ஊழியர்கள் பற்றாக்குறையால் நடப்பாண்டில் மட்டும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடல் – மழலைக் குழந்தைகளின் அடிப்படைக் கல்வி மற்றும் ஊட்டச்சத்து தேவையை கேள்விக்குறியாக்கிய திமுக அரசின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. தமிழகம் முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களில் நிலவும் காலிப்பணியிடங்களால் நடப்பாண்டில் மட்டும் சென்னை, கோவை, ஈரோடு, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டிருப்பதாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. குழந்தைகளின் முன்பருவக்கல்வியோடு அவர்களின் முழுமையான வளர்ச்சியையும் உறுதி செய்யும் நோக்கத்தில் செயல்படும் அங்கன்வாடி மையங்களில் போதுமான ஊழியர்கள் இல்லாத காரணத்தினால் அங்கு பயிலும் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை கல்வி முழுவதும் கேள்விக்குறியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 58 ஆயிரத்திற்கும் அதிகமான அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள சுமார் 28 ஆயிரம் ஆசிரியர் மற்றும் சமையலர் பணியிடங்களை நிரப்ப எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசால் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டிருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.மேலும், பல அங்கன்வாடி மையங்களில் ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே பணியாற்றுவதால் உணவு தயாரிப்பது, கர்ப்பிணி பெண்களின் கையேடுகளை பராமரிப்பது என அனைத்து வேலைகளையும் அவர்களே செய்ய வேண்டியிருப்பதால் கூடுதல் பணிச்சுமை ஏற்படுவதோடு குழந்தைகளின் முன்பருவக்கல்வியும் கடுமையாக பாதிக்கப்படும் நிலையையும் உருவாக்கியுள்ளது. எனவே, தமிழகத்தில் அங்கன்வாடி மையங்களில் நிலவும் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் மற்றும் சமையலர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்புவதோடு, மழலைக் குழந்தைகளுக்கு அடிப்படை கல்வி மற்றும் தரமான ஊட்டச்சத்து உணவு அங்கன்வாடி மையங்களில் முறையாக வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

சிப்காட் தொழிற்பேட்டைக்கான நிலம் கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது – விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் சிப்காட் விரிவாக்க திட்டத்தை திமுக அரசு உடனடியாக கைவிட வேண்டும்.திருவண்ணாமலையில் விளைநிலங்களை கையகப்படுத்தி சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து நில எடுப்பு அலுவலகத்தில் கடந்த இரு தினங்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்த விவசாயிகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே இரண்டு சிப்காட் தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மூன்றாவது தொழிற்பேட்டை அமைக்க செய்யாறு வட்டத்தில் உள்ள மேல்மா, குரும்பூர், காட்டுக்குடிசை, மணிப்புரம் என 12 கிராமங்களை உள்ளடக்கிய விளைநிலங்களை கையகப்படுத்தியே தீருவோம் என பிடிவாதம் பிடிக்கும் திமுக அரசின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கான அறிவிப்பு வெளியான நாளில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டங்களுக்கு செவிசாய்க்காத திமுக அரசு, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு உணவு, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறுத்தி காவல்துறையை ஏவி வலுக்கட்டாயமாக கைது செய்திருப்பது ஈவு இரக்கமற்ற செயலாகும். தேர்தலுக்கு முன்பாக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 43வது வாக்குறுதியாக, விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் விளைநிலங்களை வேறு பயன்பாட்டிற்கு மாற்றப்படாது என உறுதியளித்த திமுக, ஆட்சிக்கு வந்த பின்பு உயிரை விட்டாலும் விடுவோம் எங்களின் விளைநிலத்தை விட்டுத்தரமாட்டோம் எனக்கூறும் விவசாயிகளை கைது செய்து அடக்குமுறையை ஏவியிருப்பது அவர்களுக்கு இழைக்கும் பச்சைத் துரோகம் ஆகும்.எனவே, நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக போராடி கைது செய்யப்பட்டுள்ள விவசாயிகளை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்கும் வகையில் மேல்மா சிப்காட் விரிவாக்கத் திட்டத்தை கைவிட வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

சேலம் அருகே செம்மண் கடத்தலை செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் – சட்டவிரோதமாக நடைபெறும் மணல் கொள்ளையை தடுக்கத் தவறிய திமுக அரசின் மெத்தனப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.சேலம் மாவட்டம் வில்லியம்பட்டி, வலசையூர் உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக நடைபெறும் செம்மண் கடத்தல் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற நியூஸ் தமிழ் 24*7 செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் மீது நடத்தப்பட்டிருக்கும் தாக்குதல் கடும் கண்டனத்திற்குரியது. தமிழகத்தில் சேலம் மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களில் சர்வசாதாரணமாக நடைபெறும் மணல் கடத்தலை தடுக்க திமுக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததன் விளைவே, தற்போது செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களை மணல் கடத்தல் கும்பல் தாக்கும் அளவிற்கான துணிச்சலை உருவாக்கியுள்ளது.சட்டவிரோதமாக நடைபெறும் மணல் கொள்ளையை தடுக்க முயலும் அதிகாரிகளும், சமூக ஆர்வலர்களும் திட்டமிட்டு கொலை செய்யப்படுவதும், செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் தாக்குதலுக்கு உள்ளாவதும் தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா? சமூக விரோதிகளின் ஆட்சியா? என்ற கேள்வியை எழுப்புகிறது. எனவே, செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்திய மணல் கொள்ளையர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக நடைபெறும் மணல் கொள்ளையை தடுக்கத் தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.