இலங்கையின் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவருமான ஐயா இரா.சம்பந்தன் அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்திருக்கும் செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது. அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக இலங்கைத் தமிழர்களின் உரிமைக்காக குரல் எழுப்பி வந்த முதுபெரும் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களை இழந்துவாடும் உறவினர்களுக்கும், இலங்கைத் தமிழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

பொதுமக்களின் உயிரை காப்பாற்றுவதிலும், ஆரோக்கியத்தை பேணிக்காப்பதிலும் முக்கியப் பங்காற்றும் மருத்துவர்கள் அனைவருக்கும் எனது தேசிய மருத்துவர்கள் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கொடிய நோய்த்தொற்று காலத்திலும் தன்னலம் கருதாமல் ஓய்வின்றி உழைத்து மனித உயிர்களை காக்கும் அற்புதமான பணியை மேற்கொண்டு வரும் மருத்துவர்களின் தியாகத்தையும், சேவை மனப்பான்மையையும் போற்றி வணங்கிடும் இந்நாளில், தகுதிக்கேற்ற ஊதியம் கோரி நீண்டகாலம் போராடி வரும் மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

அரசு மருத்துவமனைகளில் இயங்கிவரும் அம்மா உணவங்களை மூட நிர்பந்திக்கும் மருத்துவமனை நிர்வாகங்களின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது – ஏழை, எளிய மக்களின் பசியைப் போக்கும் அட்சயப் பாத்திரமான அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். சென்னை ராஜிவ்காந்தி, எழும்பூர், ஸ்டான்லி, கீழ்பாக்கம் உள்ளிட்ட 7 அரசு மருத்துவமனைகளில் இயங்கிவரும் அம்மா உணவகங்களுக்கு குடிநீர் இணைப்பை துண்டித்து, அவற்றை நிரந்தரமாக மூடுவதற்கு மருத்துவமனை நிர்வாகங்கள் மறைமுக அழுத்தங்கள் கொடுப்பதாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. அரசு மருத்துவமனைகளை நாடிவரும் ஏழை நோயாளிகள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், அங்கு பணியாற்றும் தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் அம்மா உணவகங்களை மூட நிர்பந்திக்கும் மருத்துவமனை நிர்வாகங்களின் மனிதநேயமற்ற நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. ஏழை, எளிய மக்கள், உழைக்கும் தொழிலாளர்கள், ஆதரவற்ற முதியோர்கள் என பல்வேறு தரப்பினரின் பசியைப் போக்க தொலைநோக்கு சிந்தனையுடன் இதயதெய்வம் அம்மா அவர்கள் தொடங்கி வைத்த அம்மா உணவகங்களை மூட திமுக அரசு கொடுக்கும் மறைமுக அழுத்தங்கள் அப்பட்டமான அரசியல் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துகின்றன. எனவே, அண்டை மாநிலங்களுக்கும் முன்னோடித் திட்டமாக திகழும் அம்மா உணவகங்களை மூடும் நடவடிக்கையை உடனடியாக கைவிடுவதோடு, போதுமான நிதியை ஒதுக்கி ஏழை, எளிய மக்கள் தொடர்ந்து பயன்பெறும் வகையில் அவற்றின் உட்கட்டமைப்பு மற்றும் தரத்தை மேம்படுத்தி அனைத்து அம்மா உணவகங்களும் தொடர்ந்து இயங்குவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

விருதுநகர் அருகே தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 அப்பாவி தொழிலாளர்கள் உயிரிழப்பு – திமுக அரசின் மெத்தனப்போக்கால் அடுத்தடுத்து நிகழும் பட்டாசு ஆலை விபத்துக்களுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைப்பது எப்போது ? விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பந்துவார்பட்டியில் செயல்பட்டுவரும் தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பதாக வரும் செய்திகள் மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கின்றன. முறையான உரிமம் பெறாமலும், உரிய பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாமலும் இயங்கிவரும் பட்டாசு ஆலைகளில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுவதும், அங்கு பணியாற்றும் அப்பாவி தொழிலாளர்கள் தங்களின் உயிர்களை பறிகொடுப்பதும் தொடர்கதையாகி வருகிறது. பட்டாசு ஆலைகளில் ஒவ்வொரு முறை நிகழும் விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகளின் போது விபத்துகளுக்கான காரணங்களை கண்டறிந்து அதனை தடுக்க நடவடிக்கை எடுக்காமல், நிவாரண உதவி வழங்குவதோடு தன் கடமை நிறைவடைந்துவிட்டதாக கருதும் திமுக அரசின் மெத்தனப் போக்கே அடுத்தடுத்து விபத்துகள் நடைபெறுவதற்கு காரணம் என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே, தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் பட்டாசு ஆலைகளில் உரிய ஆய்வுகளை மேற்கொண்டு அனைத்து பாதுகாப்பு விதிகளும் முழுமையாகக் கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்வதோடு, இனிவரும் காலங்களில் பட்டாசு ஆலை விபத்துக்களை முற்றிலுமாக தவிர்க்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.