தமிழ் உயரவும், தமிழர்கள் தமது உரிமையை பெற்றிடவும் தமிழக அரசியல் வரலாற்றை புரட்டிப் போட்ட அரசியல் ஞானி, தாய்நாட்டிற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டி தமிழக மக்களின் உள்ளங்களிலும் எண்ணங்களிலும் எந்நாளும் நிலைத்து நிற்கும் தென்னாட்டு பெர்னாட்ஷா பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு தினம் இன்று. தெளிவான சிந்தனை, ஆற்றல் மிக்க பேச்சு மற்றும் உணர்ச்சிப் பூர்வமான எழுத்துகளால் தமிழ்ச் சமுதாயத்தை தட்டி எழுப்பியதோடு, தாம் வகுத்த இலக்கணங்களுக்கு தாமே இலக்கியமாக வாழ்ந்து காட்டிய மாபெரும் தலைவர் பேரறிஞர் அண்ணா அவர்களின் புகழும் அவர் ஆற்றிய அரும்பெரும் பணிகளும் தமிழ் இனம் இருக்கும் வரை நிலைத்து நிற்கும்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைச் சம்பவத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த பத்திரிகையாளர்களை அச்சுறுத்துவதா ?- விசாரணை எனும் பெயரில் பத்திரிகையாளர்களை குற்றவாளிகளைப் போல சித்தரிப்பது கடும் கண்டனத்திற்குரியது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை பொதுவெளியில் வெளியானது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிறப்பு புலனாய்வு குழு (SIT) முன்பாக ஆஜராகும் பத்திரிகையாளர்களை குற்றவாளிகளை போல நடத்துவதாக புகார் எழுந்துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுக்கு முரணாக வாட்ஸ் அப் மூலமாக சம்மன் அனுப்புவதோடு, விசாரணைக்கு ஒத்துழைக்கும் வகையில் ஆஜராகும் பத்திரிகையாளர்களின் செல்போன்களை பறிமுதல் செய்வதும், வழக்கிற்கு சிறிதளவும் சம்பந்தமில்லாத கேள்விகளை கேட்டு அவர்களை அச்சுறுத்துவதும் கடும் கண்டனத்திற்குரியது. பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் படி பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை பாதுகாக்க வேண்டிய காவல்துறையே அதனை பொதுவெளியில் கசிய வைத்துவிட்டு, அப்பிரச்னையை மக்கள் மன்றத்திற்கு கொண்டு வந்து பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆதரவாக நிற்கும் பத்திரிகையாளர்கள் மீது பழியை போட முயற்சிப்பதாக மூத்த பத்திரிகையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, விசாரணைக்கு ஆஜராகும் பத்திரிகையாளர்களை அச்சுறுத்துவதையும், அவர்களிடமிருந்து செல்போன்களை பறிமுதல் செய்வதையும் உடனடியாக நிறுத்துவதோடு, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை நேர்மையான முறையில் விசாரித்து உண்மைக் குற்றவாளிகளை கண்டறியத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சிறப்பு புலனாய்வுக் குழுவையும், தமிழக காவல்துறையையும் வலியுறுத்துகிறேன்.

திருவண்ணாமலை அருகே மூன்று ஆண்டுகளாக மின்சார வசதியின்றி தவிக்கும் பழங்குடியின மக்கள் – பள்ளிக் குழந்தைகளை தீப்பந்த வெளிச்சத்தில் படிக்க வைத்திருப்பதுதான் திமுக அரசு தந்த விடியலா ? திருவண்ணாமலை மாவட்டம் தென்சேந்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின மக்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக மின்சார வசதியின்றி தவித்து வருவதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையை ஏற்படுத்துகின்றன. மத்திய அரசின் பிரதமர் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் பழங்குடியின மக்களுக்காக கடந்த 2021 ஆம் ஆண்டு கட்டி கொடுக்கப்பட்ட வீடுகளுக்கு, அடிப்படை வசதிகளில் ஒன்றான மின்சார இணைப்பைக் கூட வழங்காமல் காலம் தாழ்த்தி வரும் தமிழக மின்சாரத்துறையின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. மின்சார வசதி இல்லாத காரணத்தினால் பள்ளி செல்லும் குழந்தைகள் தீப்பந்த வெளிச்சத்தில் கல்வி பயிலும் அவல நிலை ஏற்பட்டிருப்பதோடு, இரவு நேரங்களில் விஷ ஜந்துகளுக்கு பயந்து அச்சத்துடனே உறங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருப்பதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, திருவண்ணாமலை மாவட்டம் தென்சேந்தமங்கலம் கிராமத்தில் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியில் உடனடியாக மின்வாரிய அதிகாரிகளை அனுப்பி ஆய்வு மேற்கொள்வதோடு, அப்பகுதியில் உள்ள அனைத்து குடியிருப்புகளுக்கும் மின்சார இணைப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என மின்சாரத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu @TANGEDCO_Offcl

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.