தமிழகத்தில் மீண்டும் மீண்டும் மின் கட்டண உயர்வு – நிர்வாகத் தோல்வியை மறைக்க பொதுமக்களின் மீது சுமையை ஏற்றும் திறனற்ற திமுக அரசின் செயல்பாடுகள் கடும் கண்டனத்திற்குரியது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு பொதுமக்களின் கடும் எதிர்ப்புகளை மீறி, கடந்த 2022 ஆம் ஆண்டு 30 சதவிகிதமும், 2023 ஆம் ஆண்டு 2.18 சதவிகிதமும் மின் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது நடப்பாண்டில் மீண்டும் 4.83 சதவிகிதம் அளவிற்கு மின்கட்டணத்தை உயர்த்தியிருக்கிறது. அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் போதே மின்கட்டணம் உயர்த்தப்படுவதாக வெளியான செய்திகளை மறுத்த திமுக அரசு, தேர்தலுக்கு பின்பு மின் கட்டணத்தை உயர்த்தி பொதுமக்களின் மீது கூடுதல் நிதிச் சுமையை ஏற்றியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக வழங்கிய தேர்தல் அறிக்கையில் 221-வதாக இடம்பெற்றிருக்கும் மாதம் தோறும் மின் கணக்கீடு என்ற வாக்குறுதியை நிறைவேற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசின் இந்த மின் கட்டண உயர்வு அறிவிப்பு, ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் விழி பிதுங்கி நிற்கும் ஏழை, எளிய மக்களுக்கு மீளவே முடியாத அளவிற்கு பேரிடியாக அமைந்துள்ளது. மின்சார நிலைக்கட்டணம் மற்றும் உச்ச நேர மின் கட்டண உயர்வால் பல்வேறு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஏற்கனவே மூடப்பட்ட நிலையில், தொடர்ந்து அதிகரிக்கப்பட்டுள்ள மின்கட்டணத்தால் மேலும் பல நிறுவனங்கள் மூடப்படும் சூழலுக்கு தள்ளப்பட்டிருப்பதாக தொழில் கூட்டமைப்பினர் வேதனை தெரிவிக்கின்றனர். எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, மின் கட்டணத்தை கடுமையாக உயர்த்தி ஏழை, எளிய மக்களின் வாழ்வை இருளில் மூழ்கச் செய்ததாக பழனிசாமி அரசாங்கத்தை விமர்சனம் செய்த திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், முதலமைச்சரான பின் அதே தவறை வருடந்தோறும் இழைத்து வருவது தமிழக மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம் ஆகும். எனவே, மின் நுகர்வோர்களுக்கு கடுமையான நிதிச்சுமையை ஏற்படுத்தும் மின்கட்டண உயர்வு தொடர்பான அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, மின்வாரியம் மூலம் மின் உற்பத்தியை பெருக்குவதற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

திரு.ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான விசாரணைக் கைதி என்கவுண்டரில் சுட்டுக்கொலை – காவல்துறையின் விசாரணை நேர்மையாகவும், நியாயமானதாகவும் நடைபெறுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் திரு.ஆம்ஸ்ட்ராங் அவர்களின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள விசாரணைக் கைதி திருவேங்கடம் என்பவர், சென்னை மாதவரம் அருகே தப்பியோட முயன்ற போது காவல்துறையினரால் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்தவர்கள் குற்றவாளிகள் அல்ல எனவும், உண்மையான குற்றவாளிகளை கண்டறிய வேண்டும் என அவரது குடும்பத்தினர் உட்பட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்திய நிலையில், தமிழக காவல்துறை அரங்கேற்றியிருக்கும் என்கவுண்டர் சம்பவம் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. கொலை நடந்த அன்றே தாமாக முன்வந்து காவல்துறையினரிடம் சரணடைந்த விசாரணைக் கைதி திருவேங்கடம், தப்பியோட முயன்றதன் காரணமாகவே சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக காவல்துறை விளக்கம் அளித்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி முன்பின் முரணாக அமைந்துள்ளது. எனவே, விசாரணைக் கைதி திருவேங்கடம் சுட்டுக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்வதோடு, திரு.ஆம்ஸ்ட்ராங் அவர்களின் கொலை வழக்கு நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

தலைமைக் கழக அறிவிப்பு:தமிழ் மாநில காங்கிரஸ்(மூப்பனார்) கட்சியின் சார்பாக பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 122வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் திருச்சி, உழவர் சந்தை மைதானத்தில் வருகின்ற 14.07.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 04.00 மணியளவில் நடைபெறவுள்ளது. இப்பொதுக்கூட்டத்தில் பங்கேற்க தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி(மூப்பனார்)யின் தலைவர் திரு.G.K.வாசன் அவர்களின் அழைப்பை ஏற்று கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளார்கள். இப்பொதுக்கூட்டத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்டக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், மாநில மற்றும் மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழகம் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள், ஊராட்சி, வட்ட / வார்டு / கிளைக் கழக நிர்வாகிகள், கழக தொண்டர்கள் என அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தமிழகத்திற்கான காவிரி நீரை வழங்க மறுக்கும் கர்நாடக அரசின் ஆணவப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது – இனியும் மவுனம் காக்காமல் உடனடியாக உச்சநீதிமன்றத்தை நாடி மாநிலத்தின் உரிமையையும், டெல்டா பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும். தமிழகத்திற்கு நாள்தோறும் ஒரு டி.எம்.சி வீதம் காவிரி நீரை வழங்க வேண்டும் என்ற காவிரி நீர் ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவை செயல்படுத்த மறுப்பதோடு, தமிழகத்திற்கான காவிரி நீரை வழங்க முடியாது என கர்நாடக மாநில முதலமைச்சர் திரு.சித்தராமையா அவர்கள் பேசியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தென்மேற்கு பருவமழை கர்நாடகாவில் தீவிரமடைந்திருக்கும் நிலையில், காவிரியின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் பெரும்பாலான அணைகளின் நீர்மட்டம் உச்சத்தை எட்டிய பின்பும் தமிழகத்திற்கான காவிரி நீரை தர மறுப்பது கர்நாடக அரசின் பிடிவாதப் போக்கை வெளிப்படுத்துகிறது. தமிழ்நாட்டில் காவிரி டெல்டா பகுதிகள் வரலாறு காணாத அளவிற்கு வறட்சியை சந்தித்து வரும் நிலையில், குறுவை சாகுபடியை தொடர்ந்து சம்பா சாகுபடியும் போதிய நீரின்றி பாதிக்கப்பட்டிருப்பதால் காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. உச்சநீதிமன்றமும் காவிரி மேலாண்மை ஆணையமும் தெளிவான உத்தரவை பிறப்பித்த பின்பும் தமிழகத்திற்கான காவிரி நீரை பெற எந்த வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசின் அலட்சியப் போக்கே, இன்றைக்கு தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என அம்மாநில முதலமைச்சர் அவர்கள் ஆணவப்போக்குடன் கூறும் அளவிற்கான சூழலை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இனியும் கூட்டணி தர்மத்திற்காக மவுனம் காக்காமல், கர்நாடக அரசின் சட்டவிரோதப் போக்கை நீதிமன்றம் மூலம் எதிர்கொண்டு தமிழகத்திற்கான காவிரி நீரை உடனடியாக பெறத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.