உலக நாடுகளை அச்சுறுத்தும் குரங்கு அம்மை நோய்த்தொற்று தமிழகத்திற்குள் பரவுவதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும். ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் குரங்கு அம்மை நோய்த்தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், சர்வதேச பொது சுகாதார அவசர நிலையை அறிவித்திருக்கும் உலக சுகாதார நிறுவனம், அனைத்து நாடுகளும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கையை கவனத்துடன் பின்பற்றி குரங்கு அம்மை நோய்த்தொற்றை தமிழகத்திற்குள் நுழையவிடாமல் தடுப்பதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்வதோடு, குரங்கு அம்மை நோய்த்தொற்று குறித்து பொதுமக்களுக்கு போதுமான விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

காவிரி டெல்டா பகுதிகளில் சம்பா சாகுபடிக்கு தயாராகும் விவசாயிகளுக்கு விதைநெல், உரம், இடுபொருள் அடங்கிய சிறப்புத் தொகுப்பை அறிவிக்க வேண்டும் – கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணைகளை கட்டி வீணாக கடலில் கலக்கும் காவிரி நீரை சேமிக்கத் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். முந்தைய ஆண்டுகளைப் போலவே நடப்பாண்டிலும் மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்படாத காரணத்தினால் காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடி முற்றிலும் பொய்த்துப் போன நிலையில், தற்போது உபரியாக கிடைக்கும் காவிரி நீரை நம்பி சம்பா சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர். கடுமையான வறட்சி, பருவம் தவறிய மழை, இயற்கை பேரிடர்கள் என எத்தனையோ இக்கட்டான சூழல்களிலும் விவசாயத்தை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டிருக்கும் காவிரி டெல்டா பகுதி விவசாயிகளுக்கு, மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் காவிரி நீர் சம்பா சாகுபடி செய்வதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. மழைக்காலங்களில் தமிழகத்திற்கு கிடைக்கும் நீரை தடுப்பணைகளை கட்டி சேமிக்க வேண்டும் என்ற விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கைக்கு செவிசாய்க்காத திமுக அரசால், கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் உபரிநீரும் விவசாயத்திற்கு பலனளிக்காமல் வீணாக கடலில் கலப்பது விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. காவிரி ஆற்றுப்படுகை முழுவதையும் முறையாக தூர்வாருவதற்கான திட்டங்களை கொண்டு வராமல், ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணை திறக்கப்படுவதற்கு பத்து நாட்களுக்கு முன்பாக தூர்வாரும் பணிகளை மேற்கொள்வதால் எந்தவித பலனுமில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, தமிழகத்தில் வேளாண் உற்பத்தியை பெருக்கும் வகையிலும், காவிரி டெல்டா பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையிலும், சம்பா சாகுபடிக்குத் தேவையான விதைநெல், உரம், இடுபொருட்கள் அடங்கிய சிறப்புத் தொகுப்பை அறிவிப்பதோடு, இனியாவது கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணைகளை கட்டி வீணாக கடலில் கலக்கும் காவிரி நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

இதயதெய்வம் அம்மா அவர்களின் தொலைநோக்குத் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ள முயற்சிக்கும் திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது – ஏழை, எளிய மக்களின் நலனுக்காக தொடங்கப்பட்ட அம்மா மருந்தகங்கள் தொடர்ந்து செயல்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். பொதுப்பெயர் வகை ( Generic ) மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் விற்பனை செய்யும் வகையில் தமிழகம் முழுவதும் பொங்கல் திருநாளன்று ஆயிரம் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படும் என தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தன் சுதந்திர தின உரையில் கூறியிருப்பது வேடிக்கையானது. அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்ப மக்களின் நலனுக்காக இதயதெய்வம் அம்மா அவர்களால் கடந்த 2014 ஆம் ஆண்டில் தொடங்கிவைக்கப்பட்ட அம்மா மருந்தகங்களை மூடிவிட்டு முதல்வர் மருந்தகம் எனும் பெயரில் ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ள முயற்சிப்பது கடும் கண்டனத்திற்குரியது. புரட்சித் தலைவி அம்மா அவர்களின் தொலைநோக்கு சிந்தனையுடன் கொண்டுவரப்பட்ட தாலிக்குத் தங்கம், தொட்டில் குழந்தைத் திட்டம், மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, அம்மா உணவகம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களின் வரிசையில் அம்மா மருந்தகங்களையும் மூட முயற்சிப்பது திமுக அரசின் அப்பட்டமான அரசியல் காழ்ப்புணர்ச்சியையே வெளிப்படுத்துகிறது. ஆட்சிப்பொறுப்பேற்ற மூன்றாண்டுகளில் மக்கள் நலனுக்காக எந்தவித திட்டங்களையுமே முறையாக, முழுமையாக செயல்படுத்தாத திமுக அரசு, தள்ளுபடி விலையில் தரமான மருந்துகளை விற்பனை செய்யும் நோக்கில் அம்மா அவர்களால் தொடங்கப்பட்ட அம்மா மருந்தகங்களையும் மூட துடிப்பது மக்கள் நலனுக்கு எதிரான முடிவாகும். எனவே, மக்கள் நலனை மட்டுமே குறிக்கோளாக கொண்டு தொடங்கப்பட்ட அம்மா மருந்தகங்களை மேம்படுத்துவதோடு, அதன் மூலம் ஏழை, எளிய நடுத்தர குடும்ப மக்களுக்கு மலிவான விலையில் தரமான மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.