ஊர் ஊராக சென்று தற்பெருமை பேசுவதை நிறுத்திவிட்டு தேர்தலுக்கு முன்பு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முன்வர வேண்டும் – திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின் ஈர்க்கப்பட்ட முதலீடுகளையும், உருவான வேலைவாய்ப்புகளையும் வெள்ளை அறிக்கையாக வெளியிட முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தயாரா ? கள ஆய்வு எனும் பெயரில் பெரம்பலூர் மாவட்டத்திற்கு சென்றிருந்த முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், அங்கு நடைபெற்ற அரசு நிகழ்வு ஒன்றில் பேசும்போது, கடந்த மூன்று ஆண்டுகளில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் பத்துலட்சம் கோடி ரூபாய் அளவிற்கான முதலீடுகளை ஈர்த்திருப்பதாக கூறியிருப்பது வேடிக்கையானது. சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தொடங்கி சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின், அமெரிக்கா என பல்வேறு நாடுகளுக்கு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், சுற்றுப்பயணம் செய்து திரும்பி வந்தாரே தவிர, அந்த பயணத்தால் ஈர்க்கப்பட்டதாக கூறப்படும் முதலீடுகள் இன்று வரை வந்ததாக தெரியவில்லை. தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றபின் முதலீடுகளை ஈர்க்கவோ, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கவோ எந்தவித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்காமல், ஊர் ஊராக சென்று ஈர்க்காத முதலீடுகளை ஈர்த்ததாகவும், உருவாக்காத வேலைவாய்ப்புகளை உருவாக்கியதாகவும் பெருமை பேசி நாடகமாடுவது மக்களை ஏமாற்றும் செயலாகும். தேர்தலுக்கு முன்பாக நிறைவேற்ற முடியாத பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசிய திமுக, ஆட்சிக்கு வந்த பின்பு அதனை நிறைவேற்ற மறுப்பதோடு, இதயதெய்வம் அம்மா அவர்களின் மக்கள் நலத்திட்டங்களை முடக்கியும், பல்வேறு திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதையே வாடிக்கையாக கொண்டிருக்கிறது. தமிழகத்தில் வரிகளையும், கட்டணங்களையும் பன்மடங்கு உயர்த்தி மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வரும் திமுகவுக்கு எதிராக சாதாரண பொதுமக்கள் தொடங்கி விவசாயிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் என அனைத்து தரப்பினருமே வீதிக்கு வந்து போராடும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும், தமிழகத்தில் தலைவிரித்தாடும் வேலையில்லாத் திண்டாட்டத்தினால் எதிர்கால இளைய சமுதாயம், பட்டிதொட்டியெங்கும் பரவியிருக்கும் கஞ்சா உள்ளிட்ட கொடிய வகை போதைப் பொருட்களுக்கு அடிமையாகி தங்களின் விலை மதிப்பில்லாத எதிர்காலத்தை தொலைத்து வருவதாகவும் வெளியாகும் செய்திகள் மிகுந்த வேதனையளிக்கின்றன. எனவே, இனியும் வாக்கு அரசியலுக்காக மக்களை ஏமாற்றாமல், தேர்தலுக்கு முன்பாக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முன்வருவதோடு, திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றரை ஆண்டுகளில் ஈர்க்கப்பட்ட முதலீடுகளின் நிலை குறித்தும், உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் குறித்தும் விரிவான வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிகை மற்றும் ஊடகங்களில் நேர்மையாக, சுதந்திரமாக, மற்றும் நடுநிலையாக பணியாற்றுவோரை போற்றும் விதமாக கொண்டாடப்படும் தேசிய பத்திரிகை தினம் இன்று. நாகரிக வளர்ச்சிக்கேற்ப தம்மைத் தகவமைத்துக் கொண்டு மழை, வெயில், புயல் என அனைத்து பேரிடர் காலங்களிலும் துடிப்புடன் செய்திகளை சேகரித்து மக்களுக்கு வழங்கும் பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களின் சுதந்திரத்தையும், பத்திரிகையாளர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம்.

சமுதாயத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் காட்டுநாயக்கர் சமுதாய மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க மறுப்பதா ? – விளிம்பு நிலை மக்களின் கல்விக்கும் வேலைவாய்ப்பிற்கும், முன்னேற்றத்திற்கும் தடைபோடும் திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசித்து வரும் காட்டுநாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள், சாதி சான்றிதழ் வழங்கக் கோரி தங்கள் குழந்தைகளுடன் 8வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மதுரை மாவட்டத்தில் இயங்கிவரும் பல்வேறு பள்ளிகளில் படிக்கும் காட்டு நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களுக்கு கடந்த ஆண்டு வரை வழங்கப்பட்டு வந்த சாதி சான்றிதழ் நடப்பாண்டில் எந்தவித முன்னறிவிப்புமின்றி நிறுத்தப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காட்டுநாயக்கர் சமுதாய பிரதிநிதிகளை அழைத்துப் பேசுவதோடு, அனைத்து சமுதாயத்தினருக்கும் வழங்கப்படுவதை போல இவர்களுக்கும் சாதிச் சான்றிதழ் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என மதுரை மாவட்ட நிர்வாகத்தையும், திமுக அரசையும் வலியுறுத்துகிறேன்.

சென்னை வடபழனியில் பெண் போக்குவரத்து காவலர் மீது போதை ஆசாமி தாக்குதல் – காவலர்களுக்கே பாதுகாப்பில்லாத தமிழகத்தில் மக்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும் ? சென்னை வடபழனியில் பெண் வியாபாரி ஒருவரிடம் தகராறில் ஈடுபட்ட போதை ஆசாமியை தட்டிக் கேட்ட போது நடத்தப்பட்ட தாக்குதலில் பெண் போக்குவரத்து காவலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்தே பொதுமக்கள் தொடங்கி வியாபாரிகள், அரசு ஊழியர்கள், மருத்துவர்கள், காவலர்கள் என அனைத்து தரப்பினருக்குமே பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதை தற்போது நடைபெற்றிருக்கும் இந்த சம்பவம் மீண்டும் ஒருமுறை உறுதிபடுத்தியுள்ளது. தமிழகத்தில் பட்டிதொட்டியெங்கும் பரவியிருக்கும் கஞ்சா உள்ளிட்ட கொடியவகை போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலையும், சட்டவிரோதமாக 24 மணி நேரமும் நடைபெறும் மது விற்பனையையும் கட்டுப்படுத்த தவறிய திமுக அரசால், மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய காவலர்களின் பாதுகாப்பே கேள்விக்குறியாகியிருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, சென்னை வடபழனியில் போக்குவரத்து பெண் காவலரை தாக்கிய நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, தமிழகத்தில் நாள்தோறும் அதிகரித்து வரும் சட்டம் – ஒழுங்கு சீர்கேடுகளுக்கு அடிப்படையான கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனையை தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.