தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நீர்நிலைகளில் மூழ்கி சிறுவர்கள், இளைஞர்கள் உட்பட 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக ஊடகங்களில் வெளியான செய்திகள் வேதனையளிக்கின்றன. நீர்நிலைகள் முறையாக தூர்வாரப்படாததும், சட்டத்துக்குப் புறம்பாக அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்படுவதும் உயிர் பலி ஏற்படுவதற்கு காரணம் என அந்தந்தப் பகுதி மக்கள் கருதுகின்றனர். மேலும், தமிழகத்தில் உள்ள பெரிய நீர்நிலைகளில் எச்சரிக்கை பலகைகள் வைப்பதுடன், சிறிய நீர் நிலைகளில் அந்தந்த கிராமங்களில் குழுக்களை உருவாக்கி முறையாக கண்காணிப்பிலும் ஈடுபட வேண்டும். நீர்நிலைகளில் மூழ்கி இனி யாரும் பலியாகக் கூடாது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு உடனே நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.

தருமபுரி அருகே தந்தையே மகனை ஆணவ படுகொலை செய்ததாகவும், மருமகளை கொடூரமாக தாக்கியதாகவும் வெளியாகி உள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. தமிழ்நாட்டில் ஒரு மாதத்துக்குள் இரண்டு ஆணவ படுகொலைகள் நடைபெற்றுள்ள நிலையில், திமுக ஆட்சிக்கு வந்தால் சாதி ஆணவ படுகொலைகளைத் தடுக்க தனிசட்டம் இயற்றப்படும் என எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது கூறியதை முதல்வரான பின்னர் மறந்து விட்டாரோ என்று கருதத் தோன்றுகிறது. தற்போதைய சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே சாதி ஆணவ படுகொலைகளுக்கு எதிராக கடுமையான சட்டத்தை தாக்கல் செய்து நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை செல்லும் கடற்கரை லூப் சாலையில் அமைக்கப்பட்டுள்ள மீன்கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றியதைக் கண்டித்து மீனவ சமுதாயத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நடவடிக்கையால் பட்டினப்பாக்கம் லூப் சாலையில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்களுக்கு நேரடியாக மீன்களை விற்பனை செய்து வரும் மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் தடைபட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர். நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும் போது மக்கள் மத்தியில் எழும் எதிர்ப்புகளை நீதிமன்றத்தில் முறைப்படி தெரிவித்து அதன் பின்னர் உரிய நடவடிக்கை எடுப்பதே சரியான வழியாக இருக்கும். அதை விடுத்து மாநகராட்சி அதிகாரிகள் அவசர, அவசரமாக மீனவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியது ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்களுக்கு உரிய நீதி கிடைக்க தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

அறுவடை திருநாளான விஷூ புத்தாண்டை கொண்டாடும் நமது திராவிட சொந்தங்களான கேரள மாநில மக்களுக்கு என் இனிய வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். கேரளமக்களின் உணர்வோடு ஒன்றிவிட்ட கனி காணும் விழாவான விஷூ புத்தாண்டு கேரள மக்களுக்கு செழிப்பையும், மகிழ்ச்சியை அளிக்கட்டும் என்று இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன். தமிழ்நாட்டில் உள்ள மலையாள சொந்தங்களுக்கு மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள மலையாள சகோதர, சகோதரிகளையும் விஷூ புத்தாண்டு தருணத்தில் வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கின்றேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.