திமுக ஆட்சியில் கடந்த ஓராண்டில் மட்டும் நான்காவது முறையாக பால் பொருட்களின் விலையை ஆவின் நிர்வாகம் உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியது. ஆவின் நிர்வாகம் மூலம் தயாரிக்கப்படும் பால் பொருட்களான நெய் லிட்டருக்கு 70 ரூபாயும், வெண்ணெய் கிலோவுக்கு 30 ரூபாயும் உயர்த்தப்பட்டு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில் வரலாறு காணாத வகையில் பால் பொருட்களின் விலையை தொடர்ந்து உயர்த்திக் கொண்டே செல்வது மக்கள் மனதில் வெறுப்பை விதைக்கும் செயலாகும். எனவே, உயர்த்தப்பட்டுள்ள நெய் மற்றும் வெண்ணெய் விலை உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும். இல்லையெனில் அரசு நிறுவனமான ஆவின் நிர்வாகம் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை இழக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்.

உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை மதிக்காமல் தமிழ்நாட்டிற்கான உரிய தண்ணீரை திறந்துவிட தொடர்ந்து மறுத்துவரும் கர்நாடக அரசிற்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். நேற்று நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்கு தினசரி விநாடிக்கு 5,000 கன அடி தண்ணீரை கர்நாடக மாநிலம் திறந்து விட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. போதுமான மழையில்லை என காரணம் கூறி தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க இயலாது என அம்மாநிலத்தின் துணை முதலமைச்சர் திரு. டி.கே.சிவக்குமார் பேசியிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை வஞ்சிக்கும் வகையிலும் தமிழ்நாட்டை பாலைவனமாக மாற்ற முயற்சிக்கும் வகையிலும் கர்நாடக மாநில துணை முதலமைச்சரும் நீர்வளத்துறை அமைச்சருமான திரு.சிவக்குமார் பேசியிருப்பது எந்த விதத்திலும் நியாயமானதல்ல. காவிரி நீரை நம்பி குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் போதிய தண்ணீரின்றி தவித்து வரும் நிலையில், இனியும் இரட்டைவேடம் போடாமல் விரைந்து நடவடிக்கை எடுப்பதோடு உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு வரும்போது வலுவான வாதங்களை முன்வைத்து தமிழ்நாட்டிற்கான நீரை பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.