தேனி வடக்கு மாவட்ட இதயதெய்வம் அம்மா தொழிற்சங்கப் பேரவையின் இணைச் செயலாளர் திரு.சுரேஷ்குமார் அவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய திமுகவினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையைக் கேட்டுக் கொள்கிறேன். தேனி கான்வெண்ட் அருகே நேற்று இரவு தனியார் உணவகத்தில் வாகனத்தை நிறுத்திச் சென்ற திரு.சுரேஷ்குமார் அவர்களை திமுகவைச் சேர்ந்த சிலர் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கியதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். திரு.சுரேஷ்குமார் அவர்களைத் தாக்கிய திமுகவினர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, ஆளுங்கட்சி என்ற அராஜகப் போக்கில் செயல்படும் திமுகவினரை இதுபோன்ற செயல்களில் ஈடுபடாத வகையில் எச்சரிக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

கத்தார் மாஸ்டர் செஸ் தொடரின் 7வது சுற்றில் உலக சாம்பியனும், முதல்நிலை வீரருமான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி சாதனைப் படைத்திருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் கார்த்திகேயன் முரளி அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். செஸ் தொடரில் விஸ்வநாதன் ஆனந்த், ஹரிகிருஷ்ணன் ஆகியோரை தொடர்ந்து, கிளாசிக் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரரான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய மூன்றாவது இந்தியர் என்ற பெருமையை கார்த்திகேயன் முரளி பெற்றுள்ளார். 7 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில் முதலிடம் வகிக்கும் கார்த்திகேயன் முரளி எஞ்சிய சுற்றுகளிலும் வெற்றிபெற்று தாய்நாட்டிற்கு மென்மேலும் பெருமை சேர்க்க எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கருவறை அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்வதில் தொடங்கி அனைத்து விதமான ஆன்மீகப் பணிகளிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கி ஆன்மீக குருவாக திகழ்ந்தவரும், பக்தர்களால் பாசமாக ‘அம்மா’ என அழைக்கப்படுபவருமான மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீட நிறுவனர் பத்மஸ்ரீ பங்காரு அடிகளார் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. ஆன்மீகவாதிகளில் தனக்கென தனி இடத்தை வைத்திருந்த பங்காரு அடிகளார் அவர்களை இழந்து வாடும் உறவினர்களுக்கும் பக்தர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆன்மீகப் பணிகளோடு, மாணவர்களை நற்பண்புகளுடன் வளர்க்கக்கூடிய கல்வி, பொருளாதாரத்தில் பின் தங்கிய பொதுமக்களுக்கு தேவையான உதவிகள் என பங்காரு அடிகளார் அவர்கள் ஆற்றிய ஏராளமான தொண்டுகள் அவரின் புகழை என்றென்றும் பாடிக் கொண்டே இருக்கும்.

அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான மின் கட்டண குறைப்பு என்பது பொதுமக்களை மீண்டும் மீண்டும் ஏமாற்றும் செயல் –பொதுப் பயன்பாட்டுக்கான புதிய மின் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்து மீண்டும் பழைய நடைமுறையைக் கொண்டு வருவதே, மின்கட்டண உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தீர்வாக அமையும். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அடுக்குமாடி குடியிருப்புகளில் பொதுப் பயன்பாட்டிற்கான மின் இணைப்பிற்கு வழங்கப்பட்ட மின்கட்டண சலுகைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு புதிய மின் கட்டண உயர்வின் படி யூனிட் ஒன்றுக்கு 8 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டதால் மின் கட்டணம் பன்மடங்கு உயர்ந்து குடியிருப்புவாசிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். இந்த நிலையில், அடுக்குமாடி குடியிருப்புகளில் பத்து வீடுகள் அல்லது அதற்கு குறைவாகவும் இருக்கும் குடியிருப்புகள் மற்றும் மின் தூக்கி வசதியில்லாத குடியிருப்புகளுக்கு பொதுப் பயன்பாட்டிற்கான மின் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு 8 ரூபாயிலிருந்து 5 ரூபாய் 50 பைசாவாக குறைக்கப்படும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். மின் கட்டணத்தை உயர்த்தும் போது பன்மடங்கு உயர்த்திவிட்டு குறைக்கும் போது மட்டும் சொற்ப அளவிலேயே குறைப்பதா என அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் முதலமைச்சரை நோக்கி கேள்விகள் எழுப்புவதாக செய்திகள் வருகின்றன. ஏற்கனவே, உயர்த்தப்பட்ட மின்கட்டண உயர்வால் பாதிப்பைச் சந்தித்து வரும் பொதுமக்களை மீண்டும் ஏமாற்றாமல், புதிய மின் கட்டண முறையை முழுமையாக ரத்து செய்துவிட்டு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு முன்னர் இருந்த நடைமுறையைக் கொண்டு வருவதே தீர்வாக அமையும் என்பதை உணர்ந்து நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்திகிறேன்.

சிவகாசி அருகே இரு வேறு இடங்களில் ஏற்பட்ட பட்டாசு ஆலை விபத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்திருப்பதாக வரும் செய்தி வேதனை அளிக்கிறது. இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பட்டாசு ஆலைகளில் முறையான பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படாததே இது போன்ற விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்படுவதற்கான காரணம் என கூறப்படுகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பட்டாசு விபத்தில் இதுவரை 30க்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதைக் கவனத்தில் கொண்டு, தமிழக அரசு அனைத்து பட்டாசு ஆலைகளிலும் ஆய்வு மேற்கொண்டு, பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதோடு, பட்டாசு தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு விபத்து மற்றும் பணிப்பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

கட்டண உயர்வு, கமிஷன் தொகை குறைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஓலா, ஊபர், கால் டாக்சி ஓட்டுநர்கள் இரண்டாவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஓலா மற்றும் ஊபர் நிறுவனங்கள் வழங்கும் சம்பளத்தொகை போதுமானதாக இல்லை எனவும், நிறுவனங்கள் எடுத்துக் கொள்ளும் கமிஷன் தொகை அதிகமாக இருப்பதாகவும் கூறி ஆயிரக்கணக்கான ஓட்டுநர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், அச்செயலிகளை பயன்படுத்தி பயணம் மேற்கொண்டு வரும் பெரும்பாலானோர் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். மேலும் இந்த போராட்டத்தினால், இதர வாடகை வாகனங்களின் கட்டணமும் பன்மடங்கு உயர்ந்திருப்பதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே, முதலமைச்சரின் சுதந்திர தின உரையில் இடம்பெற்றிருந்த ஓலா, ஊபர் போன்ற நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்காக தனி நலவாரியம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை நடைமுறைப்படுத்துவதோடு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஓட்டுநர்களின் கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நிறைவேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.