சென்னையில் மழைநீர் தேங்கியுள்ள 150-க்கும் மேற்பட்ட இடங்களில், அவற்றை அகற்றுவதற்கு உடனடியாக உரிய நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகமும், தமிழக அரசும் மேற்கொள்ள வேண்டும். மழை தொடர்ந்து பெய்து வருவதால் தண்ணீர் தேங்கியிருக்கும் இடங்களில் அசம்பாவிதங்களைத் தடுப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்திட வேண்டும். சென்னை தவிர தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்கள் உட்பட கனமழை பெய்துவரும் இடங்களில் மக்களுக்குத் தேவையான மீட்பு மற்றும் உதவி பணிகளை விரைந்து செயல்படுத்திட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழுக்களை தமிழக அரசு தாமதமின்றி அமைத்திட வேண்டும். நீர்நிலைகளையும் வடிகால்களையும் தொடர்ந்து கண்காணித்திட வேண்டும் எனவும் அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

மாற்றுத்திறனாளிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிற்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் மதுரை தெப்பக்குளத்தைச் சேர்ந்த திரு.சச்சின் சிவா (எ) C.சிவக்குமார் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இளம் வயதிலேயே போலியோ நோயால் பாதிக்கப்பட்டாலும் தனது கடின உழைப்பாலும், இடைவிடாத முயற்சியாலும் இந்த உயரத்தை எட்டிப் பிடித்திருக்கும் சிவா, இன்றைய இளைஞர்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறார். கிரிக்கெட்டில் புதிய சாதனைகளைப் புரிந்து தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் அவர் பெருமை தேடித்தர வேண்டுகிறேன்.

கோவை கார் சிலிண்டர் விபத்து குறித்து புதுப்புது தகவல் வெளியாகி வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. பண்டிகை நேரத்தில் மக்களை பதற்றத்திற்கு ஆளாக்கும் வகையில் நிகழும் இத்தகைய சம்பவங்கள் கவலை அளிக்கின்றன. திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையையே இது வெளிக்காட்டுகிறது. சட்டம் – ஒழுங்கை பராமரிப்பதும், மக்களிடம் உள்ள பயத்தை தணிப்பதுமே காவல்துறையின் முக்கியமான பணியாக இருக்கவேண்டும். இனி, தமிழ்நாட்டின் எந்த இடத்திலும் இத்தகைய சம்பவங்கள் நடக்காதபடி உளவுத்துறை கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தியாளராகப் பணிபுரிந்துவந்த திரு. முத்துக்கிருஷ்ணன் அவர்கள், சென்னை மழைநீர் வடிகால் பணிகளுக்காக வெட்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து, அதன் தொடர்ச்சியாக மரணத்தை தழுவியிருப்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், ஊடக நண்பர்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். சென்னை மாநகரில் மிகுந்த தொய்வோடு நடந்துவரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை விரைவுபடுத்தவும், பணிகள் முடியும்வரை உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யும்படியும் ஏற்கனவே கோரிக்கை வைத்திருந்தும் தமிழக அரசு காட்டிய அலட்சியத்தால் இன்று முத்துக்கிருஷ்ணனை இழந்திருக்கிறோம். இனிமேலும் உயிர்ப்பலிகள் ஏற்படாத அளவுக்கு இனியாவது தமிழக அரசு உரிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். அத்துடன் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்கவும் கேட்டுக்கொள்கிறேன். மறைந்த செய்தியாளர் திரு. முத்துக்கிருஷ்ணனுக்கு தமிழக அரசு வழங்கியுள்ள ஐந்து லட்சம் ரூபாய் நிதி உதவி போதாது. அவரது வயது, குடும்ப சூழல் இவற்றை கருத்தில்கொண்டு, ஒரு தனி நேர்வாக இச்சம்பவத்தைக் கருதி, குறைந்தது ஐம்பது லட்சம் ரூபாயை அந்தக் குடும்பத்திற்கு நிவாரணமாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.