கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே மேல்பட்டாம்பாக்கம் பகுதியில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் சுமார் 5 பேர் உயிரிழந்த நிலையில், 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. மேலும் இந்த விபத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கடலூர் கிழக்கு மாவட்ட மகளிர் அணி இணைச்செயலாளர் திருமதி.சிவகாமி அவர்களின் மகனும், கடலூர் மத்திய மாவட்டக் கழக துணைச்செயலாளர் திரு.ஜெயகாந்தன் அவர்களின் மனைவியும் மற்றும் கழக தொண்டர்கள் இருவரும் படுகாயம் அடைந்துள்ளனர் என்ற செய்தி மேலும் வேதனையளிக்கிறது. விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் பயணிகளும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகளின் உறவினர்களும் மற்றும் தொண்டர்களும் விரைவில் குணம் பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஷிப் வாள் வீச்சுப் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த பவானி தேவி வெண்கல பதக்கம் வென்று சாதனை புரிந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டின் பெருமையை நிலை நாட்டும் வகையில் பதக்கம் வென்ற பவானி தேவிக்கும், அவருக்கு தொடர்ந்து ஊக்கம் அளித்துவரும் பெற்றோர், பயிற்சியாளர் ஆகியோருக்கும் வாழ்த்துகள் தெரிவிப்பதில் பெருமிதம் கொள்கின்றேன். வரும் காலங்களில் மேலும் பல சர்வதேச போட்டிகளில் பங்கேற்று இந்தியா மற்றும் தமிழ்நாட்டுக்கு புகழ் தேடித்தர வேண்டும் என பவானி தேவி அவர்களை, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழ்த்துகின்றேன்.

இராமநாதபுரம் தனியார் பள்ளியில் நடைபெற்ற அரசு நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர் ராஜகண்ணப்பன் – இந்திய முஸ்லீம் கட்சி எம்.பி நவாஸ் கனி ஆகியோரின் ஆதரவாளர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அவர்களை சமாதானம் செய்ய முயன்ற மாவட்ட ஆட்சியர் தள்ளிவிடப்பட்டதை வன்மையாக கண்டிக்கின்றேன். அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் பொது இடத்தில் மற்றவர்களுக்கு உதாரணமாக திகழவேண்டுமே தவிர, அவர்களது ஆதரவாளர்களைக் கொண்டு அநாகரிகமாக நடந்து கொள்வது நல்லதல்ல. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆகிய இருதரப்பினரின் ஆதரவாளர்கள் மீதும் குற்ற வழக்கு பதிவு செய்து, கடுமையான நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முடியும். அரசு விழாக்களில் கடந்த இரண்டு ஆண்டுகளில் அமைச்சர்கள் சிலர் அநாகரிகமாக நடந்து கொண்ட நிலையில் இப்போது நடந்திருப்பது அநாகரீகத்தின் உச்சமாகும். இனியும் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க முதலமைச்சர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றேன்.

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் முக்கிய வேளாண்மையான கொப்பரை தேங்காய்களை விவசாயிகளிடம் இருந்து தடையின்றி கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கு மாவட்டங்களில் உள்ள 71 அரசு கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து ஏப்ரல் மாதம் முதல் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் இலக்கு முடிந்து விட்டது என கூறி கொள்முதலை நிறுத்தி இருப்பது விவசாயிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வெளிச்சந்தையில் தேங்காய் விலை குறைந்த நிலையில் விவசாயிகள் அரசு கொள்முதல் நிலையங்களை மட்டுமே நம்பி இருக்கும் சூழலில் கொப்பரைத் தேங்காய் கொள்முதலை திடீரென நிறுத்தியது ஏற்புடையதல்ல. விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த கொப்பரை தேங்காயை சேமித்து வைக்கக் கூடிய வசதிகள் இல்லாத நிலையில், மூடப்பட்ட கொள்முதல் நிலையங்களை திறக்கவும், விவசாயிகளிடம் இருந்து ஆண்டு முழுவதும் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

ஈரோடு, திருப்பூா் மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கருக்கு மேல் பாசன வசதி பெறும் கீழ்பவானி பாசனக் கால்வாயை 709.60 கோடி ரூபாய் செலவில் கான்கிரீட் தளங்கள் அமைத்து நவீனமாக்க அரசு முடிவு செய்திருப்பதை எதிர்த்து அப்பகுதி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கீழ்பவானி பாசன கால்வாய் திட்டம் ஒரு மழைநீா் அறுவடை திட்டமாகவும், நிலத்தடிநீா் செறிவூட்டும் திட்டமாகவும் இருந்து வருவதால் நவீனப்படுத்துதல் என்ற பெயரில் கான்கிரீட் கரையும், தளமும் அமைக்கப்பட்டால் நிலத்தடி நீா் செறிவூட்டுதலில் சிக்கல் ஏற்படும் என அப்பகுதி விவசாயிகள் கருதுகின்றனர். இதனால் நிலத்தடி நீா்மட்டம் பாதிக்கபடுவதுடன் சாகுபடிக்கு தண்ணீா் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளதால், வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்துகின்றனர். விவசாயிகளின் எதிர்ப்பால் 2013ஆம் ஆண்டு இதயதெய்வம் அம்மா அவர்களின் ஆட்சியில் இந்த திட்டம் கைவிடப்பட்டது. ஆனால், விவசாயிகளின் எதிர்ப்பை கவனத்தில் கொள்ளாமல் கடந்த எடப்பாடி அரசு இந்த திட்டத்தை மேற்கொள்ள முனைந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இப்போது விடியா திமுக அரசும் விவசாயிகளின் எதிர்ப்பை மீறி இந்தத் திட்டத்தை செயல்படுத்த முயல்வது கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே பி.ஏ.பி. கால்வாய் திட்டம், முல்லைப் பெரியாறு பாசனத் திட்டத்தில் கான்கிரீட் கால்வாய் அமைத்தல் தோல்வியில் முடிந்துள்ள நிலையில், கீழ்பவானி பாசனக் கால்வாயை சீரமைக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.