ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், மாநில உரிமைக்காகவும் போராடிய மார்ஷல் நேசமணியின் பிறந்த நாள் இன்று. இயல்பிலேயே போராட்ட குணம் கொண்டவராகத் திகழ்ந்த திரு.நேசமணி அவர்கள், மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது கேரளாவுடன் இணைக்கப்பட இருந்த கன்னியாகுமரியை தமிழ்நாட்டுடன் சேர்க்க மக்களை திரட்டி போராட்டத்தை முன்னின்று நடத்தி வெற்றி கண்டவர். வளமிக்க குமரியை மீட்டெடுத்ததால் தென்மாவட்ட மக்களால் மார்ஷல் என்று அன்புடன் அழைக்கப்பட்டார். பெருமைக்குரிய திரு.நேசமணியின் பிறந்த நாளில் அவரது விடாமுயற்சியுடன் கூடிய போராட்ட குணம், தமிழ் மொழி, மாநில பற்று ஆகியவற்றை நினைவு கூர்ந்து போற்றுவோம்.

12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாதம் சம்பளம் வழங்கப்படாது என பள்ளிக்கல்விதுறை அறிவித்திருப்பதை வன்மையாக கண்டிக்கின்றேன். பணி நிரந்தரம் செய்யக் கோரியும், மே மாதம் சம்பளம் வழங்கக் கோரியும் பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் நடத்தியபோது அவர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று கூறிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், இப்போது பகுதி நேர ஆசிரியர்களின் வயிற்றில் அடிப்பது போல சம்பளம் வழங்க மறுப்பது ஏன்? குறைந்த சம்பளத்தில் வீட்டு வாடகை, குடும்ப செலவு என ஏற்கனவே கடனில் தவித்து வருகின்ற பகுதி நேர ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொள்ளாமல் ஒரு மாத சம்பளம் தரப்படாது என்று அறிவிப்பதுதான் திராவிடமாடல் ஆட்சியா? 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களுக்கும் மே மாத சம்பளம் உடனே வழங்க நடவடிக்கை எடுப்பதுடன் திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தபடி அவர்களை பணி நிரந்தரம் செய்யவும் முதலமைச்சர் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றேன்.

நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வைக்கு உதாரணமாகத் திகழ்ந்தவர், தென்பாண்டி சிங்கம் என போற்றப்பட்டவருமான வாளுக்கு வேலி அம்பலம் அவர்களின் பிறந்த நாள் இன்று. 18ஆம் நூற்றாண்டில் பாகனேரி நாட்டின் தலைவராக திகழ்ந்த மாவீரர் வாளுக்குவேலி அம்பலம், மருது சகோதரர்களுக்கு துணை நின்று ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை துணிவுடன் எதிர்த்து, சூழ்ச்சியால் வீரமரணம் அடைந்தவர். சிவகங்கை மாவட்டம் பாகனேரி சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் வாளுக்குவேலி அம்பலத்தை தங்கள் குல தெய்வமாகவே வழிபடுகின்றனர். மாவீரர் வாளுக்குவேலி அம்பலத்தின் பிறந்த நாளில் அவரது துணிவு மிக்க ஆளுமையை நினைவு கூர்ந்து போற்றுவோம்.

அகில இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பில் இந்த ஆண்டுக்கான விளையாட்டு போட்டிகள் கடந்த 6ஆம் தேதி டெல்லியில் தொடங்கிய நிலையில் தமிழ்நாட்டில் இருந்து பள்ளிகள் சார்பில் ஒரு மாணவர் கூட பங்கேற்கவில்லை என்ற தகவல் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. போட்டிகளில் பங்கேற்க 247 மாணவர்களை அனுப்புமாறு லக்னோவில் இருந்து விளையாட்டு குழுமம் சார்பில் கடந்த மே மாதம் 11ஆம் தேதி தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் உள்ள உடற்கல்வி முதன்மை ஆய்வாளருக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு, அதனை பள்ளிக்கல்வித்துறை கவனிக்காமல் அலட்சியப்படுத்தியதால் மாணவர்கள் போட்டியில் பங்கேற்க இயலவில்லை என ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன. தேசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெறும் மாணவர்கள் உயர்கல்வியில் இட ஒதுக்கீட்டிற்கு கூடுதல் மதிப்பெண்கள் பெறுவதற்கும் இது வழிவகுக்கும் என்று சொல்லப்படும் நிலையில், பள்ளிக்கல்வித்துறையின் அலட்சியத்தால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். போட்டிகளுக்கு மாணவர்களை அனுப்பக்கோரிய தகவலை உரிய முறையில் உயர் அதிகாரிகளுக்குத் தெரிவிக்காமல் அலட்சியமாக இருந்தவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பதுடன், இனிவரும் தேசிய அளவிலான போட்டிகளில் தமிழ்நாடு பள்ளி மாணவர்கள் பங்கேற்பதை உறுதி செய்ய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வேளாண் பயிர்கள் முற்றிலும் சேதம் அடைந்து விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடலூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சூறைகாற்றுடன் கூடிய கனமழையால் வாழை, சோளம், முருங்கை, தென்னை, பப்பாளி ஆகிய பயிர்கள் முற்றிலும் சேதம் அடைந்த நிலையில் விவசாயிகளுக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அதில் இருந்து தற்போதுதான் மீண்டு வந்து மீண்டும் கடன் வாங்கி கோடைகால பயிர் செய்த நிலையில் சூறாவளி காற்றில் அவையும் சேதம் அடைந்ததால் பெரும் வேதனையில் தவிக்கின்றனர். எனவே, தமிழ்நாடு முழுவதும் வேளாண்துறை அதிகாரிகள் சேத விவரங்களை மதிப்பீடு செய்து பாதிப்புகள் குறித்த விவரங்களைத் தாக்கல் செய்யும் வரை காத்திருக்காமல், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இடைக்கால நிவாரணம் உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வை தமிழ்நாடு அரசு ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்ட பாதிப்பில் இருந்து பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள் இன்னும் மீளமுடியாத சூழலில், தற்போது மீண்டும் தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்டணம் உயர்த்தப்படிருப்பது கண்டிக்கத்தக்கது. தொழில் நிறுவனங்களுக்கு உயர்த்தப்படும் மின் கட்டணத்தால் ஏற்படும் பாதிப்பு அந்நிறுவனங்களுடன் மட்டும் முடிந்து விடுவதில்லை. உற்பத்தி பொருட்கள், சேவைகள் ஆகியவற்றைச் சார்ந்திருக்கும் வாடிக்கையாளர்களான பொதுமக்கள் மீதுதான் மின் கட்டண உயர்வை தொழில் நிறுவனங்கள் சுமத்தும். எனவே இந்த மின் கட்டண உயர்வு நேரடியாக பொதுமக்களையே பாதிக்கும் என்பது விடியா திமுக அரசுக்கு புரியாதா? மேலும், கடந்த ஆண்டு மின் கட்டண உயர்வால் பாதிக்கப்பட்ட சென்னை, கோவை, திருப்பூர், மதுரை, நெல்லை போன்ற தொழில் நகரங்களில் உள்ள பெரும்பாலான சிறுதொழில் நிறுவனங்கள் இன்னும் அவற்றில் இருந்து மீள முடியாத நிலையில், மின் கட்டண உயர்வு தொழில் நிறுவனங்களை மேலும் கடுமையாக பாதிக்கும். மின்சார வாரியம் நஷ்டத்தில் இயங்குகிறது என்ற காரணத்தைக் கூறாமல், மின் கொள்முதல், நிலக்கரி கொள்முதல், வீடு, தொழிலக மின் இணைப்பு வழங்குதல் போன்றவற்றில் நிலவுதாக சொல்லப்படும் முறைகேடுகளை முற்றிலும் களைந்து சீர்த்திருத்தம் செய்தாலே மின்வாரியம் லாபத்தை நோக்கி செயல்பட முடியும். அதை விடுத்து அவ்வப்போது மின் கட்டணத்தை உயர்த்தி மக்களின் வாழ்வை இருளில் தள்ளுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, தற்போது அறிவிக்கப்பட்ட மின் கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

வேலூர் மாவட்டம், சத்துவாச்சேரியில் உள்ள ஆவின் பால் பண்ணையில் கடந்த 2 ஆண்டுகளாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள பால் நூதன முறையில் திருடப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தி அதிர்ச்சியளிக்கிறது. கண்காணிப்பு கேமராக்கள், வருகைப் பதிவேடு, ஒப்பந்த வாகனங்கள் பதிவேடு என பல்வேறு கண்காணிப்பு முறைகள் இருந்தபோதிலும் ஒரே பதிவு எண் கொண்ட இரண்டு வேன்களில் தினமும் சுமார் 2500 லிட்டர் பால் பாக்கெட்டுகள் திருடப்பட்டிருப்பது என்பது ஆவின் அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் ஆட்சியாளர்கள் துணையின்றி நடந்திருக்க வாய்ப்பில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. இனி இது போன்ற பால் திருட்டு நடைபெறாதவாறு அனைத்து ஆவின் பண்ணைகளிலும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்துவதோடு, பால் ஏற்றிச் செல்லும் ஒப்பந்த வாகனங்களின் வருகைப் பதிவை தணிக்கைக்கு உட்படுத்துவதுடன், இரண்டு ஆண்டுகளாக பல லட்சம் லிட்டர் பால் திருட்டில் ஈடுபட்டோர் மற்றும் அவர்களின் தொடர்புகள் ஆகியவற்றை முழுமையாக கண்டறிய சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

அம்பத்தூரில் உள்ள ஆவின் பால் பொருட்கள் தயாரிப்பு பண்ணையில் ஒப்பந்தப் பணியாளர்களாக 50க்கும் மேற்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு, அவர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படவில்லை என ஊடகங்களில் வெளியான செய்தி அதிர்ச்சியளிக்கிறது. தங்களை ஒப்பந்தம் மூலம் ஆவினில் பணியமர்த்திய நிறுவனம் முறையான சம்பளம் வழங்கவில்லை என சிறார்கள் ஆவின் பண்ணை முன்பு கொளுத்தும் வெயிலில் போராட்டம் நடத்தியதன் மூலம் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. தொழிலாளர் சட்டத்தை மீறி இரண்டு மாதமாக ஐஸ்க்ரீம் தயாரிப்பு பிரிவில் பேக்கேஜிங் (PACKAGING) பணியில் சிறார்களை ஒப்பந்த நிறுவனம் மூலம் ஆவின் நிறுவனம் பணியில் ஈடுபடுத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். குழந்தைத் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தும் தனியார் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுவது போல ஆவின் நிறுவனத்துக்கும், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் நிறுவனத்துக்கும் அபராதம் விதிக்கப்படுவதுடன், இதனை அனுமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றேன். மேலும், சிறார்களுக்கு உரிய சம்பளம் வழங்க உத்தரவிடுவதுடன், அவர்கள் கல்வி கற்பதற்கான சூழலை ஏற்படுத்த தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மூன்றாவது சிப்காட் அமைக்க சூளகிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட மூன்று கிராமங்களில் 3,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளில் ஒருவர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்த செய்தி அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். தங்களது வாழ்வாதாரத்தின் ஆதாரமாக விளங்கும் விவசாய நிலங்கள் பறிபோன கவலையில் உண்ணாவிரதம் இருந்த விவசாயிகளில் மேலும் இருவர் மயக்கம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் 150 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தபோதிலும் திமுக அரசு அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவராமல் இன்று வரை வேடிக்கை பார்த்துவருவது கண்டிக்கத்தக்கதாகும். எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது விவசாயிகளின் காவலராக காட்டிக் கொண்ட முதலமைச்சர், ஆட்சிக்கு வந்தபின் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் புதிய விமான நிலையம், சேலம்-சென்னை பசுமை வழி சாலை, சூளகிரியில் 3ஆவது சிப்காட் அமைத்தல் ஆகியவற்றுக்கு விவசாயிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி நிலம் கையகப்படுத்தும் விஷயத்தில் மனம் போன போக்கில் செயல்பட்டு வருவதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் குற்றம் சாற்றுகின்றனர். விவசாய நிலத்தில் வைரமே கிடைத்தாலும் அதனை எக்காரணம் கொண்டும் அழிக்கக் கூடாது என்பதே அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடு. ஆகவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3ஆவது சிப்காட் அமைக்க கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விவசாயிகளிடம் திரும்ப ஒப்படைத்து அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முதலமைச்சர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.