பல வருடங்களாக தொகுப்பூதியத்தில் பணியாற்றும் தங்களை, திமுக தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டிருந்தபடி பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சென்னை தேனாம்பேட்டை DMS வளாகத்தில் அமைதியான முறையில் போராட்டம் நடத்திய செவிலியர்களை வலுக்கட்டாயமாக காவல்துறையினர் கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது. தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்யப்பட்டு 8 வருடங்களாகியும் தற்போது வரை பணி நிரந்தரம் செய்யப்படவில்லை எனக்கூறி செவிலியர்கள் ஜனநாயக முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திமுக தேர்தல் வாக்குறுதி 356-ல் அரசு மருத்துவமனைகளில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்புவதோடு, ஒப்பந்த நியமன முறையில் பணியாற்றி வரும் மருத்துவர்களும், செவிலியர்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என குறிப்பிட்டிருந்தது. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டிய திமுக அரசு, அதற்கு மாறாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களை கைது செய்து அடக்குமுறையை கையாண்டுள்ளது. கொரோனா பேரிடர் காலத்தில் தங்கள் உயிரை பொருட்படுத்தாமல் செவிலியர்கள் ஆற்றிய பணியை நினைவு கூர்ந்து, கைது செய்யப்பட்டுள்ள செவிலியர்கள் அனைவரையும் உடனடியாக விடுவிப்பதுடன், அவர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி, பணிநிரந்தரம் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.

அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அருகே உள்ள விரகாலூர் கிராமத்தில் நாட்டு பட்டாசுகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி இதுவரை 7 பேர் உயிரிழந்திருப்பதாக வரும் செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு – கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் நேற்று முன்தினம் ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் 14 பேர் உயிரிழந்த சுவடுகள் மறையும் முன்னதாகவே இன்று அரியலூரிலும் பட்டாசு விபத்து ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். தீபாவளி நெருங்கும் நிலையில் பட்டாசு தயாரிக்கும் இடங்கள், குடோன்கள் மற்றும் விற்பனைக்கடைகளில் முறையான பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படாததே விபத்து ஏற்படுவதற்கான காரணம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 3 பட்டாசு விபத்துகள் நடைபெற்று அதிகளவிலான உயிரிழப்புகள் ஏற்பட்ட பிறகும் கூட தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. நிவாரணங்கள் மட்டுமே உயிரிழப்புகளுக்கு தீர்வாக அமையாது என்பதை இத்தருணத்தில் உணர்ந்து விபத்துகளையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் தடுத்து நிறுத்திட பட்டாசு தயாரிக்கும் இடங்கள் மற்றும் குடோன்களில் முறையான பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்நாடு – கர்நாடக எல்லையில் உள்ள அத்திப்பள்ளியில் பட்டாசு விற்பனைக் கடையில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி தமிழ்நாட்டைச் சேர்ந்த 14 பேர் உயிரிழந்ததாக வரும் செய்தி வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இதே விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் அனைவரும் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். கடந்த சில நாட்களாக பட்டாசு குடோன்கள் மற்றும் விற்பனைக் கடைகளில் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து பட்டாசு தயாரிக்கும் இடங்கள், குடோன்கள் மற்றும் விற்பனைக் கடைகளில் முறையான பாதுகாப்பு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை ஆய்வு செய்வதோடு, இது போன்ற விபத்துகள் மேலும் ஏற்படா வண்ணம் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறேன்.

கோடியக்கரைக்கு தென்கிழக்கு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்ட மீனவர்களை பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியதோடு, 3 லட்ச ரூபாய் மதிப்புள்ள வலை மற்றும் உபகரணங்களையும் இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்துச் சென்றிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இலங்கை கடற்கொள்ளையர்களின் தாக்குதலில் படுகாயமடைந்த 4 மீனவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவர்கள் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழையும் இலங்கை கடற்கொள்ளையர்கள், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நான்காவது முறையாக நாகை மாவட்ட மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அம்மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவே அச்சப்படும் சூழல் உருவாகியுள்ளது. தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்களைத் தடுத்து நிறுத்தி பாதுகாப்பான முறையில் மீன்பிடித் தொழில் செய்ய ஏதுவாக இந்திய கடற்படை ரோந்து பணியை தீவிரப்படுத்துவதோடு, இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்துச் சென்ற மீனவர்களின் உபகரணங்களை மீட்டுத்தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் வரலாற்றில் முதன்முறையாக 100 பதக்கங்களை வென்று சாதனை படைத்திருக்கும் இந்திய அணியைச் சேர்ந்த வீரர், வீரங்கனைகள் அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 25 தங்கம், 35 வெள்ளி, 40 வெண்கலம் என பங்கேற்ற அனைத்து விளையாட்டு பிரிவுகளும் வெற்றிகளை குவித்திருக்கும் இந்திய அணி, பதக்கப் பட்டியலில் நான்காவது இடத்தில் நீடித்து வருகிறது. சீனா, ஜப்பான், கொரியா ஆகிய நாடுகளுக்கு பிறகு 100 பதக்கங்களை வென்ற அணிகள் பட்டியலில் 4 வது நாடாக இந்தியா இணைந்திருப்பதும், அதில் தமிழ்நாட்டு வீரர்களின் பங்களிப்பு இருப்பதும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. அடுத்த தலைமுறை விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிகளைக் குவித்திருக்கும் இந்திய அணியினர், எஞ்சிய போட்டிகளிலும் பதக்கங்களை வென்று தாய் நாட்டிற்கு மென்மேலும் பெருமை சேர்த்திட எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் முழு நேர மருத்துவர்கள் நியமிக்கப்படாமலும், நோயாளிகளுக்கான அவசர மற்றும் தீவிர சிகிச்சைக்கான மருத்துவ வசதிகள் ஏற்படுத்தி தராமலும் இருப்பது கண்டனத்திற்குரியது. நாள் தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெறும் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்கு தேவையான எவ்வித மருத்துவ வசதிகளும் இல்லை எனக்கூறி அப்பகுதி மக்கள் கடந்த 15 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களுக்கு ஆதரவாக அப்பகுதி வணிகர்களும் முழு கடையடைப்பில் ஈடுபட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. உடல்நலக்குறைவு காரணமாக பாதிக்கப்படும் ஏழை, எளிய மக்கள் அரசு மருத்துவமனயையே நம்பியிருக்கும் சூழலில், கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் போதுமான அளவு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை உடனடியாக நியமிப்பதோடு, தேவையான மருத்துவ வசதிகளையும் ஏற்படுத்தித் தந்து பொதுமக்களின் தொடர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருமாறு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.