பொய்வழக்குகள் பதிவு செய்வதாக தேவர்குளம் காவல்நிலைய காவலர்கள் மீது பொதுமக்கள் புகார் – அறவழிப் போராட்டத்தை முன்னெடுத்த பொதுமக்களின் மீது நடத்தப்பட்டிருக்கும் தடியடி கடும் கண்டனத்திற்குரியது. திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம், வன்னிகோனேந்தல் பகுதிகளைச் சேர்ந்த ஒன்பது கிராமப் பொதுமக்கள் மீது ஒருதலைபட்சமாக பொய்வழக்குகளை பதிவு செய்வதாக தேவர்குளம் காவல்நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் மீது தொடர் புகார்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், பொய்வழக்குகளை பதிவு செய்யும் தேவர்குளம் காவல்நிலையத்தை கண்டிக்கும் வகையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் திரு.இசக்கிராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் மீது தடியடி நடத்தியிருக்கும் காவல்துறையின் இரக்கமற்ற செயல் கடும் கண்டனத்திற்குரியது. பொதுமக்களின் புகார்களை விசாரணை செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை, எவ்வித காரணமும் இல்லாமல் பொதுமக்கள் மீது பொய்வழக்குகளை பதிவு செய்வதும், அறவழியில் போராடியவர்கள் மீது அடக்குமுறையை கையாண்டு, தடியடி நடத்தியிருப்பதும் உட்சபட்ச அராஜகம். எனவே, பொதுமக்கள் மீது பொய்வழக்குகளை பதிவு செய்வதாக தேவர்குளம் காவல்நிலைய காவலர்கள் மீது எழுந்துள்ள புகார்களை முறையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதோடு, அப்பகுதி மக்கள் மீது பதியப்பட்ட பொய்வழக்குகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும் காவல்துறை மற்றும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

தமிழகத்தில் நிகழும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் சிரமத்திற்குள்ளாகும் பொதுமக்கள் – மின்சாரத்துறையில் உள்ள நிர்வாகச் சீர்கேடுகளை களைந்து மின் உற்பத்தியை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் கோடைவெயிலின் தாக்கம் உச்சத்தை எட்டியிருக்கும் நிலையில் சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட நகர்ப்பகுதிகளில் மட்டுமல்லாது கிராமப்புறங்களிலும் அடிக்கடி நிகழும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். டெல்டா மாவட்டங்களில் முறையான மும்முனை மின்சாரமின்றி கருகும் நெற்பயிர்கள், சீரான மின்விநியோகமின்றி தொழிற்சாலைகள் முடங்கும் அபாயம் என திமுக ஆட்சியில் நிலவும் மின்வெட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நாள்தோறும் வெளியாகும் செய்திகள் மிகுந்த வேதனையளிக்கின்றன. கோடைகாலத்தில் பொதுமக்கள் தொடங்கி தொழிற்சாலைகள் வரையிலான மின்நுகர்வுகளின் பயன்பாடுகள் அதிகரிக்கும் என தெரிந்திருந்தும், அதற்கு தீர்வு காணும் வகையில் எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் ஆளும் திமுக அரசு எடுக்கவில்லை என்பதை அடிக்கடி அரங்கேறும் மின்வெட்டுகளே அம்பலப்படுத்துகின்றன. ஆட்சிக்கு வந்தபின்பு மின் கட்டணத்தை உயர்த்துவதில் குறிக்கோளாய் இருந்து அதனை செயல்படுத்திய திமுக அரசு, பொதுமக்களை பாதிக்கும் மின்வெட்டைப் போக்கவோ, மின்சார உற்பத்தியை அதிகரிக்கவோ எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுத்ததாக தெரியவில்லை. எனவே, பொதுமக்கள், விவசாயிகள், தொழில்துறையினர் என அனைத்து தரப்பினரின் அன்றாட, அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றான மின்சாரத்தை தடையில்லாமல் வழங்குவதை உறுதி செய்வதோடு, மின்சாரத்துறையில் உள்ள நிர்வாகச் சீர்கேடுகளை களைந்து, மாநிலத்தில் மின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

தமிழகத்தில் இன்று வெளியாகியிருக்கும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளில், வெற்றி பெற்று வாழ்க்கையின் அடுத்தகட்ட உயர்கல்வியை நோக்கி பயணிக்க தயாராகியிருக்கும் மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றி வாய்ப்பை நழுவவிட்ட மாணவ, மாணவியர்கள் தேர்வின் முடிவுகளை வாழ்க்கையின் மதிப்பீடுகளாக கருதாமல், விரைவில் நடைபெற இருக்கும் துணைத்தேர்வுகளை மனம் தளராமல் எதிர்கொண்டு, வெற்றிபெற்று வருங்காலத்தில் சிறந்து விளங்க எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சிங்கப்பூரில் நடைபெற்ற சர்வதேச யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற அனைத்து பிரிவுகளிலும் வென்று ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றியிருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த 7 மாணவ, மாணவியர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அமெரிக்கா, மலேசியா, இலங்கை, நேபாளம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சார்ந்த மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற போட்டியில், சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றிருக்கும் மாணவ, மாணவியர்களில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியின் அமமுக 27வது வார்டு கழகச் செயலாளர் திரு.ஆம்ஸ்ட்ராங் அவர்களின் மகள், மாணவி ரிதன்யா அழகுநாச்சியார் அவர்கள் இடம்பெற்றிருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிக்கிறது. தங்களின் தனித்துவமிக்க திறமையால் சிங்கப்பூர் சர்வதேச யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றிருக்கும் மாணவ, மாணவியர்கள் அடுத்தடுத்து நிகழும் உலகளவிலான யோகா போட்டிகளிலும் பங்கேற்று சாதனை படைத்து தாய்நாட்டிற்கும், தமிழ்நாட்டிற்கும் தொடர்ந்து பெருமை சேர்க்க எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.