மேகதாது அணை கட்டுவது தொடர்பான கர்நாடகா அரசின் திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்கும் வகையில் உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகின்றேன். மத்திய அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதால் தமிழ்நாட்டிற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார் அவர்கள் கூறுவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு சமமாகும். மேலும், தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய உரிமையை தராததோடு, மழை வெள்ள காலத்தில் மட்டும் எஞ்சிய நீரை திறந்து விடும் கர்நாடகா அரசு, தமிழ்நாட்டின் விவசாயம், குடிநீர் தேவைக்கு போதிய நீரை தராமல் அணைகட்ட நினைப்பது தமிழ்நாடு மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகமாகும். மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வரும் சூழலில், குறுவை சாகுபடியை காப்பாற்ற முடியுமா என டெல்டா மாவட்டங்களில் கடைமடை பகுதியில் உள்ள விவசாயிகள் கவலையில் உள்ள நிலையில் கர்நாடகா விடுவிக்க வேண்டிய தண்ணீரை காவிரி மேலாண்மை வாரியம் வாயிலாக பெறவும், கர்நாடகா அரசுக்கு எதிராக மத்திய அரசிடம் அழுத்தம் கொடுக்கவும் முதலமைச்சர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன்.

ஆரோக்கியமான சமூகத்தை உறுதி செய்யும் வகையில் 24 மணி நேரமும் ஓய்வின்றி பணியாற்றும் மருத்துவர்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த மருத்துவர்கள் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன். தொற்றுநோய், தொற்றா வாழ்வியல் நோய், விபத்துகள் என மக்கள் சந்திக்கும் துன்பங்களில் இருந்து புத்துயிருடன் மீட்கும் மருத்துவர்களை மக்கள் தாங்கள் வழிபடும் தெய்வங்களுக்கு இணையாக கருதுகின்றனர். அத்தியாவசிய சேவையின் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கும் அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை இந்த மருத்துவர் தினத்தில் தமிழ்நாடு அரசு கனிவுடன் பரிசீலித்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

இறைவனின் தூதரான இப்ராகிம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் வகையில் பக்ரீத் பண்டிகை கொண்டாடும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன். ஜாதி, மத வேறுபாடு இன்றி சமூகத்தை உயர்த்தும் நற்குணங்களுடன் நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்பதே ஹஜ் பெருநாளில் நாம் நினைவில் கொள்ள வேண்டிய ஒன்றாகும். ஏழைகளின் பசி போக்க உதவுதல், பொருளாதாரம் இல்லாமல் தவிப்போருக்கு உதவுதல் போன்ற தன்னலமின்றி உதவிகரம் நீட்டும் இஸ்லாமிய சகோதரர்களின் கருணை உள்ளத்தை கண்டு எப்போதுமே நான் நெகிழ்கின்றேன்.

நெல்லை சிஎஸ்ஐ திருமண்டல நிர்வாகத்தின் சொத்துகளை அபகரிக்க முயன்றதாக எழுந்த புகாரில் கல்விக்குழு உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து தன்னை நீக்கிய பேராயர் பர்னபாஸுக்கு எதிராக தனது ஆதரவாளர்கள் மூலம் தாக்குதல் நடத்திய திமுக எம்.பி., ஞானதிரவியத்தை வன்மையாகக் கண்டிக்கின்றேன். சிறுபான்மையினர்களின் பாதுகாவலர் எனக் கூறிக் கொள்ளும் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இவ்வாறு நடந்திருப்பது திமுகவின் உண்மையான முகத்தைத் தோலுரித்துக் காட்டியிருக்கிறது. சிறுபான்மையினருக்கு எதிராக கொடூரத் தாக்குதல் நடத்திய அவர், மக்கள் பிரதிநிதியாக இருப்பதற்கே தகுதி இல்லாதவர். வெறுமனே வழக்குப்பதிவு மட்டும் செய்யாமல் அவரையும், அவரது ஆதரவாளர்களையும் கைது செய்ய உடனே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சரை வலியுறுத்துகின்றேன்.

போக்குவரத்துக்கழகங்களில் காலியாக உள்ள 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணி இடங்களில் ஆட்களை நியமிக்க திமுக அரசு தயங்குவது ஏன்? தனியார் நிறுவனம் மூலம் சென்னை மாநகர போக்குவரத்துக்கழகத்தில் ஆட்களை நியமிப்பதற்கு எதிர்ப்பு எழுந்து அதற்கான முயற்சிகள் கைவிடப்பட்ட நிலையில், அதற்கு மாறாக போக்குவரத்துக்கழகத்தில் ஓய்வு பெற்றவர்களை மீண்டும் பணிக்கு அமர்த்த இப்போது முயற்சி மேற்கொள்வதாக தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன. வயது முதிர்வு காரணமாக ஒய்வு பெற்றவர்களை மீண்டும் பணியில் அமர்த்த நினைப்பது பயணிகளின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாகும் என்பது திமுக அரசுக்கு தெரியாதா? காலிப்பணியிடங்களில் நிரந்தரமாக ஆட்களை நியமிக்க நடவடிக்கை எடுக்காமல் மாற்று காரணங்களை முன்னிறுத்தி தொடர்ந்து காலதாமதம் செய்வதன் பின்னணியிலும் உள்ள மர்மம் என்ன? ஓட்டுநர், நடத்துநர் பயிற்சி முடித்த எண்ணற்ற இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவிக்கும் நிலையில், விடியா அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்த பின்பும் வாக்குறுதி படி அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்காமல் அவர்களை அலைக்கழிப்பது ஏன்? தமிழக அரசு இனியும் மெத்தனம் காட்டாமல் போக்குவரத்து துறையில் உள்ள காலிப்பணியிடங்களை உடனே நிரப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.

சிறார் இலக்கியத்துக்கான மிக உயரிய விருதான பாலபுரஸ்கார் விருதுக்கு எழுத்தாளர் உதயசங்கர், யுவபுரஸ்கார் விருதுக்கு எழுத்தாளர் ராம் தங்கம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ள செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது. குழந்தைகளின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் “ஆதனின் பொம்மை” என்ற நாவலை எழுதிய எழுத்தாளர் உதயசங்கர், சிறுவனின் பசியை விவரிக்கும் “திருக்கார்த்தியல்” என்ற சிறுகதையை எழுதிய எழுத்தாளர் ராம் தங்கம் ஆகியோரை வாழ்த்தி மகிழ்கின்றேன். எழுத்தாளர்கள் இருவரும் தமிழ் சிறார் இலக்கியத்துக்கு தொண்டாற்றும் வகையில் மேலும் பல படைப்புகளை எழுதி தேசிய விருதுகளைப் பெற வேண்டும் என்றும் இந்த நேரத்தில் பெருமிதத்துடன் கேட்டுக்கொள்கின்றேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.