திருச்சி கொள்ளிடம் ஆற்றில் மூன்று சிறுவர்கள் மூழ்கி உயிரிழந்த செய்தி அறிந்து வருத்தமடைந்தேன். ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஸ்ரீமாந் பட்டர் குருகுல வேத பாடசாலையில் பயின்ற மன்னார்குடியைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த ஒரு சிறுவனும் கொள்ளிடம் ஆற்றில் அதிகாலை குளிக்கச் சென்றபோது மூழ்கி உயிரிழந்துள்ளனர். சிறுவர்கள் உயிரிழந்து நான்கு நாட்கள் ஆன பின்பும் அவர்களது குடும்பத்தினருக்கு உள்ளூர் அதிகாரிகளோ, அமைச்சர்களோ நேரில் சென்று ஆறுதல் கூட சொல்லாதது மட்டுமின்றி அவர்களின் குடும்பங்களுக்கு அரசு எவ்வித நிவாரணமும் அளிக்காதது வேதனை அளிக்கிறது. உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு இனியும் தாமதிக்காமல் தமிழக அரசு உடனடியாக நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் கள்ளசாராயம் குடித்து மூவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. தமிழகத்தை ஒட்டிய ஆந்திரா மற்றும் பாண்டிச்சேரி மாநில எல்லை பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு தமிழகத்தில் விற்பனை செய்யப்படுவதாகவும், மேலும் தாராள கள்ளச்சாராய புழக்கத்திற்கு காரணமாக எல்லைகளில் பணியாற்றும் மதுவிலக்கு போலீசார் வியாபாரிகளுடன் கைகோர்த்துக் கொண்டு விற்பனையை ஊக்குவிப்பதே என அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஏற்கனவே TASMAC மதுவிற்பனை, போதை பொருட்களின் புழக்கம் ஆகியவற்றால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருக்கும் இந்த சூழலில் கள்ளசாராய விற்பனையும் சேர்ந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆகவே முதலமைச்சர் திரு.ஸ்டாலின் அவர்கள் இனியும் தாமதிக்காமல் உரிய நடவடிக்கை மேற்கொண்டு கள்ளச்சாராய புழக்கத்தை இரும்புக்கரம் கொண்டு தடுத்து நிறுத்துவதோடு இதை கவனிக்க தவறிய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

எல்லா உயிர்களிடத்தும் நிபந்தனையற்ற அன்பை வாரி வழங்கும் உலகம் முழுவதும் உள்ள அன்னையர்களுக்கு என் நெஞ்சார்ந்த அன்னையர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இன்றைய அவசரகால டிஜிட்டல் யுகத்தில் வீடு, அலுவலகம் என அனைத்தையும் கவனிக்க வேண்டிய நெருக்கடியான காலகட்டத்திலும் அனைவரிடத்திலும் அன்பு செலுத்த அன்னையர்கள் என்றுமே தவறுவதில்லை. தமிழ்நாட்டு மக்களுக்கும், லட்சோப லட்சம் கழகக் கண்மணிகளுக்கும் பெற்றெடுக்காத தாயாக திகழ்ந்தவர் மறைந்த மாண்புமிகு இதயதெய்வம் அம்மா அவர்கள். அவரது ஆட்சிகாலத்தில் அன்னையர்களுக்காக பல நலத்திட்டங்களைச் சிறப்புற செயல்படுத்தி அனைவரின் அன்பை பெற்றவராகத் திகழ்ந்தார். இதயதெய்வம் அம்மா அவர்கள் காட்டிய அன்பு வழியில் தாய்மார்களை நேசிக்கும், அரவணைக்கும் பண்பை நமக்குள் என்றென்றும் வளர்த்தெடுப்போம் என்று இந்த அன்னையர் தினத்தில் உறுதி ஏற்போம்!

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி கட்டடம் இடிக்கப்பட்டு, புதிய பள்ளிக்கட்டடம் கட்டப்படும் வரை, தற்காலிக ஏற்பாடாக அருகில் உள்ள பள்ளிக்கு மாணவர்கள் மாற்றப்படுவதாக கல்வித்துறை சார்பில் கூறப்பட்டநிலையில், அங்கு திருமண மண்டபம் கட்டப்பட உள்ளதாக வரும் செய்திகள் மாநகராட்சி பள்ளியை மட்டுமே நம்பி இருக்கும் ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது. கல்விக்கூடங்களை கோயில் போன்று புனிதமாக கருதும் வகையில் பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம் என பாடிய பாரதியார் வாழ்ந்த திருவல்லிக்கேணியில், நடுநிலைப்பள்ளி இருந்த இடத்தில் பள்ளிக்கட்டடம் மட்டுமே கட்டப்பட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கையினை ஏற்று பள்ளிக்கு சொந்தமான இடத்தில் திருமண மண்டபம் கட்டும் முடிவை மாநகராட்சி கைவிடும்படி முதலமைச்சர் உடனே உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.

மருத்துவமனைகளில் நோயாளிகளை மருந்துகளோடும், மாத்திரைகளோடும் மட்டுமின்றி அன்பாலும், புன்னகையாலும் அக்கறையோடு கவனித்து குணம்பெற செய்யும் அனைத்து செவிலியர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த செவிலியர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன். கொரோனா போன்ற பல்வேறு கொடிய உயிர் கொல்லி நோய் தொற்று காலகட்டம் மட்டுமின்றி அனைத்து தருணங்களிலும் தங்கள் இன்னுயிரை பொருட்படுத்தாமல் மருத்துவ சுகாதார கட்டமைப்பில் முக்கிய அங்கமாக, அர்ப்பணிப்பு மிக்கவர்களாக செவிலியர்கள் திகழ்கின்றனர். அவ்வாறு மருத்துவர்களுக்கு இணையாக முன்களப்பணியாளர்களாக பல்வேறு சூழ்நிலைகளில் பணியாற்றிடும் செவிலியர்கள் பணிநிரந்தரம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட வேண்டிய நிலையில் இன்று உள்ளனர். ஆகவே நம் உயிர்காக்க தங்கள் இன்னுயிரை பொருட்படுத்தாமல் போராடும் செவிலியர்களின் கோரிக்கைகளை ஆளும் திமுக அரசு செவிமடுத்து கேட்டு உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.