ஊடகத்துறையில் 30 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்து 31 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ராஜ் குழும தொலைக்காட்சிகளுக்கும், அதன் நிர்வாகிகளுக்கும் ஊழியர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பல்வேறு கோணங்களில் கிடைக்கும் செய்திகளை அதன் உண்மைத் தன்மை மாறாமல் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் தலை சிறந்த செய்தி தொலைக்காட்சியாகவும், பாரம்பரியமிக்க நிறுவனமாகவும் செயல்பட்டு வரும் ராஜ் குழும தொலைக்காட்சிகளின் பணி மிகுந்த பாராட்டுக்குரியது. மக்களின் பிரச்னைகளை மட்டுமே கூறிவிட்டு கடந்து செல்லாமல் அதற்கான தீர்வையும் நோக்கி பயணிக்கும் ராஜ் தொலைக்காட்சி, எந்தவித விருப்பு வெறுப்புமின்றி தொடர்ந்து நடுநிலையோடு பயணித்து மென்மேலும் பல சாதனைகள் படைக்க மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் முன்னாள் தலைவரும், பொதுநலனுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்தவருமான திரு. P.K மூக்கையாத் தேவர் அவர்களின் மூத்த மகன் திரு. P.K.M சுப்பிரமணியன் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது. திரு. P.K.M சுப்பிரமணியன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே தடம் புரண்ட மைசூரு – தர்பங்கா எக்ஸ்பிரஸ் ரயில், நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் மீது மோதி விபத்துக்குள்ளாகியிருப்பது துரதிஷ்டவசமானது. ரயில் விபத்தில் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அனைத்து பயணிகளும் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டும் என எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கும் இதே நேரத்தில், இனி வரும் காலங்களில் இது போன்ற ரயில் விபத்துக்கள் ஏற்படா வண்ணம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.

சென்னையில் சேதமடைந்த சாலைகளிலும் பள்ளங்களிலும் தேங்கிநிற்கும் மழைநீரால் அதிகரிக்கும் விபத்துக்கள் – பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் உயிரோடு விளையாடும் திமுக அரசின் மெத்தனப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. சென்னை வேளச்சேரி சாலையில் இருந்த பள்ளத்தில் தவறி விழுந்த நபர், குண்டும் குழியுமான ஆலந்தூர் சுரங்கப்பாதையில் நிலை தடுமாறிய தனியார் நிறுவனத்தின் இளம்பெண் என கடந்த ஒருவாரத்தில் மட்டும் இரண்டு பேர் உயிரிழந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சென்னை மட்டுமல்லாது தமிழகம் முழுவதுமே சாலைப்பணிகளுக்காக தோண்டப்படும் பள்ளங்கள், முறையாக மூடப்படாததன் காரணமாக அதில் தேங்கி நிற்கும் மழைநீரில் வாகன ஓட்டிகள் தவறி விழுந்து விபத்துக்குள்ளாவதையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் தடுக்கத் தவறிய தமிழக அரசின் மெத்தனப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. பிரதான சாலைகளில் ஏற்பட்டிருக்கும் பள்ளங்கள், மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்டு மூடப்படாமல் இருக்கும் குழிகள் என ஒவ்வொரு நாளும் பல்வேறு விதமான பள்ளம், மேடுகளை கடந்து உயிரைப் பணயம் வைத்து பயணம் செய்ய வேண்டிய அவலநிலைக்கு பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் தள்ளப்பட்டுள்ளனர். சென்னை போன்ற பெருநகரங்களில் சாலைகளில் காணப்படும் பள்ளங்களை சீரமைப்பதில் மாநகராட்சி நிர்வாகம் காட்டும் அலட்சியம் குறித்தும், ஆமை வேகத்தில் நடைபெறும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் குறித்தும் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததே விபத்துக்களுக்கும், உயிரிழப்புகளுக்கும் முக்கிய காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் சேதமடைந்திருக்கும் சாலைகளை உடனடியாக சீரமைப்பதோடு, வடகிழக்கு பருவமழை தீவிரமடைவதற்கு முன்பாகவே அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளவேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.