மதுரை அவனியாபுரம் திருப்பரங்குன்றம் சாலையில் அமைந்துள்ள மக்கள் திலகம் புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் அவர்களின் திருவுருவச் சிலை அடையாளம் தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. கோடிக்கணக்கான மக்களில் ஒருவராக, ஏழைப் பங்காளராக, எளியோரின் நண்பராக, உழைக்கும் வர்க்கத்தின் உற்ற தோழராகத் திகழ்ந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவச் சிலையைச் சேதப்படுத்துவதால் அவருடைய புகழும், பெருமையும் துளியளவும் ஒருநாளும்குறையப்போவதில்லை. கோடான கோடி மக்களுக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் செயல்படுத்திய சாதனைகளும், அமல்படுத்திய நலத்திட்டங்கள் அனைத்தும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் கடந்தும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கக் கூடியவை ஆகும்.எனவே, இதயதெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவச் சிலையைச் சேதப்படுத்திய அடையாளம் தெரியாத நபர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்த தலைவர்களின் சிலைகளுக்கு உரியப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் மீது சரமாரி தாக்குதல் – மக்களின் உயிரைக் காக்கும் மகத்தான பணியில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்களைப் பாதுகாக்க வேண்டியது தமிழக அரசின் கடமை.சிவகங்கை மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் பணியிலிருந்த பயிற்சி மருத்துவர் மீது நோயாளி ஒருவரின் உறவினர்கள் தாக்குதல் நடத்தியிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. மருத்துவர் மீது நடைபெற்ற தாக்குதல் சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் உட்பட அனைத்துவிதமான ஆதாரங்களைத் தாக்கல் செய்தபின்பும் நடவடிக்கை எடுக்கத் தவறிய காவல்துறையால் அதிருப்தியடைந்த பயிற்சி மருத்துவர்கள் ஒன்றிணைந்து போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.பேரிடர் காலங்களில் தொடங்கி பெருந்தொற்று காலம் வரை தன்னுயிரைப் பொருட்படுத்தாமல் பொதுமக்களின் உயிரைக் காக்கும் மகத்தான பணியில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் தொடர்கதையாகி வருவது ஒட்டுமொத்த மருத்துவர்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. எனவே, சிவகங்கை அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும், அங்கு பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

அனைத்து உயிர்களையும் தம் உயிரைப் போல எண்ண வேண்டும் என்ற உயரிய கொள்கையைப் போதித்து, சாதி, மத, பேத வேறுபாடுகளைக் களைந்து சமரச சன்மார்க்கத்தை நிறுவியவருமான திருஅருட்பிரகாச வள்ளலார் அவர்களின் பிறந்த தினம் இன்று. தருமச்சாலையை நிறுவி ஏழை, எளிய மக்களின் பசியைப் போக்கியதோடு, தன்னை நாடி வருவோருக்கு ஆண்டவனை அடையும் அருளியலை மட்டும் போதிக்காமல், ஒழுக்க நெறிகளையும் கடைப்பிடிக்க உபதேசித்த வள்ளலார் அவர்களின் வாழ்வியல் நெறிமுறைகளைப் பின்பற்றி வாழ்ந்திட நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.