லட்சிய கனவு காணுங்கள் என இளைஞர்களின் உந்துசக்தியாக இருந்த மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்களின் நினைவு நாள் இன்று. எளிய குடும்ப பின்னணியில் பிறந்து கல்வியால் படிப்படியாக முன்னேறி இலக்கை எட்டிப்பிடித்து தன் வாழ்நாள் முழுவதும் இளைஞர்களின் முன்னுதாரணமாக வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் அப்துல்கலாம் அவர்கள். நாட்டின் முதல் குடிமகனாக குடியரசுத் தலைவர் பதவி வகித்த போதிலும் ஒரு எளிய மனிதரைப் போல குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நாட்டு மக்களிடம் பேரன்பு கொண்டிருந்தவர். கல்வி, விஞ்ஞானம், வான்வெளி ஆராய்ச்சிகளில் இந்தியா மேலும் பல சாதனைகளை எட்ட மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்களின் நினைவு நாளில் உறுதி ஏற்போம்.

விவசாயிகளின் கடுமையான எதிர்ப்பையும் மீறி நிலக்கரி சுரங்க விரிவாக்க பணிகளை என்எல்சி நிறுவனம் மேற்கொள்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது. சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக வேளாண் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் தொடர் போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில் கடலூர் அருகே வளையமாதேவி கிராமத்தில், நடவு செய்யப்பட்ட வயலில், பயிர்களை அழித்து பொக்லைன் இயந்திரம் மூலம் பணிகள் மேற்கொள்வதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. பல்வேறு இன்னல்களுக்கு இடையே விதைத்து, பயிர் செய்து அதனை காப்பாற்றி வரும் விவசாயிகளின் நிலத்தில் டிராக்டரை விட்டு பயிர்களை அழித்து அவசர, அவசரமாக விரிவாக்கப்பணிகள் மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் என்ன? வேளாண் நிலத்தில் வைரமே கிடைத்தாலும் அது தேவையில்லை, விவசாயமே முக்கியம் என்பதே விவசாயிகளின் நிலைப்பாடு. ஆகவே, உணவு உற்பத்தி செய்யும் விவசாயிகளின் வேளாண்மை தொழிலுக்கு பேராபத்து விளைவிக்கும் சுரங்கத்துக்கான விரிவாக்கப் பணிகளை உடனே கைவிட வேண்டும்.

அரியலூர் மாவட்டம் வாளரக்குறிச்சியில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்களை திமுக நிர்வாகி உள்ளிட்டோர் காலில் விழ வைத்து தீண்டாமை வன்கொடுமையில் ஈடுபட்டதாக வெளியான செய்தி அதிர்ச்சியளிக்கிறது. வாளரக்குறிச்சியை சேர்ந்த பட்டியலினத்தை சேர்ந்தவரின் மகளுக்கு நடந்த மஞ்சள் நீராட்டு விழா ஊர்வலத்தின்போது ஆதிக்க சாதியினர் தெருவில் பட்டாசு வெடித்ததாகவும், அங்கிருந்த கடையில் பட்டியலினத்தவர் புகைப்பிடித்ததற்காகவும் திமுக நிர்வாகி உள்ளிட்டோர் தீண்டாமை கொடுமையில் ஈடுபட்டதாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சட்டத்தைக் காக்க வேண்டிய உள்ளூர் போலீசார், இந்த விவகாரத்தில் கட்டபஞ்சாயத்தில் ஈடுபட்டதுடன், காவல்நிலையத்தின் முன்பே திமுக நிர்வாகி உள்ளிட்ட சிலரது காலில் பட்டியலினத்தைச் சேர்ந்தவரை விழ வைத்து மன்னிப்பு கேட்க வைத்த தீண்டாமை கொடூரமும் அரங்கேறியதாக ஊடங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த சம்பவம் நடைபெற்று 15 நாட்களுக்கும் மேலாக நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர், ஊடகங்களில் செய்திகள் வெளியான பிறகு மிகவும் பொறுமையாக வழக்கு பதிவு செய்து ஒருவரைக் கைதுசெய்ததுடன், தலைமறைவான திமுக நிர்வாகியைத் தேடி வருவதாக கூறுவது அபத்தமான செயலாகும். தமிழ்நாட்டின் பல பகுதிகளில் திமுக நிர்வாகிகள் இது போல தொடர்ந்து தீண்டாமை வன்கொடுமைகளில் ஈடுபடுவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. நடவடிக்கை எடுக்க வேண்டிய இடத்தில் உள்ள திமுக கட்சித்தலைவரும், முதலமைச்சருமான திரு. மு.க.ஸ்டாலின், இது போன்ற சம்பவங்களைக் கண்டும் காணாமல் இருப்பது பட்டியலின மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்டியலினத்தவர்களுக்கு எதிராக செயல்பட்ட அரியலூர் மாவட்ட திமுக நிர்வாகி மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்திய காவல்துறையினர் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் அவர்களை வலியுறுத்துகின்றேன்.

மணிப்பூர் மாநிலத்தில் குகி பழங்குடி இன சமூகத்தைச் சேர்ந்த இரு பெண்கள், ஒரு கும்பலால் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வெளியான செய்தி மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அளிக்கிறது. மணிப்பூர் மாநிலத்தில் இருவேறு இனக்குழுக்களுக்கு இடையே நடைபெறும் மோதலின் போது கடந்த மே மாதம் 4ஆம் தேதி இந்த கொடூர சம்பவம் நடைபெற்றதாக மணிப்பூர் மாநிலத்தின் பழங்குடியின தலைவர்கள் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. பெண்களுக்கு எதிராக நினைத்துக் கூட பார்க்க முடியாத வகையில் கொடூரமான பாலியல் வன்கொடுமை குற்றத்தில் ஈடுபட்ட நபர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி கடும் தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகின்றேன். மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி மற்றும் குகி இன மக்களிடையே நடைபெற்று வரும் மோதலை முடிவுக்கு கொண்டு வந்து அந்த மாநிலத்தில் அமைதி நிலவுவதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன்.

எதிர் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த இரண்டு நாட்களாக பெங்களூருவில் இருந்த முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின், காவிரி டெல்டாவில் நெற்பயிர்களை பாதுகாக்க தண்ணீரை திறந்து விடும்படி கர்நாடகா அரசிடம் எந்தவித கோரிக்கையும் விடுக்காமல் திரும்பியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கர்நாடகா மாநிலத்தில் உள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி வழிந்தபோதிலும் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய தண்ணீரை தராமல் அடம்பிடிக்கும் கர்நாடகாவின் விருந்தோம்பலில் மகிழ்ந்த திமுக தலைவருக்கு, டெல்டா பாசன விவசாயிகளின் நிலை பற்றி கவலை இல்லையா? டெல்லி சட்டத்திருத்தத்துக்கு ஆதரவு தந்தால் மட்டுமே கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு வருவேன் என டெல்லி முதலமைச்சர் சொந்த மாநிலத்தின் நலனுக்காக குரல் கொடுத்ததைப் போல திமுக தலைவர் குரல் கொடுக்கத் தவறியது ஏன்? எப்போதுமே தமிழ்நாட்டின் மக்களின் நலனை புறந்தள்ளிவிட்டு சொந்த நலனுக்காகவே சிந்திக்கும் திமுக தலைவர், மேட்டூர் அணையின் நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருவதை அறிவாரா? பெங்களூரு விமானநிலையத்துக்கே வந்து தன்னை வரவேற்ற துணைமுதலமைச்சரும் நீர்ப்பாசனத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமாரிடம் மரியாதை நிமித்தமாகவாவது காவிரியில் தண்ணீர் திறந்துவிடுங்கள் என்று கோரிக்கைவைக்கத் தவறியது ஏன் ? குறுவை சாகுபடிப் பயிர்களை எப்படிக் காப்பாற்றுவது என்று டெல்டா விவசாயிகள் தவிப்பது பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் கூட்டணி விருந்தில் பங்கேற்று விட்டு திரும்பியிருக்கும் திமுக தலைவர், தமிழ்நாட்டு மக்களுக்குத் தொடர்ந்து துரோகம் இழைத்து வருவது கண்டிக்கத்தக்கது.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.