தென்மாவட்டங்களில் தொடரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்பு – கடந்த ஆண்டு மழை பாதிப்பிலிருந்து பாடம் கற்காத திமுக அரசின் நிர்வாகத் தோல்வியே பொதுமக்களின் பாதிப்புக்கு முக்கிய காரணம். திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி உட்பட பல்வேறு தென்மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாக பெய்துவரும் தொடர்மழையால் அம்மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் பெய்த தொடர் மழையால் தாமிரபரணியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து மீண்டு வருவதற்குள், தற்போது பெய்து வரும் கனமழை அப்பகுதி மக்களை மீளவே முடியாத அளவிற்கான துயரத்திற்கு உள்ளாக்கியுள்ளது. வானிலை ஆய்வு மையம் மூலமாக அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்ட பின்பும் கூட எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத திமுக அரசால், ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் வெள்ளநீரில் தத்தளித்துக் கொண்டிருப்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஒவ்வொரு பருவமழையின் போதும் குடியிருப்புகள் மற்றும் விளைநிலங்களை மழைநீர் சூழ்வதும், உடமைகளை முழுமையாக இழந்து உணவு, குடிநீர் போன்ற அத்தியாவசியத் தேவைகள் கூட கிடைக்காமல் மக்கள் போராடுவதும் வாடிக்கையாகி வருவது ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்தின் தோல்வியையே வெளிப்படுத்துகிறது. எனவே, மேலும் இரு தினங்களுக்கு கனமழை நீடிக்கும் என்ற வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை முறையாக பின்பற்றி மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துவதோடு, பாதிப்புக்குள்ளான மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை போர்க்கால அடிப்படையில் செய்து தருமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் தொடரும் கனமழை – முறையான முன்னறிவிப்புக்கு பின்னரே அணைகள் திறக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் காரணமாக நேற்று இரவு முதல் தற்போது வரை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே,விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, என பல மாவட்டங்களில் ஃபெஞ்சல் புயல் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து மீண்டு வராத நிலையில், கனமழை நீடிக்கும் என்ற தற்போதைய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை அம்மாவட்ட மக்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.மேலும், எந்தவித முன்னறிவிப்பின்றி கடந்த சில நாட்களுக்கு முன்பாக சாத்தனூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட ஒரு லட்சத்திற்கும் அதிகமான கன அடி நீரால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, வடமாவட்டங்களில் உள்ள பல கிராமங்களை சூழ்ந்து பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிப்படையச் செய்துள்ளது. மழை பாதிப்புக்கு பின்பு, வரலாறு காணாத மழை, கணித்ததை விட அதிகளவிலான மழைப்பொழிவு என காரணத்தை தேடாமல், வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை பின்பற்றி முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதே கனமழை பாதிப்பிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க ஒரே வழியாக அமையும்.எனவே, ஆற்றங்கரையோரம், தாழ்வான பகுதிகள் மற்றும் மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, முறையான எச்சரிக்கைக்கு பின்னரே அணைகளில் இருந்து நீர் திறக்கப்பட வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.