வேலூர் மாவட்டம், சத்துவாச்சேரியில் உள்ள ஆவின் பால் பண்ணையில் கடந்த 2 ஆண்டுகளாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள பால் நூதன முறையில் திருடப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தி அதிர்ச்சியளிக்கிறது. கண்காணிப்பு கேமராக்கள், வருகைப் பதிவேடு, ஒப்பந்த வாகனங்கள் பதிவேடு என பல்வேறு கண்காணிப்பு முறைகள் இருந்தபோதிலும் ஒரே பதிவு எண் கொண்ட இரண்டு வேன்களில் தினமும் சுமார் 2500 லிட்டர் பால் பாக்கெட்டுகள் திருடப்பட்டிருப்பது என்பது ஆவின் அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் ஆட்சியாளர்கள் துணையின்றி நடந்திருக்க வாய்ப்பில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. இனி இது போன்ற பால் திருட்டு நடைபெறாதவாறு அனைத்து ஆவின் பண்ணைகளிலும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்துவதோடு, பால் ஏற்றிச் செல்லும் ஒப்பந்த வாகனங்களின் வருகைப் பதிவை தணிக்கைக்கு உட்படுத்துவதுடன், இரண்டு ஆண்டுகளாக பல லட்சம் லிட்டர் பால் திருட்டில் ஈடுபட்டோர் மற்றும் அவர்களின் தொடர்புகள் ஆகியவற்றை முழுமையாக கண்டறிய சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

அம்பத்தூரில் உள்ள ஆவின் பால் பொருட்கள் தயாரிப்பு பண்ணையில் ஒப்பந்தப் பணியாளர்களாக 50க்கும் மேற்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு, அவர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படவில்லை என ஊடகங்களில் வெளியான செய்தி அதிர்ச்சியளிக்கிறது. தங்களை ஒப்பந்தம் மூலம் ஆவினில் பணியமர்த்திய நிறுவனம் முறையான சம்பளம் வழங்கவில்லை என சிறார்கள் ஆவின் பண்ணை முன்பு கொளுத்தும் வெயிலில் போராட்டம் நடத்தியதன் மூலம் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. தொழிலாளர் சட்டத்தை மீறி இரண்டு மாதமாக ஐஸ்க்ரீம் தயாரிப்பு பிரிவில் பேக்கேஜிங் (PACKAGING) பணியில் சிறார்களை ஒப்பந்த நிறுவனம் மூலம் ஆவின் நிறுவனம் பணியில் ஈடுபடுத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். குழந்தைத் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தும் தனியார் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுவது போல ஆவின் நிறுவனத்துக்கும், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் நிறுவனத்துக்கும் அபராதம் விதிக்கப்படுவதுடன், இதனை அனுமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றேன். மேலும், சிறார்களுக்கு உரிய சம்பளம் வழங்க உத்தரவிடுவதுடன், அவர்கள் கல்வி கற்பதற்கான சூழலை ஏற்படுத்த தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மூன்றாவது சிப்காட் அமைக்க சூளகிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட மூன்று கிராமங்களில் 3,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளில் ஒருவர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்த செய்தி அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். தங்களது வாழ்வாதாரத்தின் ஆதாரமாக விளங்கும் விவசாய நிலங்கள் பறிபோன கவலையில் உண்ணாவிரதம் இருந்த விவசாயிகளில் மேலும் இருவர் மயக்கம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் 150 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தபோதிலும் திமுக அரசு அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவராமல் இன்று வரை வேடிக்கை பார்த்துவருவது கண்டிக்கத்தக்கதாகும். எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது விவசாயிகளின் காவலராக காட்டிக் கொண்ட முதலமைச்சர், ஆட்சிக்கு வந்தபின் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் புதிய விமான நிலையம், சேலம்-சென்னை பசுமை வழி சாலை, சூளகிரியில் 3ஆவது சிப்காட் அமைத்தல் ஆகியவற்றுக்கு விவசாயிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி நிலம் கையகப்படுத்தும் விஷயத்தில் மனம் போன போக்கில் செயல்பட்டு வருவதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் குற்றம் சாற்றுகின்றனர். விவசாய நிலத்தில் வைரமே கிடைத்தாலும் அதனை எக்காரணம் கொண்டும் அழிக்கக் கூடாது என்பதே அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடு. ஆகவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3ஆவது சிப்காட் அமைக்க கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விவசாயிகளிடம் திரும்ப ஒப்படைத்து அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முதலமைச்சர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.

கால்நடை ஆரோக்கியம் மற்றும் நோய்க் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் வாங்கப்பட்ட 250 ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்தப்படாமல் வெறுமனே நிறுத்தி வைத்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. ஆம்புலன்ஸ்களில் பிரதமர் படத்தை ஒட்டுவதா அல்லது முதலமைச்சர் படத்தை ஒட்டுவதா என்ற சர்ச்சையாலும், ஆம்புலன்ஸ்களை இயக்க ஆட்கள் நியமிக்கப்படவில்லை என்பதாலும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன. பால் உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கக்கூடிய பசு மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை அளிப்பதற்காக வாங்கப்பட்ட ஆம்புலன்ஸ்களை பயன்படுத்தாமல் வைத்திருப்பது கண்டிக்கத்தக்கதாகும். மக்கள் வரிபணத்தில் வாங்கப்பட்ட ஆம்புலன்ஸ்களில் யாருடைய படத்தை ஒட்டுவது என்பதை சர்ச்சையாக்காமல், அவற்றை இயக்க போதுமான ஆட்களை நியமித்து ஆம்புலன்ஸ்களை உடனே பயன்பாட்டுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த சென்னை-கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே விபத்துக்குள்ளானதில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர் என்ற செய்தி அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலுடன் மேலும் இரண்டு ரயில்கள் இந்த கோரவிபத்தில் சிக்கியதால் அதிக உயிரிழப்புகளும், 900க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் இருந்து செல்லும் அமைச்சர்கள், அதிகாரிகள் கொண்ட குழுவினர் தமிழ்நாட்டை சேர்ந்த பயணிகள் நிலை குறித்து அறிந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், காயம் அடைந்தவர்கள் விரைவாக குணம் பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணமும், அரசு வேலை வாய்ப்பும் வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.