நாமக்கல் மாவட்டத்தில் எரிவாயு சிலிண்டரில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இருவர் உயிரிழந்ததாக வரும் செய்தி வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். எரிவாயு சிலிண்டரில் ஏற்பட்ட கசிவை சரிசெய்யும் போது எதிர்பாராமல் ஏற்பட்ட தீ விபத்தினால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதே விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிலிண்டர் நிறுவன ஊழியர் அருண்குமார் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

சம வேலைக்கு சம ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கம் பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் அமைதியான முறையில் போராட்டம் நடத்திவந்த ஆசிரியர்களை காவல்துறை கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது. திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த மறுநியமனப் போட்டித்தேர்வு இல்லாமல் பணியமர்த்த வேண்டும், பணி நிரந்தரம் மற்றும் சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி கடந்த ஒரு வாரமாக ஆசிரியர்கள் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தி வந்தனர். பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சரோ, ‘யானைப் பசிக்கு சோளப்பொறி’ என்பது போல 2500 ரூபாய் ஊதிய உயர்வு, சம வேலைக்கு சம ஊதியம் தொடர்பாக ஆய்வு செய்ய குழு என யாருக்கும், எதற்கும் உதவாத வாக்குறுதிகளை அளித்து போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளார். ஊதிய உயர்வு தொடர்பாக கடந்த ஆண்டு அமைக்கப்பட்ட குழுவே செயல்படாத நிலையில், மீண்டும் அரசின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி ஏமாற முடியாது எனக்கூறி தங்களது போராட்டத்தை தொடர்ந்த ஆசிரியர்கள் காவல்துறையினரால் இன்று அதிகாலை வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டு மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் அனைவரையும் எவ்வித நிபந்தனையுமின்றி விடுவிப்பதோடு, அவர்களின் பிரதிநிதிகளை அழைத்து பேசி நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தருமாறு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே தில்லையாடி கிராமத்தில் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, ஏற்பட்ட விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மற்ற தொழிலாளர்கள் அனைவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். தீபாவளி பண்டிகை நெருங்கும் சூழலில் பட்டாசு தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிற்சாலைகளில் ஆய்வு செய்து பாதுகாப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்வதோடு, இது போன்ற விபத்துக்கள் ஏற்படும் முன்னரே தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.

தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் நிர்வாகம் மூலம் உற்பத்தி செய்யப்படும் பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் விநியோகம் எவ்வித முன்னறிவிப்புமின்றி 50 சதவிகிதம் வரை குறைக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. ஆவின் நிர்வாகத்திற்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட பச்சை நிற பாக்கெட்டுகள் விநியோகம் குறைக்கப்பட்டு அதற்கு மாறாக கொழுப்புச் சத்து குறைந்த ஊதா நிற பால் பாக்கெட்டுகள் அதிகளவு விநியோகம் செய்யப்படுவதாக நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளது. திமுக ஆட்சியில் ஓராண்டில் மட்டும் நான்குமுறை ஆவின் பால் பொருட்களின் விலையை வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தியிருப்பதோடு, பண்டிகை நெருங்கும் காலங்களில் பால் உற்பத்தி மற்றும் விநியோகத்தை குறைப்பது மக்கள் மத்தியில் ஆவின் நிர்வாகம் மீது மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பால் திருட்டு, முறைகேடு என ஒட்டுமொத்த ஆவின் நிர்வாகமும் சீர்குலைந்திருப்பதாக புகார் எழுந்திருக்கும் நிலையில், தற்போது நிலவும் பச்சை நிற பால் பாக்கெட் தட்டுப்பாடு என்பது பொதுமக்கள் தனியார் நிறுவன பாலை நாடிச் செல்லும் சூழலை உருவாக்கியுள்ளதாக பால் முகவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மக்கள் விரும்பும் பால் பாக்கெட்டுகளை எவ்வித தட்டுப்பாடின்றி விநியோகம் செய்வதோடு, லாப நோக்கம் பார்க்காமல் பால் உற்பத்தியாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் இணைப்பு பாலமாக ஆவின் நிர்வாகம் செயல்படுவதை தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் 400 மீட்டர் தடை தாண்டுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை வித்யா ராமராஜ் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். முன்னதாக நடைபெற்ற தகுதிச் சுற்றுப் போட்டியில் 55.42 விநாடிகளில் பந்தய தூரத்தை கடந்து இந்தியாவின் தங்கமங்கை என அழைக்கப்படும் பி.டி.உஷாவின் சாதனையை வித்யா ராமராஜ் அவர்கள் சமன் செய்திருப்பதும் பாராட்டுதலுக்குரியது. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் சிறுவயதிலிருந்தே விளையாட்டு மீது ஆர்வம் கொண்டு பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்திருக்கும் வித்யா ராமராஜ், அடுத்தடுத்து உலகளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்று விளையாட்டில் உச்சம் தொட வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிராக அறவழியில் போராட்டம் நடத்திய கிராம மக்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்திருப்பது கண்டனத்திற்குரியது. சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை பரந்தூரில் அமைக்க திட்டமிட்டு அதற்கான முதற்கட்ட பணிகளை அரசு தொடங்கியுள்ள நிலையில், விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் ஓராண்டுக்கு மேலாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். புதிய விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இதுவரை 6 முறை கிராமசபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதிலும், தமிழ்நாடு அரசு தங்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை என அக்கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த நிலையில், புதிய விமான நிலையத் திட்டத்தால் பாதிப்புக்குள்ளாகும் நீர்நிலைகள் குறித்து ஆய்வு செய்ய வந்த அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை காவல்துறையினர் கைது செய்ததோடு 138 பேர் மீது வழக்குப்பதிவு செய்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆகவே, அமைதியான முறையில் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை உடனடியாக திரும்ப பெறுவதோடு, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் விரும்பாத எந்த ஒரு திட்டத்தையும் தமிழ்நாட்டிற்கு கொண்டு வரக்கூடாது என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.