சென்னை அயனாவரத்தில் பத்துக்கும் மேற்பட்ட நபர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட மாணவி – குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். சென்னை அயனாவரத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி ஒருவரை ஒரு வருடத்திற்கு மேலாக பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. பாதிப்புக்குள்ளான மாணவியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் கொடூரக் கும்பலைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமிருக்கும் குற்றவாளிகளை கைது செய்வதில் காவல்துறை அலட்சியம் காட்டுவதாக புகார் எழுந்திருக்கிறது. மனநலம் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவரை ஒரு வருடத்திற்கும் மேலாக அடையாளம் தெரியாத கும்பல் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியிருப்பது, தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் சர்வ சாதாரணமாகி வருவதையே வெளிப்படுத்துகிறது. எனவே, மனநலம் பாதிக்கப்பட்ட மாணவியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய கும்பலைச் சேர்ந்த அனைவரையும் கைது செய்து கடுமையான தண்டனையை பெற்றுத் தருவதோடு, இனியாவது காவல்துறை விழிப்புடன் செயல்பட்டு பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பங்களை தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

கரூர் அருகே மருத்துவ முகாமில் பங்கேற்க வந்த தூய்மைப் பணியாளர்களை குப்பை அள்ளும் வாகனத்தில் அழைத்துச் சென்ற அவலம் – பேரிடர் மற்றும் பெருந்தொற்று காலங்களில் தன்னலம் கருதாமல் மக்களை பாதுகாத்திடும் தூய்மைப் பணியாளர்களுக்கு திமுக அரசு கொடுக்கும் மரியாதை இதுதானா ? கரூரில் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் பங்கேற்க வந்த அம்மாவட்டத்தைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்களை குப்பை அள்ளும் வாகனத்தில் அழைத்துச் சென்றிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. மழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர் காலங்கள் மட்டுமல்லாது, கொரோனா போன்ற பெருந்தொற்று காலங்களிலும் தன்னலம் கருதாமல், நேர காலம் பார்க்காமல் அயராது உழைக்கும் முன்களப் பணியாளர்களான தூய்மைப் பணியாளர்களை சக மனிதர்களாக கூட பார்க்கும் மனநிலை இல்லாத திமுக அரசின் அதிகாரப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட தூய்மைப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை கூட ஏற்க முன்வராத முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், ஆண்டுக்கு ஒருமுறை அவர்களுடன் அமர்ந்து உணவு உண்பது போல புகைப்படம் எடுத்துக் கொள்வதாலும், அவ்வப்போது புகழ்ந்து பேசுவதாலும் அவர்களுக்கு எந்தவித பயனுமில்லை. எனவே, தூய்மைப் பணியாளர்களை குப்பை அள்ளும் வாகனத்தில் அழைத்துச் சென்ற அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, மக்களை பாதுகாக்கும் பணியில் இரவு பகலாக ஈடுபடும் தூய்மைப் பணியாளர்களுக்கு இனிவரும் காலங்களில் உரிய மரியாதையை வழங்கிட வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

பல்லாவரம் அருகே கழிவுநீர் கலந்த குடிநீரை அருந்திய இருவர் உயிரிழப்பு – பொதுமக்களுக்கு தேவையான குடிநீரைக் கூட சுத்தமாக விநியோகிக்கத் தவறிய திமுக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. தாம்பரம் மாநகராட்சி 13வது வார்டுக்கு உட்பட்ட காமராஜ் நகர், பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் கழிவுநீர் கலந்த குடிநீரை அருந்தி பாதிப்புக்குள்ளான 30க்கும் அதிகமானோர்களில் இரண்டு பேர் உயிரிழந்திருப்பதாக வரும் செய்திகள் மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கின்றன. பருவமழைக் காலங்களில் பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றான குடிநீரைக் கூட முறையாகவும், சுத்தமாகவும் விநியோகிக்கத் தவறிய தாம்பரம் மாநகராட்சி மற்றும் திமுக அரசின் மெத்தனப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. மாநகராட்சி மூலமாக விநியோகிக்கப்படும் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு போன்ற உடல் உபாதைகள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் அளித்த புகார் மனுக்களை அலட்சியமாக எதிர்கொண்டதன் விளைவே இன்று விலைமதிப்பில்லாத இரண்டு உயிர்களை இழக்கும் அளவிற்கான சூழலை உருவாக்கியுள்ளது. எனவே, கழிவுநீர் கலந்த குடிநீரை அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்போருக்கு உரிய சிகிச்சை வழங்குவதோடு, பல்லாவரம் பகுதி முழுவதும் மருத்துவ முகாம்களை அமைத்து பொதுமக்களுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.