வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 37 மீனவர்களைக் கைது செய்திருப்பதோடு அவர்களின் படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்திருக்கும் சம்பவம் கண்டனத்திற்குரியது. இலங்கை கடற்படையினரால் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் இதுவரை விடுவிக்கப்படாத நிலையில், தற்போது மேலும் 37 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருப்பது மீனவ மக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மீனவர்கள் ஒவ்வொரு முறை கைது செய்யப்படும் போதும் மத்திய அரசுக்கு கடிதம் மட்டும் எழுதுவதையே வாடிக்கையாக கொண்டிருக்கும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், மீனவர்கள் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பது தொடர்பாக எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் இதுவரை எடுத்ததாக தெரியவில்லை. ஆகவே, மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்னையை உணர்ந்து, இதுவரை கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுப்பதோடு, மீனவர்கள் எந்த விதமான அச்சமுமின்றி மீன்பிடித் தொழிலைச் செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான காலம் சார்ந்த ஊதிய உயர்வு வழங்கக் கோரி 13 ஆண்டுகளாக போராடி வரும் தமிழக அரசு மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுமாறு தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். மருத்துவப் பணியில் சேர்ந்த 14 ஆண்டுகளில் மத்திய அரசு மருத்துவர்களைவிட மாநில அரசு மருத்துவர்கள் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை குறைவான ஊதியம் பெறுவதாக அரசு மருத்துவர்களுக்கான போராட்டக் குழுவினர் கூறுகின்றனர். கடந்த 2019 ஆம் ஆண்டு இதே கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்ட போது, அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், நேரில் வந்து ஆதரவு தெரிவித்த நிலையில், தற்போது முதலமைச்சரான பின் பலமுறை மனு அளித்தும் தங்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளவில்லை என அரசு மருத்துவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். கொரோனா பரவல் காலத்தில் பொது சுகாதாரத்துறையின் தேவை மற்றும் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து அரசுக்கு உறுதுணையாக இருந்து பாடுபட்ட அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளான மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்குதல் உள்ளிட்டவற்றை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

சீனாவில் நடைபெற்றுவரும் ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தர்மராஜ் சோலைராஜ் மற்றும் துளசி முருகேசன் ஆகிய இருவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மகளிருக்கான பேட்மிண்டன் பிரிவில் துளசி முருகேசன் அவர்களும், ஆடவருக்கான நீளம் தாண்டுதலில் தர்மராஜ் சோலைராஜ் அவர்களும் தங்கப் பதக்கம் வென்று தாய்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர். ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் 26 தங்கம், 30 வெள்ளி, 46 வெண்கலம் என இதுவரை 100க்கும் அதிகமான பதக்கங்களை குவித்திருக்கும் இந்திய அணி வீரர்கள், எஞ்சியிருக்கும் போட்டிகளிலும் பதக்கங்களை வெல்ல எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசியலமைப்புச் சட்டத்தின் உயரிய பொறுப்பு வகிக்கும் ஆளுநர் குடியிருக்கும் மாளிகையின் நுழைவாயிலின் முன்பாக பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. சட்டம், ஒழுங்கு பிரச்னைகளில் கவனம் செலுத்த தவறிய திமுக ஆட்சியில் நாள்தோறும் கொலை, கொள்ளைச் சம்பவங்கள், அரசு அதிகாரிகள் மீது தாக்குதல், போதைப் பொருட்கள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களை தொடந்து ஆளுநர் மாளிகையின் முன்பே பெட்ரோல் குண்டு வீசும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருக்கிறது. காவல்துறையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டில் கடந்த இரண்டு வருடங்களாக சீர்குலைந்திருக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளில் உரிய கவனம் செலுத்தாததே இது போன்ற குற்றச் சம்பவங்கள் நாள்தோறும் நிகழ காரணமாக அமைந்திருக்கிறது. எனவே, தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், இனியாவது கண்விழித்து சட்டம் ஒழுங்கு பிரச்னைகளில் தனிக்கவனம் செலுத்துவதோடு, இது போன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோரை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

மன்னர்கள் காலத்திலேயே மக்களாட்சி முறையை நடைமுறைப் படுத்திய மாமன்னரும், சோழ சாம்ராஜ்யத்தின் பிரம்மாண்ட வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவருமான பொன்னியின் செல்வன் ராஜராஜசோழனின் 1038 வது சதயவிழா இன்று. ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் உலகப் புகழ் பெற்றதாக திகழும் தஞ்சை பெரிய கோவிலை கட்டியதோடு, சிறந்த நிர்வாகம், நீர் மேலாண்மை, விவசாயம், கட்டடக்கலை, பொதுமக்களின் பொருளாதார வளர்ச்சி என அனைத்து துறைகளுக்கும் வழிகாட்டியாக திகழ்ந்த மாமன்னன் ராஜராஜ சோழனின் வீரத்தையும், ஆளுமையையும் எந்நாளும் போற்றி வணங்குவோம்.

கழகம்

அலுவலகம்

முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.