சீனாவில் நடைபெற்று வரும் பாரா ஆசிய விளையாட்டு போட்டிகளில் F51 கிளப் எறிதல் மற்றும் ஆடவர்களுக்கான உயரம் தாண்டுதலில் மூன்று பதக்கங்களையும் வென்ற இந்திய அணி வீரர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஆடவர் உயரம் தாண்டுதலில் சைலேஷ்குமார் தங்கமும், தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெள்ளியும், ராம் சிங் வெண்கலமும் வென்று அசத்தியுள்ளனர். அதே போல F51 கிளப் எறிதலில் பிரணவ் சூர்மா தங்கமும், தராம்பீர் வெள்ளியும், அமித்குமார் சரோஹா வெண்கலமும் வென்றுள்ளனர். கடின உழைப்பு மற்றும் விடா முயற்சியால் சாதனை படைத்திருக்கும் இந்திய வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து நடைபெறும் போட்டிகளிலும் பதக்கங்களை குவித்து தாய்நாட்டிற்கு மென்மேலும் பெருமை சேர்க்க வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

விவசாயத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அரியலூர் மாவட்டத்தில் ஓ.என்.ஜி.சி நிர்வாகம் சார்பாக 10 இடங்களில் அமைக்கவிருக்கும் எண்ணெய் கிணறுகளைத் தடுத்து நிறுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன். காவிரி டெல்டா மாவட்டங்களில் ஏற்கனவே தோண்டப்பட்டிருக்கும் எண்ணெய் கிணறுகளில் இருந்து கசிவு ஏற்பட்டு நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்திருக்கும் நிலையில், தற்போது அரியலூர் மாவட்டத்தில் புதியதாக 10 இடங்களில் எண்ணெய் கிணறுகள் அமைக்க ஓ.என்.ஜி.சி நிறுவனம் முயற்சிப்பது இயற்கை வளங்களை முற்றிலுமாக அழிக்கும் முயற்சியாகும். கடந்த 2020ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட காவிரி டெல்டா வேளாண் மண்டல சட்ட மசோதாவில் தொழிற்சாலைகளை காரணம் காட்டி அரியலூர் மாவட்டத்தின் குறிப்பிட்ட சில பகுதிகள் விடுபட்ட காரணத்தினால் அப்பகுதிகளில் எண்ணெய் கிணறுகளை அமைக்க ஓ.என்.ஜி.சி நிறுவனம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் எண்ணெய் கிணறுகள் அமைக்கும் திட்டத்தை ஆரம்ப நிலையிலேயே தடுத்து நிறுத்துவதோடு, எண்ணெய் கிணறுகள் அமைக்கும் முயற்சிகளை நிரந்தரமாக தடுக்கும் வகையில் அரியலூர் உட்பட காவிரி டெல்டா பகுதிகள் முழுவதையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் விண்கல திட்டத்தின் மாதிரி சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்த இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து அனுப்பப்பட்ட ககன்யான் மாதிரி விண்கலம் திட்டமிட்டபடி விண்ணில் பயணித்து வங்கக் கடலில் இறங்கியுள்ளது. ககன்யான் திட்டம் மூலம் வரும் 2025ஆம் ஆண்டில் இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் விண்வெளி ஆய்வுக்காக அனுப்ப உள்ள நிலையில் அதற்கான முதற்கட்ட சோதனை இன்று வெற்றிகரமாக நடைபெற்று முடிந்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. முதற்கட்ட சோதனையைப் போலவே அடுத்தடுத்த சோதனைகளையும் வெற்றிகரமாக நடத்தி அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவுக்கு பிறகு விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் நான்காவது நாடு என்ற சாதனையைப் படைக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.