சென்னையில் பெய்துவரும் தொடர் மழையால் குடியிருப்புகளை சூழ்ந்திருக்கும் மழை நீரை போர்க்கால அடிப்படையில் அகற்றுவதோடு, பொதுமக்களை பாதுகாக்க நிரந்தர வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இடைவிடாமல் பெய்துவரும் கனமழை காரணமாக சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருக்கும் சூழல் உருவாகியுள்ளது. ஆட்சிக்கு வந்த இரண்டரை ஆண்டுகளில் மழைநீர் பாதிப்பிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க எவ்வித நடவடிக்கைகளையும் திமுக அரசு மேற்கொள்ளவில்லை என்பதற்கு முதலமைச்சர் அவர்களின் தொகுதியான கொளத்தூரில் குளம்போல தேங்கியிருக்கும் மழைநீரே சிறந்த உதாரணம் . சாலைகள் மற்றும் குடியிருப்புகளை சூழந்திருக்கும் மழைநீரால் சுகாதார சீர்கேடு நிலவுவதோடு, மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் முறையாக மூடப்படாமல் இருப்பதன் மூலம் விபத்து ஏற்படும் அபாயமும் இருப்பதாக சென்னையைச் சேர்ந்த பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தேங்கியிருக்கும் மழைநீரை வெளியேற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதோடு, மழைநீர் பாதிப்பிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க நிரந்தர வெள்ளத் தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் சென்னை மாநகராட்சியின் முடிவு கண்டனத்திற்குரியது – மாமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும். சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட சுமார் 350 பள்ளிகளில் நாள்தோறும் 65ஆயிரம் மாணவ, மாணவியர்களுக்காக செயல்படுத்தப்பட்டு வந்த காலை உணவுத்திட்டத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் தீர்மானம் சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இத்தீர்மானம் தமிழக முதலமைச்சரின் ஒப்புதலோடு தான் நிறைவேற்றப்பட்டதா ? ஒருவேளை முதலமைச்சரும் இத்தீர்மானத்திற்கு அனுமதி அளித்திருந்தால், திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் போக்குவரத்து துறை தொடங்கி அனைத்து துறைகளையும் தனியாருக்கு தாரை வார்ப்பதாக பொதுமக்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் உண்மை தானோ? என்று எண்ணத் தோன்றுகிறது. எனவே, காலை உணவுத்திட்டத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் தீர்மானத்தை திரும்ப பெறுவதோடு, ஏழை, எளிய மக்களின் பசியைப் போக்கிய அட்சயப்பாத்திரமான அம்மா உணவகங்களை மேம்படுத்தி அதன் மூலம் பள்ளிக் குழந்தைகளுக்கு தரமான உணவு தயார் செய்து வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சென்னை மாநகராட்சியையும், தமிழக அரசையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.