விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சகோதரர் திரு. தொல் திருமாவளவன் அவர்களின் சிற்றன்னைதிருமதி.செல்லம்மாள் அவர்கள் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வருத்தத்தையும், வேதனையையும் அளிக்கிறது. சிற்றன்னையை இழந்துவாடும் சகோதரர் திரு. தொல் திருமாவளவன் அவர்களுக்கும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நாகாலாந்து மாநில ஆளுநர் மாண்புமிகு திரு இல.கணேசன் அவர்கள் உடல் நலக்குறைவால் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது.கண்ணியமிக்கத் தலைவராகத் திகழ்ந்த மாண்புமிகு திரு.இல கணேசன் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

கிருஷ்ண ஜெயந்தி திருநாளைக் கொண்டாடி மகிழும் மக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான், எனது என்ற பற்றை நீக்கி இன்பத்தையும், துன்பத்தையும் சமமாகக் கருதுவதோடு, கடமைகளைச் சரிவரச் செய்வதே வாழ்க்கையின் மிக உயர்ந்த தர்மம் என்ற கீத உபதேசத்தை மனதில் நிலைநிறுத்தி மனிதகுலம் மேம்பட நாம் அனைவரும் உறுதியேற்போம். உலகம் போற்றும் ஒப்பற்ற நூலான பகவத்கீதையை அருளிய கிருஷ்ண பகவான் பிறந்த இந்நாளில் மக்கள் அனைவரின் வாழ்விலும் அமைதியும், மகிழ்ச்சியும் தழைத்தோங்கட்டும் எனக்கூறி மீண்டும் ஒருமுறை எனது கிருஷ்ண ஜெயந்தி திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.

ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திலிருந்து நம் இந்தியத் திருநாடு விடுதலை பெற்ற இந்த இனிய நாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இனிய சுதந்திர தினத் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆதிக்கக் கொடுமையிலிருந்தும் அந்நிய பிடியிலிருந்தும் இந்தியத் திருநாட்டை விடுவிப்பதற்காகவும், மக்களின் பிறப்புரிமையாம் சுதந்திரத்தை அடைவதற்கும் தங்களின் வாழ்க்கையை அர்ப்பணித்து உயிர்த் தியாகம் செய்த தன்னலமற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் நாட்டுப்பற்றையும், தியாக உணர்வையும் இந்நாளில் போற்றி வணங்கிடுவோம். நம் முன்னோர்கள் நமக்காகப் போராடிப் பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காப்பதோடு, சாதி, மத, இன, மொழி ஆகிய வேறுபாடுகளைக் களைந்து நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற ஒற்றுமை உணர்வோடு தாய்த் திருநாட்டின் வளர்ச்சிக்காகப் பாடுபட இந்நாளில் உறுதியேற்போம்.

தீர்வு எட்டப்படாமலே முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டம் – வாழ்வாதாரத்திற்காகப் போராடிய தூய்மைப் பணியாளர்களை அடக்கி ஒடுக்கிய திமுக அரசின் ஈவு இரக்கமற்ற செயல் கடும் கண்டனத்திற்குரியது.தூய்மைப் பணிகளைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் சென்னை மாநகராட்சியின் முடிவைக் கண்டித்தும், பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தியும் தூய்மைப் பணியாளர்கள் கடந்த 13 நாட்களாக நடத்தி வந்த அறவழி தொடர் போராட்டம் தீர்வு காணப்படாமலேயே திமுக அரசின் காவல்துறையின் அடக்குமுறையால் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது. சென்னை மாநகரின் தூய்மையைப் பேணிக்காப்பதிலும், மக்களின் சுகாதாரத்தை உறுதிசெய்வதிலும் பெரும்பங்கு வகிக்கும் தூய்மைப் பணியாளர்களின் பணி, ஊதியம், ஓய்வூதியம் போன்ற கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற திமுகவின் 285வது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முன்வராதது கடும் கண்டனத்திற்குரியது.சென்னை ரிப்பன் மாளிகையின் வாயிலில் வாழ்வாதாரத்திற்காகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மைப் பணியாளர்களுக்கு விநியோகிக்கப்பட்ட உணவைத் தடுத்து நிறுத்தியதோடு, மாநகராட்சியின் கழிவறைகளைக் கூட பயன்படுத்த அனுமதி மறுத்த திமுக அரசு, காவல்துறையை ஏவி அவர்களை வலுக்கட்டாயமாகக் கைது செய்திருப்பது ஆணவப்போக்கின் உச்சபட்சமாகும்.அரசாங்கத்திற்காக மட்டுமே பணியாற்றுவோம் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்த தூய்மைப் பணியாளர்களைப் பேச்சுவார்த்தை என அழைத்து தனியாருக்குத்தான் பணியாற்ற வேண்டும் என அமைச்சர்களும் அரசு அதிகாரிகளும் கட்டாயப் படுத்தியிருப்பது திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையையே வெளிப்படுத்துகிறது. எனவே, காவல்துறையினரால் வலுக்கட்டாயமாகக் கைது செய்யப்பட்டுள்ள தூய்மைப் பணியாளர்களை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, தேர்தலுக்கு முன்பாக வழங்கிய 285வது வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்றிட முன்வர வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

திரைத்துறையில் 50 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கும் அன்பிற்குரிய நண்பர் சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அபூர்வ ராகங்கள் தொடங்கி நாளை வெளியாக இருக்கும் கூலி திரைப்படம் வரை மூன்று தலைமுறை ரசிகர் பட்டாளத்தைத் தக்கவைத்து அரைநூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழ்த் திரையுலகின் உச்ச நடிகராகத் திகழும் நண்பர் திரு.ரஜினிகாந்த் அவர்களின் 50 ஆண்டு கால திரைப்பயணம் பல்வேறு அதிசயங்களையும், ஆச்சரியங்களையும் உள்ளடக்கியது. திரைப்படத்தில் மட்டுமல்லாது நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் சூப்பர்ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்களின் கலைப்பயணம் மேன்மேலும் சிறக்க வேண்டும் என்பதோடு அவர் நடிப்பில் உருவாகி நாளை வெளியாக இருக்கும் கூலி திரைப்படம் மாபெரும் வெற்றியடைய மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.