனியாவது விவசாயிகள் பக்கம் நின்று அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.