மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளரும், மூத்த அரசியல்வாதியுமான திரு.சீதாராம் யெச்சூரி அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. அரசியல்வாதியாக, பொருளாதார நிபுணராக, எழுத்தாளராக பன்முகத்தன்மை கொண்டவராக திகழ்ந்த திரு.சீதாராம் யெச்சூரி அவர்களை இழந்துவாடும் உறவினர்களுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

பணிநிரந்தரம் கோரி 13 ஆண்டுகளாக போராடி வரும் பகுதிநேர ஆசிரியர்களை அலைக்கழிக்கும் திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது – தேர்தல் வாக்குறுதியின்படி பகுதிநேர ஆசிரியர்களை உடனடியாக பணிநிரந்தரம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ”பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றிவரும் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என்ற திமுகவின் 181வது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை எழும்பூரில் நூற்றுக்கணக்கான பகுதிநேர ஆசிரியர்கள் குடும்பத்தினருடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 2012 ஆம் ஆண்டு பகுதிநேர ஆசிரியர்களாக பணியமர்த்தப்பட்ட தங்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பலமுறை கோரிக்கை விடுத்தும் தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு கடந்த மூன்றாண்டுகளாக நடைபெறும் ஒவ்வொரு போராட்டத்தின் போதும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளிக்கும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், அதற்கான எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்தி ஆசிரியர்களை அலைக்கழிப்பது கடும் கண்டனத்திற்குரியது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வாக்குறுதிகளை அள்ளி வீசுவதையும், ஆட்சிக்கு வந்த பின்பு அதை நிறைவேற்ற மறுப்பதையுமே வாடிக்கையாக கொண்டிருக்கும் திமுக அரசால் பொதுமக்கள் தொடங்கி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து ஊழியர்கள், மின்வாரிய ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்து தரப்பினருமே வீதிக்கு வந்து போராடும் சூழல் தற்போது உருவாகியுள்ளது. எனவே, குடும்பத்துடன் உண்ணாவிரதம் மேற்கொண்டிருக்கும் பகுதிநேர ஆசிரியர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்துவதோடு, அவர்களின் நியாயமான கோரிக்கையான பணிநிரந்தரம் செய்வதற்கான நடவடிக்கைகளை உடனடியாக தொடங்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியல் உரிமைகளை மீட்கவும், ஏற்றத் தாழ்வில்லா சமுதாயத்தை உருவாக்கவும் தொடர்ந்து போராடிய திரு.இமானுவேல் சேகரனார் அவர்களின் நினைவுதினம் இன்று. சமூக விடுதலை மற்றும் தீண்டாமைக்கு எதிரான போராட்டத்திற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த திரு.இமானுவேல் சேகரனார் அவர்களின் நினைவு நாளில் அவரின் சமூகப் பங்களிப்பை நினைவில் கொண்டு போற்றும் விதமாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அமைந்துள்ள அன்னாரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

”எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவை எண்ணல் வேண்டும் திண்ணிய நெஞ்சம் வேண்டும் தெளிந்த நல்லறிவு வேண்டும்” என்ற வரிகளுக்கு ஏற்ப தான் கொண்ட உறுதியாலும், தன்னம்பிக்கையாலும் தடைகளை தகர்த்தெறிந்த மகாகவி பாரதியார் அவர்களின் நினைவுதினம் இன்று… தமிழ், தமிழர் நலன், பெண் விடுதலை, சாதிமறுப்பு என பொதுநலனுக்காக மட்டுமே தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்து, தன் பேச்சால், எழுத்தால், செயலால் நாட்டு மக்களிடையே விடுதலைப் புரட்சியை தூண்டிய மகாகவி பாரதியார் அவர்களை நினைவில் வைத்து போற்றுவோம்…

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.