ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிகை மற்றும் ஊடகங்களில் நேர்மையாக, சுதந்திரமாக, மற்றும் நடுநிலையாக பணியாற்றுவோரை போற்றும் விதமாக கொண்டாடப்படும் தேசிய பத்திரிகை தினம் இன்று. நாகரிக வளர்ச்சிக்கேற்ப தம்மைத் தகவமைத்துக் கொண்டு மழை, வெயில், புயல் என அனைத்து பேரிடர் காலங்களிலும் துடிப்புடன் செய்திகளை சேகரித்து மக்களுக்கு வழங்கும் பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களின் சுதந்திரத்தையும், பத்திரிகையாளர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம்.

சமுதாயத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் காட்டுநாயக்கர் சமுதாய மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க மறுப்பதா ? – விளிம்பு நிலை மக்களின் கல்விக்கும் வேலைவாய்ப்பிற்கும், முன்னேற்றத்திற்கும் தடைபோடும் திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசித்து வரும் காட்டுநாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள், சாதி சான்றிதழ் வழங்கக் கோரி தங்கள் குழந்தைகளுடன் 8வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மதுரை மாவட்டத்தில் இயங்கிவரும் பல்வேறு பள்ளிகளில் படிக்கும் காட்டு நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களுக்கு கடந்த ஆண்டு வரை வழங்கப்பட்டு வந்த சாதி சான்றிதழ் நடப்பாண்டில் எந்தவித முன்னறிவிப்புமின்றி நிறுத்தப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காட்டுநாயக்கர் சமுதாய பிரதிநிதிகளை அழைத்துப் பேசுவதோடு, அனைத்து சமுதாயத்தினருக்கும் வழங்கப்படுவதை போல இவர்களுக்கும் சாதிச் சான்றிதழ் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என மதுரை மாவட்ட நிர்வாகத்தையும், திமுக அரசையும் வலியுறுத்துகிறேன்.

சென்னை வடபழனியில் பெண் போக்குவரத்து காவலர் மீது போதை ஆசாமி தாக்குதல் – காவலர்களுக்கே பாதுகாப்பில்லாத தமிழகத்தில் மக்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும் ? சென்னை வடபழனியில் பெண் வியாபாரி ஒருவரிடம் தகராறில் ஈடுபட்ட போதை ஆசாமியை தட்டிக் கேட்ட போது நடத்தப்பட்ட தாக்குதலில் பெண் போக்குவரத்து காவலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்தே பொதுமக்கள் தொடங்கி வியாபாரிகள், அரசு ஊழியர்கள், மருத்துவர்கள், காவலர்கள் என அனைத்து தரப்பினருக்குமே பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதை தற்போது நடைபெற்றிருக்கும் இந்த சம்பவம் மீண்டும் ஒருமுறை உறுதிபடுத்தியுள்ளது. தமிழகத்தில் பட்டிதொட்டியெங்கும் பரவியிருக்கும் கஞ்சா உள்ளிட்ட கொடியவகை போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலையும், சட்டவிரோதமாக 24 மணி நேரமும் நடைபெறும் மது விற்பனையையும் கட்டுப்படுத்த தவறிய திமுக அரசால், மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய காவலர்களின் பாதுகாப்பே கேள்விக்குறியாகியிருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, சென்னை வடபழனியில் போக்குவரத்து பெண் காவலரை தாக்கிய நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, தமிழகத்தில் நாள்தோறும் அதிகரித்து வரும் சட்டம் – ஒழுங்கு சீர்கேடுகளுக்கு அடிப்படையான கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனையை தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு வலியுறுத்துகிறேன்.

கிண்டி அரசு மருத்துவமனை மருத்துவர் மீது கத்திக்குத்து – கோத்தகிரி அரசு மருத்துவமனையில் செல்போன் டார்ச்லைட் வெளிச்சத்தில் சிகிச்சை – அடியோடு சீர்குலைந்திருக்கும் சுகாதாரத்துறையை சீரமைப்பது எப்போது ? சென்னை கிண்டியில் உள்ள அரசு பன்னோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவர் திரு.பாலாஜி அவர்கள் மீது நடைபெற்றிருக்கும் கத்திக்குத்து சம்பவம் தமிழகத்தில் சீர்குலைந்திருக்கும் சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. அதேபோல, நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அரசு மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்ட ஒன்றரை வயது குழந்தைக்கு செல்போன் டார்ச்லைட் வெளிச்சத்தில் சிகிச்சை வழங்குவது போல வெளியாகியிருக்கும் வீடியோ காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற கடந்த மூன்றாண்டுகளில் தமிழகத்தில் பொதுமக்கள் தொடங்கி அரசு ஊழியர்கள், மருத்துவர்கள் என யாருக்குமே பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதை பலமுறை சுட்டிக்காட்டியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத அரசு நிர்வாகத்தால், மருத்துவமனைக்குள் புகுந்து மருத்துவரையே தாக்கும் அளவிற்கான அசாதாரண சூழலை உருவாக்கியுள்ளது. தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் மீது நடைபெற்று வரும் தொடர் தாக்குதல் சம்பவங்கள் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றும் நடவடிக்கை எடுக்காத திமுக அரசை கண்டித்து அரசு மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். எனவே, ஏழை, எளிய மக்களின் நலன் கருதி அனைத்து மருத்துவமனைகளிலும் முறையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருவதோடு, மக்களின் உயிரை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் அரசு மருத்துவர்களின் பாதுகாப்பை உடனடியாக உறுதி செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.