நாடாளுமன்ற மக்களவைக்குள் அத்துமீறி நுழைந்து மக்கள் பிரதிநிதிகள் மீது புகைகள் கக்கும் கருவியை வீசியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மக்களவையில் அலுவல்கள் நடந்து கொண்டிருந்த நேரத்தில் பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்திருந்த 4 பேர் திடீரென தடுப்புகளைத் தாண்டி அவைக்குள் குதித்து உறுப்பினர்கள் அமர்ந்திருந்த பகுதியை நோக்கி வண்ண புகைகளை வெளியேற்றக்கூடிய கருவிப் பொருட்களை வீசியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த 2001ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூறும் இந்நாளில் 22 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இன்று நடைபெற்றிருக்கும் பாதுகாப்பு மீறல் சம்பவம் மக்கள் பிரதிதிகளின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. பன்னடுக்கு பாதுகாப்பு கட்டமைப்பு கொண்ட நாடாளுமன்ற மக்களவையில் நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்வதோடு, நாடாளுமன்றம் முழுவதும் மக்கள் பிரதிநிதிகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

ஆளுங்கட்சி பிரமுகர்களின் தலையீடின்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு அறிவித்த நிவாரணத் தொகை முழுமையாக சென்றடைவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்த பொதுமக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். புயல் கடந்து சென்றாலும் அதன் தாக்கம் இன்றளவும் குறையவில்லை என்பதற்கு தாம்பரம், முடிச்சூர், வேளச்சேரி, பள்ளிக்கரணை, நசரத்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வடியாமல் இருக்கும் மழைநீரே சிறந்த உதாரணம். புயல், வெள்ள பாதிப்பால் இழந்த வாழ்வாதாரத்தை மீட்க அரசு அறிவித்திருக்கும் 6 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை போதுமானதாக இருக்காது என பொதுமக்கள் வைத்துள்ள குற்றச்சாட்டு ஒரு புறமிருக்க நியாய விலைக்கடைகள் மூலமாக விநியோகிக்கப்படும் நிவாரணத் தொகை ஆளுங்கட்சி பிரமுகர்களின் தலையீடு இன்றி முழுமையாக கிடைக்குமா? என்ற கேள்வியும் அச்சமும் அவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதே நேரத்தில், குடும்ப அட்டை வைத்திருப்போருக்கு மட்டுமல்லாமல், குடும்ப அட்டை இல்லாதவர்கள், குடும்ப அட்டைக்காக விண்ணப்பித்து காத்திருப்பவர்கள், வீடுகளின்றி சாலையோரங்களில் தங்கியிருக்கும் குடும்பத்தினருக்கும் வெள்ள நிவாரண நிதி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, ஆளுங்கட்சி பிரமுகர்களின் தலையீடின்றி அரசு அறிவித்திருக்கும் நிவாரணத் தொகை பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையாக சென்றடைவதை உறுதி செய்வதோடு, குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் நிவாரணத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

பெரிதினும் பெரிது கேட்கும் ஆர்வம் கொண்டிருப்பதும், வையத்தலைமை கொள்ளும் மானுட பண்பை பெற்றிருப்பதும் வாழ்க்கையின் பெரும் பயன்கள் என்றுரைத்து புரட்சிகரமான கவிதைகள் மூலம் மக்கள் மனதில் தமிழ் உணர்வோடு விடுதலைஉணர்வையும் விதைத்த சுதந்திர போராட்ட வீரர் மகாகவி பாரதியாரின் பிறந்தநாள்இன்று. பெண்களின் உரிமைக்கும் கல்விக்கும் முக்கியத்துவம்அளித்து முதன்முதலாக குரல் எழுப்பியதோடு, அரசியல் களம், நாட்டின் விடுதலையில் தொலைநோக்கு சிந்தனை கொண்டிருந்த முண்டாசு கவிபாரதியாரை இந்நாள் மட்டுமின்றி ஒவ்வொரு நாளும் போற்றி கொண்டாடுவோம்.

கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிலிருந்து மீளமுடியாமல் பொதுமக்கள் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் தனியார் நிறுவனத்தின் கார் பந்தயத்தினை நடத்த அவசரம் காட்டும் தமிழக அரசின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது. மிக்ஜாம் புயலால் பெய்த கனமழையால் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்து, தங்களின் வாழ்வாதாரங்களை முழுமையாக இழந்து லட்சக்கணக்கான மக்கள் ஒருவேளை உணவு, குடிநீர் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில், ஃபார்முலா ரேஸிங் சர்க்யூட் எனும் தனியார் நிறுவன கார்பந்தயத்தை வரும் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் சென்னையில் நடத்த இருப்பதாக நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருப்பது புயல் பாதிப்பில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் மக்களை கடும் கோபமடையச் செய்திருக்கிறது. உண்ண உணவின்றி, குடிக்க நீரின்றி உடுத்த உடையின்றி என எந்தவிதமான அடிப்படை வசதிகளுமின்றி சிரமத்திற்குள்ளாகியிருக்கும் மக்களை மீட்கும் பணியில் கவனம் செலுத்த வேண்டிய அரசு நிர்வாகம், மக்கள் வரிப்பணமான 40 கோடி ரூபாயை செலவு செய்து கார் பந்தயம் நடத்த வேண்டிய அவசியம் என்ன ? கார்பந்தயம் நடத்த இருங்காட்டு கோட்டையில் மைதானம் இருக்கும் போது ஓமந்துரார் அரசு மருத்துவமனை, அண்ணா சாலை, துறைமுகம் என பரபரப்பாக இயங்கும் சாலைகளை மறித்து தனியார் கார்பந்தயத்தை நடத்தி இடையூறு ஏற்படுத்துவது தான் அரசின் சாதனையா? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஏற்கனவே கடும் நிதி நெருக்கடியில் இருப்பதாக கூறும் திமுக அரசு, மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதை தவிர்க்கும் வகையில் கார் பந்தயத்தை ரத்து செய்வதோடு, கனமழையால் பொதுமக்கள் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என தமிழக அரசையும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களையும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.