தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை – பொதுமக்களையும், நோயாளிகளையும் சிரமத்திற்குள்ளாக்கும் சுகாதாரத்துறையின் அலட்சியப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. தமிழகம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் 40 சதவிகிதமும், புறநகர் மருத்துவமனைகளில் 33 சதவிகிதமும், மகப்பேறு மருத்துவமனைகளில் 25 சதவிகிதமும் மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவுவதால், அரசு மருத்துவமனைகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அசாதாரண சூழல் நிலவுவதாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. அரசு மருத்துவமனைகளில் நிலவும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை குறித்தும் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் தட்டுப்பாடு குறித்தும் பலமுறை சுட்டிக்காட்டியும், அதனை சீர்செய்ய எந்தவித நடவடிக்கையும் எடுக்காத சுகாதாரத்துறையால் பொதுமக்களும், நோயாளிகளும் கடும் இன்னல்களுக்குள்ளாகி வருகின்றனர். மிகவும் முக்கியத்துவமிக்க மகப்பேறு துறையில் நிலவும் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தேவையான முயற்சிகளை முன்னெடுக்காமல், பிரசவத்தின் போது தாய் – சேய் இறப்பு விகிதத்தை குறைக்க முயற்சிப்பது சாத்தியமற்றது என மருத்துவர்கள் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடங்கி மாவட்ட அரசு மருத்துவமனைகள் வரை நிலவும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வதோடு, அரசு மருத்துவமனைகளை நாடிவரும் ஏழை, எளிய மக்களுக்கு தரமான சிகிச்சை வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என சுகாதாரத்துறையையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

தமிழகத்தில் 2500 அரசுப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லாமல் இயங்குவதாக புகார் – அரசுப் பள்ளி மாணவ, மாணவியர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குவது தான் திராவிட மாடல் அரசின் சாதனையா? தமிழகத்தில் கடந்த இரண்டரை ஆண்டு காலமாக 2,500 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் இல்லாமல் இயங்கிவருவதாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பாகவே கலந்தாய்வின் மூலம் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் காலியாக இருக்கும் தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டிய பள்ளிக்கல்வித்துறை, அதனைச் செய்ய தவறியதால் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் கல்வித்தரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தொகுதி வாரியாக அரசுப் பள்ளிகளின் கல்வித்தரம் குறித்தும் மேம்படுத்த வேண்டிய வசதிகள் குறித்தும் ஆய்வு செய்வதாகச் சொல்லிக்கொள்ளும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள், காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்காதது ஏன்? என ஆசிரியர் சங்கங்கள் கேள்வி எழுப்புகின்றன. எனவே, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் காலியாக இருக்கும் தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

சென்னை திருவொற்றியூர் அருகே இயங்கிவரும் தனியார் பள்ளியில் இரண்டாவது முறை வாயுக்கசிவு – உரிய ஆய்வை மேற்கொள்ளாமல் பள்ளியை திறக்க அனுமதித்து மாணவ, மாணவியர்களின் உயிரோடு விளையாடும் பள்ளிக்கல்வித்துறையின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. சென்னை திருவொற்றியூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்றில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட வாயுக்கசிவால் 30க்கும் அதிகமான மாணவ, மாணவியர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது அதே பள்ளியில் மீண்டும் வாயுக்கசிவு ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே வாயுக்கசிவால் பாதிப்புக்குள்ளான இதே தனியார் பள்ளியில் ஆய்வை மேற்கொண்டு உரிய பாதுகாப்பு வசதியை ஏற்படுத்தாமல் மீண்டும் அப்பள்ளியை திறக்க அனுமதித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. கடந்த முறை ஏற்பட்ட வாயுக்கசிவை தீயணைப்புத்துறையும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் ஆய்வு செய்த நிலையில், அதற்கான முழுமையான விவரங்கள் தற்போது வரை வெளிவராத சூழலில் அவசரகதியில் மீண்டும் பள்ளியை திறந்து மாணவ, மாணவியர்களை பாதிப்புக்குள்ளாக்க வேண்டிய அவசியம் என்ன? எனவே, வாயுக் கசிவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மாணவ, மாணவியர்களுக்கு உரிய சிகிச்சை வழங்குவதோடு, வாயுக்கசிவிற்கான காரணம் குறித்து விரிவான ஆய்வை மேற்கொண்டு மாணவ, மாணவியர்களின் பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே அப்பள்ளியை திறக்க அனுமதிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.