ஃபெஞ்சல் புயல் கரையை கடந்தும் பாதிப்பிலிருந்து மீள முடியாத பொதுமக்கள் – உணவுக்காக மக்களை வீதிக்கு வந்து போராடும் சூழலை ஏற்படுத்திய திமுக அரசின் அக்கறையின்மை கடும் கண்டனத்திற்குரியது. ஃபெஞ்சல் புயல் கரையை கடந்து மூன்று தினங்கள் ஆன பின்பும் அதன் பாதிப்பிலிருந்து மீள முடியாமல் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்ட மக்கள் தவித்து வருவதாக வரும் செய்திகள் மிகுந்த வேதனையளிக்கின்றன. குடியிருப்புகள் முழுவதையும் மழைநீர் சூழ்ந்த நிலையில் உண்ண உணவின்றி, உடுத்த உடையின்றி, தங்குவதற்கு இடமின்றி தவித்து வரும் மக்களுக்கு அடிப்படை வசதிகளை கூட செய்துத் தராமல் அவர்களை வீதிக்கு வந்து போராடும் அளவிற்கான சூழலை உருவாக்கிய திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. அதிலும், எந்தவித முன்னறிவிப்புமின்றி சாத்தனூர் அணையிலிருந்து பெருமளவு நீரை திறந்துவிட்டதே, விழுப்புரம் மாவட்டம் அரசூர், இருவேல்பட்டு கிராம மக்களின் வாழ்வாதாரமும் பொருளாதாரமும் கடுமையாக பாதிக்க முக்கிய காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை பார்வையிட வந்த முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடாமல் பிரதான சாலைகளை மட்டுமே பார்வையிட்டுச் சென்றதாக கூறப்படும் நிலையில், உணவுக்காக கையேந்த வைத்த திமுக அரசின் மீதான அதிருப்தியின் வெளிப்பாடே அமைச்சர் திரு.பொன்முடி அவர்கள் மீது சேற்றை வீசும் அளவிற்கான சூழலை உருவாக்கியுள்ளது. எனவே, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்வதோடு, இழந்த வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்கிடுமாறும் தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

மக்கள் விரோத திமுகவை ஆட்சியிலிருந்து அடியோடு அகற்றிடுவோம் ! துரோகக் குணம் கொண்ட சுயநலக் கூட்டத்திற்கு தகுந்த பாடம் புகட்டிடுவோம் ! இதயதெய்வம் அம்மா அவர்களின் உண்மையான ஆட்சியை அமைக்க நாம் அனைவரும் சபதமேற்றிடுவோம் !! டிசம்பர் 5ஆம் தேதி இதயதெய்வம் அம்மா அவர்களின் நினைவிடத்தில் நாம் அனைவரும் ஒன்று கூடி உறுதியேற்றிடுவோம். தோல்விகளைக் கண்டு துவளாமல் வெற்றி என்ற ஒன்றை மட்டுமே இலக்காக கொண்டு இரும்புப் பெண்மணியாக செயல்பட்ட நம் இதயதெய்வம் அம்மா அவர்களின் வழித்தடத்தை பின்பற்றி அடுத்துவரும் சட்டமன்றத் தேர்தலில் நம் கழகத்தின் வெற்றி முத்திரையை பதித்திடுவோம்!

கனமழை காரணமாக திருவண்ணாமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாறைகள் உருண்டு குடியிருப்புகளில் விழுந்ததில் சிக்கியிருந்த 7 பேரும் சடலமாக மீட்கப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையளிக்கின்றன. இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். அதே நேரத்தில், இனி வரும் காலங்களில் இது போன்ற இயற்கை பேரிடர் சூழலில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு உயிரிழப்புகள் ஏற்படாத வகையில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

திருச்சியில் பள்ளிகளுக்கு அருகே இயங்கும் மதுபானக்கடைகளை அகற்றக்கோரி நடைபெறும் கழகத்தினரின் போராட்டத்திற்கு அனுமதி – மக்கள் நலனுக்கு எதிராக செயல்படும் திமுக அரசுக்கு நீதிமன்றம் கொடுத்திருக்கும் சவுக்கடி. திருச்சி மாவட்டம் சீனிவாசா நகர் மற்றும் உறையூர் பகுதிகளில் பள்ளிகளுக்கு அருகே இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரிய உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் அனுமதியோடு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் திருச்சி மாநகர் மாவட்டத்தின் சார்பில், உறையூர் குறத் தெருவில் மக்கள் ஆதரவோடு மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. பள்ளி மாணவ, மாணவியர்களின் எதிர்காலத்தில் சிறிதளவும் அக்கறையற்ற திமுக அரசுக்கும், மக்கள் நலன் கருதி போராட முயன்ற கழகத்தினருக்கு அனுமதி மறுத்து அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்த காவல்துறைக்கும் தகுந்த பாடம் புகட்டும் வகையில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவு அமைந்திருக்கிறது. திருச்சி மாவட்டம் சீனிவாசா நகர் மற்றும் உறையூர் பகுதிகளில் பள்ளிகளுக்கு அருகே இயங்கி வரும் டாஸ்மாக் மதுபானக்கடைகளை திமுக அரசு மூட மறுத்து இனியும் அலட்சியப் போக்குடன் செயல்படுமேயானால் திருச்சி மாநகர் முழுவதும் மக்களை திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துக் கொள்கிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.