தொழில் நிறுவனங்களுக்கான நிறும வரியை (COMPANY TAX) உயர்த்த முடிவு செய்து அறிவிப்பாணை வெளியிட்டுள்ள சென்னை மாநகராட்சி நிர்வாகத்திற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் நிறுவனங்களுக்கான நிறும வரியை மூன்று மடங்கு உயர்த்த உத்தேசித்திருப்பதாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நாளிதழ்களில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. திமுகவின் பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த மக்கள் மீது ஏற்கனவே சொத்துவரி, வீடு மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான மின்கட்டண உயர்வு உள்ளிட்ட தாங்க முடியாத சுமைகளை ஏற்றியுள்ள நிலையில் தற்போது நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் நிறுமவரியை மூன்று மடங்கு வரை உயர்த்த முடிவு செய்திருப்பது ஒட்டுமொத்தமாக தொழில் நிறுவனங்களையே முடக்குவதற்கு சமமாகும். எனவே சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்ட நிறும வரி உயர்வுக்கான அறிவிப்பாணையை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்துவதோடு, இது போன்ற மக்கள் நேரடியாக பாதிக்கக்கூடிய விசயங்களில் முதலமைச்சர் தனிக்கவனம் செலுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.

சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலுக்கு பலியான சம்பவம் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது. உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 6 ஆம் தேதி காய்ச்சல் காரணமாக எழும்பூர் குழுந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் மருத்துவர்கள் மேற்கொண்ட சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மதுரவாயல் பகுதிகளில் முறையான குடிநீர் வசதி செய்து தரப்படாத காரணத்தினால் லாரிகள் மூலமாக விநியோகிக்கப்படும் குடிநீரை சேமித்து வைத்து பயன்படுத்துவதே டெங்கு போன்ற நோய்கள் உருவாக காரணம் எனவும், மேலும் சுகாதார சீர்கேடுகளை சீரமைக்க கோரி பலமுறை புகார் அளித்தும் சென்னை மாநகராட்சி எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் இது போன்ற சென்னை மாநகராட்சியின் அலட்சிய போக்கே சிறுவனின் உயிரிழப்புக்கு காரணமாக அமைந்திருப்பதாகவும் அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆகவே உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்குவதோடு மதுரவாயல் உள்பட சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் முறையான ஆய்வு மேற்கொண்டு டெங்கு போன்ற கொடிய நோய்களில் இருந்து மக்களை பாதுகாக்க தேவையான முன்னெச்சரிக்கை நடிவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்திகிறேன்.

திரைப்பட இயக்குனரும் பிரபல நடிகருமான திரு. மாரிமுத்து அவர்கள் மரணமடைந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையும் அளிக்கிறது. திரைப்படங்கள் மட்டுமல்லாது தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து, உணர்ச்சிகரமான வசனங்கள் மூலமாக தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய திரு.மாரிமுத்துவின் திடீர் மரணம் திரைத்துறைக்கும் அவரின் ரசிகர்களுக்கும் பேரிழப்பாகும். திரு.மாரிமுத்து அவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் திரைத்துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

“தேவர் தந்த தேவர் ” என போற்றப்படுபவரும், பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் தலைமையில் பணியாற்றி தேசியத்தையும் தெய்வீகத்தையும் உயர்த்திப் பிடித்து, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் கரத்தை வலுப்படுத்தியவரும், கல்வி தந்தையுமான திரு.பி.கே.மூக்கையா தேவர் அவர்களின் நினைவு தினம் இன்று. தமிழகத்தின் தென்பகுதி மக்களுக்காக கல்வியை பெற்றுதந்ததோடு, நீதிக்காகவும், நேர்மைக்காகவும் போராடி, தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதார பிரச்னையான கச்சத்தீவு தொடர்பாக நாடாளுமன்றத்தில் திரு.பி.கே.மூக்கையா தேவர் அவர்கள் எழுப்பிய குரல் இன்று வரை ஒலித்துக் கொண்டு தான் இருக்கிறது. தற்காலிக சட்டப்பேரவை தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர், தொடர்ச்சியாக ஆறுமுறை சட்டப்பேரவை உறுப்பினர் என திறம்பட மக்கள் பணியாற்றிய திரு.பி.கே.மூக்கையா தேவரின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.