தருமபுரி அருகே தந்தையே மகனை ஆணவ படுகொலை செய்ததாகவும், மருமகளை கொடூரமாக தாக்கியதாகவும் வெளியாகி உள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. தமிழ்நாட்டில் ஒரு மாதத்துக்குள் இரண்டு ஆணவ படுகொலைகள் நடைபெற்றுள்ள நிலையில், திமுக ஆட்சிக்கு வந்தால் சாதி ஆணவ படுகொலைகளைத் தடுக்க தனிசட்டம் இயற்றப்படும் என எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது கூறியதை முதல்வரான பின்னர் மறந்து விட்டாரோ என்று கருதத் தோன்றுகிறது. தற்போதைய சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே சாதி ஆணவ படுகொலைகளுக்கு எதிராக கடுமையான சட்டத்தை தாக்கல் செய்து நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை செல்லும் கடற்கரை லூப் சாலையில் அமைக்கப்பட்டுள்ள மீன்கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றியதைக் கண்டித்து மீனவ சமுதாயத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நடவடிக்கையால் பட்டினப்பாக்கம் லூப் சாலையில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்களுக்கு நேரடியாக மீன்களை விற்பனை செய்து வரும் மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் தடைபட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர். நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும் போது மக்கள் மத்தியில் எழும் எதிர்ப்புகளை நீதிமன்றத்தில் முறைப்படி தெரிவித்து அதன் பின்னர் உரிய நடவடிக்கை எடுப்பதே சரியான வழியாக இருக்கும். அதை விடுத்து மாநகராட்சி அதிகாரிகள் அவசர, அவசரமாக மீனவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியது ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்களுக்கு உரிய நீதி கிடைக்க தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

அறுவடை திருநாளான விஷூ புத்தாண்டை கொண்டாடும் நமது திராவிட சொந்தங்களான கேரள மாநில மக்களுக்கு என் இனிய வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். கேரளமக்களின் உணர்வோடு ஒன்றிவிட்ட கனி காணும் விழாவான விஷூ புத்தாண்டு கேரள மக்களுக்கு செழிப்பையும், மகிழ்ச்சியை அளிக்கட்டும் என்று இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன். தமிழ்நாட்டில் உள்ள மலையாள சொந்தங்களுக்கு மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள மலையாள சகோதர, சகோதரிகளையும் விஷூ புத்தாண்டு தருணத்தில் வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கின்றேன்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி உரிய பதிவு இன்றி மருத்துவம் அளிப்போர் மீது தமிழ்நாடு காவல்துறை வழக்குகள் பதிவு செய்து 70க்கும் மேற்பட்ட போலி மருத்துவர்களை கைது செய்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுகின்றோம் என்று பெயரளவில் நடவடிக்கை எடுக்காமல் உண்மையான அக்கறையோடு போலி மருத்துவர்களை ஒழிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். கஞ்சா ஒழிப்பு என்ற பெயரில் இரண்டு ஆபரேஷன்களை போலீசார் மேற்கொண்ட போதும் இன்னும் கூட கஞ்சா விற்பனையும், அதனால் ஏற்படும் வன்முறைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. எனவே இனி பெயரளவுக்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளாக இல்லாமல், மனித உயிர்களோடு விளையாடும் போலி மருத்துவர்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க முழுமையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.

கழகம்

அலுவலகம்

முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.